Home ஆண்கள் விறைப்பின்மைப் பிரச்சனைக்கான சிகிச்சை

விறைப்பின்மைப் பிரச்சனைக்கான சிகிச்சை

49

விறைப்பின்மைப் பிரச்சனை உள்ள ஆண்களுக்கான சிகிச்சையில் ஆண்குறியில் பொருத்தப்படும் உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை பீனைல் ப்ரோஸ்தெசிஸ் என்றும் அழைப்பர். இவற்றில் ஆண்குறி விறைப்புக்கு உதவக்கூடிய வகையில், ஆண்குறியைச் சுற்றிக் கட்டக்கூடிய பேண்டேஜ் போன்றவையும் உள்ளன, ஆண்குறிக்குள் பொருத்தப்படும் விரிவடையச் செய்யக்கூடிய உபகரணங்களும் உள்ளன.

ஆண்குறிக்குள் உபகரணத்தை வைப்பதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும்.

யாருக்கு இவை பொருத்தப்படும்? (Who are the candidates for Penis implants?)

விறைப்பின்மைப் பிரச்சனை உள்ள பெரும்பாலான ஆண்களுக்கு, மருந்துகள் (வாய்வழி மருந்துகள் அல்லது ஆண்குறியில் ஊசி மூலம் மருந்துகள் செலுத்துதல் போன்ற முறைகள் பயன்படுத்தப்படும்) அல்லது பீனிஸ் பம்ப் (ஆண்குறிக்குள் விரிவடையச் செய்யப்படும் உபகரணம்) ஆகியவற்றைக் கொண்டே வெற்றிகரமாக சிகிச்சை அளிக்க முடியும்.

ஏதேனும் காரணங்களுக்காக பிற சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள முடியாத அல்லது பிற முறைகளைப் பயன்படுத்தி உடலுறவுக்குப் போதுமான அளவு விறைப்பைப் பெற முடியாத ஆண்களுக்கு இந்தப் பொருத்துக் கருவிகள் பயன்படும். விறைப்பின்மைக்கு நிச்சயமான மருத்துவக் காரணங்கள் ஏதேனும் இருக்கும்பட்சத்தில், பிற சிகிச்சை முறைகளால் பிரச்சனையை போதுமான அளவிற்கு சரிசெய்ய முடியாமல் போனால் அல்லது அதுவாகவே சரியாகாமல் போனால், இந்தக் கருவிகளைப் பொருத்துவது அவசியமாகலாம்.

பெய்ரோனி நோய் என்ற நோய் உள்ளவர்களுக்கு, ஆண்குறியில் வடுக்கள் ஏற்பட்டிருக்கும், இதனால் ஆண்குறி வளைந்து காணப்படும்.இன்னும் சிலருக்கு அல்லது பெய்ரோனி நோய் உள்ளவர்களுக்கு, ஆண்குறியின் இந்தக் குறைகளைச் சரிசெய்து ஆண்குறியின் வளைவைச் சரிசெய்ய இந்தக் கருவிகளைப் பொருத்தலாம்.

இவை எப்படிப் பொருத்தப்படுகின்றன? (How do Penis implants work?)

பகுதியளவு உறுதியான உபகரணங்கள்

இவை சிலிக்கானால் மூடப்பட்ட, ஆண்குறியைச் சுற்றிக் கட்டக்கூடிய (பேண்டேஜ் போன்ற) பொருளால் ஆனவை. உள்ளிருக்கும் உலோகப் பகுதி ஆணுறுப்பை உடலுறவின்போது பெண்ணுறுப்புக்குள் நுழைக்கப் போதுமான அளவுக்கு உறுதியாக்குகிறது. பகுதியளவு உறுதியான இந்த உபகரணம் ஆண்குறிக்குள் பொருத்தப்பட்ட பிறகு, உடலுறவின்போது மேல்நோக்கி வளைகிறது, பிறகு சாதாரண நேரத்தில் பின்னோக்கி வளைந்து மீண்டும் பழைய நிலையை அடைகிறது. இவை எளிதான உபகரணங்களாகும், மேலும் இவை மற்ற உபகரணங்களை விட செலவும் குறைவானவை.

