‘கொலை செஞ்சாக்கூட ஒத்துக்குடுவாய்ங்கெ. — விட்டா ஒத்துக்கிட மாட்டாய்ங்கெ…’ – இது தென் தமிழக கிராமங்களில் பிரபலமான பழமொழி.
வீட்டில் ஏதோ விசேஷம்… உறவினர்களும் நண்பர்களும் நிரம்பிய தருணம்… ‘அப்பா பாம் போட்டுட்டாரு!’ என்று ஏதோ ஒரு வாண்டு கிளப்பிவிட, குறும்புச் சிரிப்பு அலையென அறையெங்கும் எழும்பும்… சம்பந்தப்பட்டவரோ குறுகி நிற்பார்.
தமிழ்த் திரைப்படங்களில் மட்டுமல்ல… பிரபல ஹாலிவுட் படங்களிலேயே கூட ‘வாயுத் தொல்லை’ கண்ணுக்குத் தெரியாத கதாபாத்திரமாக வலம் வந்து கலகலப்பையோ முகச்சுளிப்பையோ ஏற்படுத்தியிருக்கிறது.
ஏப்பமாக இருந்தாலும் சரி… யாருமற்ற தனி இடத்துக்குப் போய் பிரியச் செய்கிற வாயுவானாலும் சரி… எல்லோருக்கும் அது தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் ஒரு பிரச்னையே! ‘‘ஏழு பேர் டாக்டர்கிட்ட ஏதோ ஒரு பிரச்னைக்குப் போறாங்கன்னா அவங்கள்ல 2 பேருக்கு வாயுத் தொல்லை இருக்கும்’’ என்று சொல்லி அதிர வைக்கிறார் குடல் மருத்துவர் ஏ.ஆர்.வெங்கடேஸ்வரன். ஒருவருக்கு வாயுத் தொல்லை ஏன் ஏற்படுகிறது என்பதையும் விளக்குகிறார் டாக்டர் வெங்கடேஸ்வரன்… ‘‘ரொம்ப எளிமையா இந்த விஷயத்தைச் சொல்ல லாம். நாம சாப்பிடுற உணவு உணவுக் குழாய்க்குப் போய், அதுலருந்து வயிற்றுக்குப் போகுது.
அதாவது, இரைப்பைக்குப் போய், அப்புறம் மெல்ல மெல்ல ஜீரணமாகுது. உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் நடுவுல ஒரு வால்வு இருக்கும். அந்த வால்வு எப்பவும் மூடியே இருக்கும். உணவு வரும்போது மட்டும் திறந்து உள்வாங்கிக்கும். இப்படி முறையா நடந்தா பிரச்னை இல்லை. அந்த வால்வு திறந்திருக்கறதாலதான் வாயுத் தொல்லை ஏற்படுது…’’
வாயுத் தொல்லை வேறு என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும்?
‘‘கீழே விழுந்து சின்னதா சிராய்ப்பு ஏற்படுது. கவனிக்காம விட்டுட்டா பெரிய புண்ணாகிடும் இல்லையா? அது மாதிரி தான் இந்தப் பிரச்னையும். தகுந்த சிகிச்சை எடுக்கலைன்னா கஷ்டம். நாம சாப்பிடுற உணவு ஜீரணமாகுறதுக்கு வயிற்றுக்குள்ளேயே ஒரு ஆசிட் சுரக்கும். வால்வு திறந்திருந்தா ஆசிட் வெளியில வந்து நெஞ்செரிச்சல் உண்டாகும். அதுவே கொஞ்சம் கொஞ்சமா அல்சரா மாறிடும். அப்புறம் ரணமா உருமாறும். இந்த சிக்கலான வாயுப் பிரச்னையை ‘ஜெர்டு’ன்னு (GERD -Gastroesophageal reflex disease) மருத்துவத்துல குறிப்பிடுவோம். இந்தப் பிரச்னை உள்ளவங்க உடனே சிகிச்சை எடுத்துக்கறது நல்லது.’’
