சர்க்கரை நோயா? குணமாக்க முடியாது; கட்டுப்படுத்தலாம்… ஆனால் சாகும் வரை மருத்துவம் பார்க்க வேண்டும்…
இரத்த அழுத்தமா? குணமாக்க முடியாது; கட்டுப்பாட்டில் வைக்கலாம். அதற்குத் தினந்தோறும் மருந்துகளை நிறுத்ததாமல் சாப்பிட வேண்டும்.
ஆஸ்துமாவா? குணமாக்க முடியாது; அதன் தீவிரத்தை வேண்டுமானால் குறைக்க முடியும். ஆனால் இறுதி மூச்சு நிற்கும் வரை மருந்துகளின் துணையோடுதான்…..
மூட்டுவலி, இடுப்பு வலி, தலைவலி, புற்று நோய், என்று எந்த நோய் வந்தாலும் குணமாதல் என்பது இன்று பொய்யாகிப் போனது. அலோபதி மருத்துவமோ, ஹோமியோபதி மருத்துவமோ, சித்த மருத்துவமோ அல்லது ஆயுர் வேதமோ எதுவாக இருந்தாலும் வாழ்நாள் முழுவதும் மருத்துவம் பார்க்கும் பரிதாப நிலைக்கு வந்துவிட்டோம்.
இந்த நிலைக்குக் காரணம் மருத்துவ முறைகள்தான் என்று குறை கூறும் முன்னர் முதலில் உங்களை நீங்கள் சரிசெய்து கொள்ளுங்கள். நோய் வருவதற்கும், நோய் உடலில் தங்கி நாட்பட்ட நோயாக மாறுவதற்கும், பின்னர் அதுவே கொடுநோயாக மாறுவதற்கும் காரணம் நீங்கள்தான். உங்களை நீங்கள் சரி செய்யாமல் எந்த வைத்தியம் பார்த்தாலும் நோய் குணமாகாது.
என்றைக்குப் பசியை உணராமல் கடிகாரத்தில் மணி பார்த்துச் சாப்பிட ஆரம்பித்தீர்களோ, அன்றைக்கே நீங்கள் சர்க்கரை நோயாளி ஆகிவிட்டீர்கள். பசி என்ற உணர்வே எச்சிலைச் சுரக்க வைக்கும், எச்சில் சுரந்தால்தான் வயிற்றில் ஜீரண நீர்கள் சுரக்கும், ஜீரணம் நன்றாக நடைபெறும். கணையமும் நன்கு வேலை செய்யும். கணையம் நன்கு வேலை செய்தால்தான் இன்சுலின் சுரக்கும். இன்சுலின் சுரந்தால்தான் உடலானது சக்தியை நன்கு பயன்படுத்த முடியும்.