பகுதியளவு உறுதியான இந்தக் கருவிகளைப் பொருத்துவதில் ஒரு பின்னடைவு உள்ளது. ஆணுறுப்பு எப்போதுமே சிறிது விறைத்த நிலையிலேயே இருக்கும், சில வகை ஆடைகளை அணியும்போது அவற்றை மறைப்பதே கடினமாக இருக்கும். பல ஆண்கள், பகுதியளவு உறுதியான உபகரணங்களை விட விரிவடையச் செய்யக்கூடிய உபகரணங்களையே விரும்புகின்றனர்.

விரிவடையச் செய்யக்கூடிய உபகரணங்கள் (Inflatable implants)

இவை 3 பகுதிகள் அல்லது 2 பகுதிகள் கொண்ட உபகரணங்களாக வருகின்றன.

3 பகுதிகள் கொண்ட உபகரணம்: இவற்றில் இரண்டு உருளைகள் ஒரு சிறிய சேமிப்பு அறையுடன் இணைக்கப்பட்டிருக்கும், இந்த அறையில் உப்புக் கரைசல் இருக்கும் (சோடியம் குளோரைடும் காய்ச்சி வடித்த நீரும் கலந்த கலவை). இந்த அறைப் பகுதியானது அடிவயிற்றுத் தோலுக்கு அடியில் பொருத்தப்படும். இந்த உருளைகளே ஆண்குறிக்குள் செலுத்தப்படும். இவற்றுடன் ஒரு பம்ப் இருக்கும். இந்த பம்ப் விதைப்பைகளின் தளர்வான தோளுக்கு அடியில் பொருத்தப்படும்.
2 பகுதிகள் கொண்ட உபகரணம்: இவற்றில் உருளைகள் (ஆண்குறிக்குள் பொருத்தப்படும்) இருக்கும். சேமிப்பு அறைப் பகுதியும் ஒரு பம்பும் ஒன்றாக இணைந்த ஒரே அலகு விதைப்பைக்குள் பொருத்தப்படும்.

இவற்றைப் பொருத்திக்கொண்ட நபர் உடலுறவில் ஈடுபட விரும்பும்போது, அந்த பம்ப்பை அழுத்த வேண்டும், அப்போது அந்த உபகரணம் விரிவடைந்து ஆண்குறி விறைக்கும். இந்த பம்ப்பை அழுத்தும்போது, சேமிப்பு அறைப்பகுதியில் இருந்து உப்புக் கரைசல் உருளைகளுக்குள் பாயும், இதனால் ஆண்குறி விரிவடைந்து விறைக்கும். உடலுறவில் ஈடுபட்ட பிறகு, பம்புக்கு அடியில் இருக்கும், காற்றை வெளியேற்றும் வால்வை அழுத்த வேண்டும், அப்போது உருளைகளில் இருக்கும் உப்புக் கரைசல் மீண்டும் சேமிப்பு அறைப் பகுதிக்கு வரும். இதனால் ஆண்குறி மீண்டும் தளர்ந்த நிலையை அடையும்.

விரிவடையச் செய்யக்கூடிய உபகரணங்கள் ஆண்குறியின் வெளிப்பகுதியை விரிவடையச் செய்து, உறுதியாக இருக்கும் விறைத்த உணர்வை அளிக்கும், இதனால் ஆண்குறி பெரிதானதுபோலவும் தோன்றும் (இது உள்ளே பொருத்தப்பட்டிருக்கும் உபகரண மாடலைப் பொறுத்தது).

