மாறிவரும் உணவுப்பழக்கத்தால் உலகம் முழுவதிலும் உள்ள ஆண்களின் வீரியம் குறைந்து வருவதாக பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாகவே குழந்தையில்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்ற அதிர்ச்சித் தகவலையும் தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள்.
இன்றைய இளம் தலைமுறைகளில் பெரும்பாலோர் குழந்தை பெற்றுக்கொள்வதில் சிரமப்படுகின்றனர். இதற்குக் காரணம் தெரியாமல் பெரும்பாலோர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். உலகம் முழுவதும் குழந்தையில்லா தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
கடந்த 20 ஆண்டுகளாக, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களின் உயிரணுக்களை பரிசோதித்தனர். இதுகுறித்து இவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பெரும்பாலான ஆண்களுக்கு 7.36 கோடி உயிரணுக்கள் இருந்தன.ஆனால் தற்போதுள்ள ஆண்களில் 5 கோடிக்கும் குறைவான அணுக்களே உள்ளன என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, முன்பிருந்ததை விட 32 சதவிகிதத்திற்கும் அதிகமாக குறைந்து விட்டது. இதற்கு சுற்றுச்சூழலும் ஒரு காரணமாக கருதப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசுமைப் புரட்சி என்ற பெயரில் கண்ட கண்ட பூச்சி மருந்துகளை அடித்து நிலத்தை மலடாக்கி வருவதைப்போல அந்த நிலத்தில் விளையும் சத்து குறைவான உணவுகளை உண்டு இன்றைய இளம் தலைமுறையும் மலடாகி வருகிறது என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் கருத்தை உண்மை என்று நிரூபித்துள்ளது பிரெஞ்ச் விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவு.