ஃபேஷன், ஸ்டைல் போன்ற காரணங்களால் ஹை ஹீல்ஸ் என்பது கிட்டத்தட்ட எல்லாப் பெண்களின் ஆடையலங்காரத்தின் ஒரு பகுதியாகிவிட்டது. பிரபலமான பிராண்ட் செப்பலாக இருந்தாலும், மார்க்கெட்டில் வாங்கும் விலை குறைவான செப்பலாக இருந்தாலும், பெண்களுக்கு ஹை ஹீல்ஸ் இருக்க வேண்டும். அது அடங்காத ஒரு ஆசை! ஹை ஹீல்ஸ் அணிவதால் பார்க்க உயரமாகத் தோன்றுவீர்கள், நிமிர்ந்த தோற்றம் கிடைக்கும், நம்பிக்கை உணர்வு கிடைக்கும் ஆண்கள் மயங்கும் ஒரு செக்ஸியான அழகும் கிடைக்கும்.
ஆனால், அது உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்றாலும் அதை அணிந்தே ஆக வேண்டுமா? ஆம். ஹை ஹீல்ஸ் காலணிகள் அழகான ஆபத்து தான்! தொடர்ந்து அல்லது அடிக்கடி ஹை ஹீல்ஸ் அணிவது, உங்கள் பாதத்தையும் உடலையும் பல வழிகளில் சேதப்படுத்துகிறது.
அது எந்த அளவுக்கு கெடுதலானது? ஹீல்சால் என்னென்ன சேதங்கள் ஏற்படலாம் எனப் பார்க்கலாம்:
கணுக்காலில் சுளுக்கு (Sprained Ankles)
பொதுவாக ஹை ஹீல்ஸ் அணியும் ஒவ்வொரு பெண்ணுக்கும், என்றாவது ஒரு நாள் கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்ட அனுபவம் இருக்கும். சில சமயம் ஹீல்சுக்கும் உங்கள் பாதத்தின் குதிகாலுக்கும் இடையே உள்ள சமநிலை தவறி, உங்கள் முழு எடையையும் கணுக்கால் தாங்க வேண்டி வரும்போது சுளுக்கு ஏற்படலாம். நமது கணுக்கால்கள் அந்த அளவுக்கு அழுத்தத்தைத் தாங்குவதற்கேற்ப வடிவமைக்கப்பட்டவை அல்ல. இதனால் லேசாக சமநிலை இழந்து கணுக்கால் முறுக்கிக்கொண்டு சுளுக்கு பிடிக்கலாம். தசை நாண் கிழிந்துவிட்டால், இந்தப் பாதிப்பு மிகக் கடுமையாகவும் அதிக வலி தரக்கூடியதாகவும் இருக்கலாம். சரியாவதற்கும் அதிக நாட்கள் ஆகலாம்.
முதுகு வலி (Back Pain)
இதனால் ஏற்படும் மற்றொரு பொதுவான பிரச்சனை முதுகு வலியாகும். ஹீல்ஸ் அணியும்போது, உங்கள் உடலின் அமைப்பு நிலை (போஸ்) வழக்கத்திலிருந்து மாறுபடுகிறது. ஹீல்ஸ் அணிந்து நடக்கும்போது அல்லது நிற்கும்போது, உங்கள் கீழ் இடுப்புப் பகுதி முன்னோக்கி வளைகிறது, இதனால் உங்கள் அடி முதுகில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது, இதன் விளைவாக அடிமுதுகில் தீராத வலி ஏற்படலாம்.
அடிமுதுகு நரம்பு வலி (Sciatica)
நரம்பு சிக்கிக்கொண்டு பாதம் முதல் முதுகு வரை பொறுக்க முடியாத வலி ஏற்படுவதே அடிமுதுகு நரம்பு வலி எனப்படும். உங்கள் உடலின் புவியீர்ப்பு மையம் முன்னோக்கித் தள்ளப்படுகிறது, அதற்கு ஏற்ப உடலைச் சரிசெய்வதற்காக உங்கள் அடிமுதுகு வளைகிறது, இது உங்கள் முதுகுத் தண்டின் நிலையை மாற்றுவதால் நரம்புகளின் மீது அழுத்தம் ஏற்படுகிறது.
குதிநாண் சேதமடைதல் (Damaged Achilles Tendon)
அக்கிலீஸ் டென்டன் என்பது கெண்டைக்கால் தசையையும் குதிகால் எழுமையும் இணைக்கும் இணைப்புத் திசுவாகும். இது காலின் கீழ்ப் பின்பகுதியில் அமைந்துள்ளது. இது நெகிழ்தன்மை கொண்டது, ஆகவே நம்மால் பாதத்தை தரையில் படியும்படி வைக்கவும் முடிகிறது, விரல் நுனியில் நிற்கவும் முடிகிறது. ஹை ஹீல்ஸ் காலணிகளை அதிக நேரம் அணிந்திருப்பதால் இந்த இணைப்புத் திசு நிரந்தரமாக சிறியதாகி, இறுக்கமாகிவிடலாம். இது நடந்தால், உங்கள் பாதத்தை தரையில் படிய வைக்கும்போது அல்லது தட்டையான காலணிகளை அணிய முயற்சி செய்யும்போது, இந்த இணைப்புத் திசு நீட்டிக்கப்படும், இதனால் அழற்சி ஏற்பட்டு அதிக வலி ஏற்படும், இதனை டென்டினைட்டிஸ் என்பர்.
பெருவிரல் மூட்டு வடிவ மாற்றம், குதிகால் நகங்கள் உள்ளே வளர்வது மற்றும் கால் ஆணி (Bunions, Ingrown Toe Nails and Corns)
இயல்பாக நமது பாதத்தின் முனை சதுர வடிவம் கொண்டது. ஆனால், கிட்டத்தட்ட அனைத்து ஹை ஹீல்ஸ் காலணிகளும் கூர்மையான அல்லது வட்டமான முனை கொண்டவை. எனவே, நீங்கள் உங்கள் பாதங்களை அந்த வடிவத்திற்குள் பலவந்தமாகப் பொருத்தும்போது, கால் விரல்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. காலணிகளின் பக்கவாட்டில் இருந்தும் முனைப் பகுதியில் இருந்தும் அதிக அழுத்தத்தை கால் விரல்கள் தாங்க வேண்டியுள்ளது. இதன் விளைவாக:
பெருவிரல் மூட்டு வடிவ மாற்றம் – கால் பெருவிரலின் இணைப்பின் அடிப்பகுதியில் எலும்பு போன்ற வீக்கம். இதில் அழற்சி ஏற்பட்டு மிகுந்த வலியும் ஏற்படலாம்.
கால் ஆணி – தோல் மிகவும் தடித்து கடினமாதல். அதிக வலியும் இருக்கும்.
கால் விரல் நகங்கள் உள்ளே வளர்த்தல் – கால் விரல் நகங்கள் சதைக்குள்ளே வளர்வதால் மிகுந்த வலி ஏற்படும்.
அப்படியென்றால் ஹை ஹீல்சே அணியக்கூடாதா என்று நீங்கள் கவலைப்படுவது தெரிகிறது! கவலை வேண்டாம், எப்போதாவது அணிவதால் எந்தப் பிரச்சனையும் இல்லை!