இவற்றில் உள்ள பின்னடைவுகள்: ஒவ்வொரு முறையும் இவற்றை விரிவடையச் செய்வதற்கும், மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பச் செய்யவும் நீங்களாகவே பம்ப்பை இயக்க வேண்டியிருக்கும். இது சிலருக்கு அசௌகரியமாக இருக்கலாம். சில சமயம் உபகரணம் சரியாக வேலை செய்யாமல் போகலாம், இதனால் விறைப்பதிலோ மீண்டும் பழைய நிலைக்கு வருவதிலோ பிரச்சனைகள் ஏற்படலாம். சிலவற்றில், தானாகவே விரிவடையும் வசதி இருக்கும், அவை தானாகவே விரிவடையும். அரிதாக சில சமயம், சேமிப்பு அறையில் இருக்கும் கரைசல் தோலின் வழியே கசிந்துவிடலாம் அல்லது உடைந்துவிடலாம். அப்படி நடந்தால் அதைச் சரிசெய்ய அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரலாம்.

இவை எந்த அளவுக்குப் பலன் கொடுக்கக்கூடியவை? (What is the effectiveness of these implants?)

விரிவடையச் செய்யக்கூடிய உபகரணங்களைப் பொருத்துபவர்களுக்கு, சிகிச்சையின் வெற்றி வாய்ப்பு 90-95% (உடலுறவுக்குப் போதுமான ஆண்குறி விறைப்பைப் பெரும் ஆண்களின் விகிதம்) இருக்கிறது.

விரிவடையச் செய்யக்கூடிய உபகரணங்களைப் பொருத்திக்கொள்ளும் ஆண்களில், 80-90% பேர் திருப்திகரமான பலன்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த உபகரணங்களைப் பொருத்திக்கொண்டு உடலுறவில் ஈடுபடுவது எப்படி இருக்கும்? (How does the sex feel like with a penile implant?)

உள்ளே பொருத்தப்பட்டிருக்கும் உபகரணம் விரிவடைந்தபிறகு, ஆண்குறியானது இயற்கையாக விரிவடைந்து பெரிதானதைப் போலவே பெரிதாகவும் உறுதியாகவும் மாறும். இவற்றில் சில மாடல்கள் ஆண்குறியை (விறைத்த நிலையில் இயல்பை விட) சற்று அதிக நீளமாக்கும். ஆண்குறியின் தலைப்பகுதி (மொட்டு) இயல்பான விறைப்பின்போது பெரிதாவதைப் போல, விரிவடைந்து இருக்காது.

ஆண்குறியின் தோலில் உணர்திறன் அல்லது புணர்ச்சிப் பரவசநிலையை அடையக்கூடிய திறன் இந்த உபகரணத்தால் தக்கவைக்கப்படும். சில ஆண்களுக்கு, இந்த உபகரணம் பொருத்தப்பட்ட பிறகு, இயற்கையான விறைப்படையும் அனிச்சைத் திறன் இழக்கப்பட்டுவிடலாம். அவர்களுக்கு உபகரணம் விரிவடையும்போது மட்டுமே விறைப்பு ஏற்படும், மீண்டும் உபகரணத்தை அகற்றினால், அதன் பிறகு இயற்கையாக அவர்களுக்கு விறைப்பு ஏற்படாது.

இவற்றைப் பொருத்துவதால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் (What are the adverse effects with penile implants?)

பிற அறுவை சிகிச்சைகளைப் போலவே, இந்த அறுவை சிகிச்சை செய்யும்போது இரத்தக் கசிவு, நோய்த்தொற்று போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

பிற சாத்தியமுள்ள சிக்கல்கள்:

ஆண்குறியில் வடுத் திசு உருவாகலாம்
பொருத்தப்படும் உபகரணம் அரிக்கப்பட்டுவிடலாம்
பம்ப் அல்லது சேமிப்பு அறைப் பகுதி பொருந்தியிருக்கும் இடம்/நிலை மாறிவிடலாம்
உபகரணம் செயல்படுவதில் தோல்வியடையலாம்
தேவையற்ற நேரத்தில் உபகரணம் தானாகவே விரிவடைந்து அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்