யார் யாருக்கெல்லாம் ஏற்படலாம்?
‘‘இது ஒரு பொதுவான பிரச்னை. பருமன் பிரச்னை உள்ளவங்களுக்கு வரும். ஆஸ்துமா நோயாளிகள் அதற்கான மருந்து எடுத்துக்கறதால அவங்களுக்கு ஏற்படும். தொடர்ந்து வேற வேற பிரச்னைகளுக்கு மாத்திரை சாப்பிடுறவங்களுக்கும் வரலாம். இதெல்லாம் இல்லாதவங்களுக்கும் வரலாம். நம்ம வாழ்க்கை முறையும் முக்கியமான காரணம். இப்பல்லாம் நம்மள்ல நிறையபேர் அதிக தூரம் நடக்கறதில்லை… ஏ.சி.யில, கம்ப்யூட்டர் முன்னாடி 12 மணி நேரம் உட்கார்ந்து வேலை பார்த்துட்டு பீட்சா, சமோசான்னு கண்டதை சாப்பிடுறோம்… இதெல்லாம்தான் இந்தப் பிரச்னைக்கு முக்கியக் காரணங்கள்…’’
தவிர்ப்பது எப்படி?
‘‘சாப்பிட்டதும் குறைந்தது ஒன்றரை மணி நேரம் கழிச்சுத்தான் படுக்கணும். அப்பத்தான் உணவு ஜீரணமாகறதுக்கு உடலுக்கு அவகாசம் கிடைக்கும். இரவில் எண்ணெய் உணவுகள், சாக்லெட், புரோட்டா, ஐஸ்க்ரீம் போன்றவற்றை தவிர்த்துடணும். அசைவ உணவுகளைக் குறைக்கணும். எண்ணெய் அதிகம் சேர்க்காத இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பம் போன்ற டிபன் வகைகளை காலையிலும் இரவிலும் சேர்த்துக் கொள்ளலாம். பருப்பு வகைகள், மொச்சை போன்றவற்றை கொஞ்சம் தவிர்க்கலாம்.
ரெகுலரா வாக்கிங் போறது, உடலுக்கு வேலை கொடுப்பது, உடற்பயிற்சி செய்வது, உடலைப் பருமனாக்காத – அதே நேரம் நம் உடலுக்கு வலு சேர்க்கும் சரிவிகித உணவு களை சாப்பிடுவது… இவையெல்லாம் இந்தப் பிரச்னை வராமல் தவிர்த்துவிடும். வாயுத் தொல்லை அதிகம் உள்ளவர்கள் கண்டிப்பாக சிகிச்சை எடுத்துக்கணும். தொடர்ந்து மாத்திரை எடுத்துக் கொண்டால் குணம் பெறலாம். மாத்திரையால் குணப்படுத்த முடியாத அளவுக்கு இந்தப் பிரச்னை பெரியதாகிட்டா அறுவை சிகிச்சை அளவுக்குப் போகவும் வாய்ப்பிருக்கு…’’
வாயுத் தொல்லை உள்ளவர்களின் வாரிசுகளுக்கும் இது ஏற்படுமா?
‘‘நிச்சயமா இல்லை. அதற்கான வாய்ப்பு ரொம்ப ரொம்பக் குறைவு…’’
புளிச்ச ஏப்பத்திலிருந்து வாயுத் தொல்லை வரை சோடா குடித்தால் நிவாரணம் கிடைக்கும் என்கிறார்களே… உண்மையா?
‘‘தவறு… அப்படியெல்லாம் நடக்காது. சோடா வாயுப் பிரச்னையைத் தீர்க்கும் என்பது ஒரு மனப்பிரமையே தவிர வேறொன்றுமில்லை. வாயுத் தொல்லையா? உடனே மருத்துவரை அணுகுங்கள்… அதுதான் உடம்புக்கு நல்லது!’’