“மெனோபாஸுக்கு முன்பு பல வருடங்களாகவே பெண் உடல் அதற்குத் தயாராகும். 52 வயதில் நிகழவிருக்கும் மெனோபாஸுக்கான உடல் ஏற்பாடு, 45 வயதில் இருந்தே தொடங்கிவிடலாம். அந்தக் காலகட்டத்தில் (Perimenopause) அவர்கள் மனநலம் சார்ந்த பிரச்சனைகளை அதிகம் எதிர்கொள்ள நேரிடும்.
திருப்தியான வாழ்க்கை அமையாதவர்கள், கணவன் மற்றும் குழந்தைகளிடம் உள்ள பந்தத்தில் குழப்பம் உள்ளவர்கள், உடல்ரீதியாக, மனரீதியாக, வயதின் காரணமாக, பணம் மற்றும் நோய் காரணமாக தங்கள் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய முடியாத நிலையில் உள்ளவர்கள், குழந்தைகளிடமிருந்து விலகியிருப்பவர்கள் போன்றோருக்கு மனநலம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகம்.
மெனோபாஸ் சமயத்தில் பல பெண்களுக்கு, திடீரென உடல் கதகதப்பாவது அல்லது சூடாவது (Hot Flushes), இனம்புரியாத மன அழுத்தம், விரைவில் எரிச்சலடைவது, சலிப்பு, தன்னைப் பற்றிய தாழ்வான எண்ணங்கள், நம்பிக்கைக் குறைவு, அழுகை போன்ற உணர்வுகள் ஏற்படலாம். இதை மெனோபாஸ் சிண்ட்ரோம் (menopause syndrome) என்போம்.
தீர்வுகள் :
முதலில், இது எல்லாப் பெண்களுக்கும் ஏற்படும் பிரச்சனைதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரே வயதுள்ள பெண்களோடு கலந்துபேசி, அனைவரும் எதிர்கொள்ள நேரிடும் அறிகுறிகள், பிரச்சனைகளைப் பகிர்ந்துகொண்டால் தேவையற்ற பதற்றத்தைக் குறைக்கலாம்.
உடற்பயிற்சி, ஊட்டச்சத்துள்ள உணவுகள் என வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு எலும்புத் தேய்மானம், புற்றுநோய், பெண் உறுப்பில் ஈரப்பதம் குறைதல் ஆகியவை ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படலாம் என்பதால், ஹார்மோன் சிகிச்சை (Hormone Replacement Treatment) ஒரு சிலருக்குத் தேவைப்படலாம்.
பதற்றம், மன அழுத்தத்துக்கு மனநல ஆலோசகர், மனநல மருத்துவரிடம் கவுன்சலிங் மற்றும் சிகிச்சை பெறலாம்.
தன்னைப் பற்றிய, தன் உடலமைப்பு குறித்த எண்ணங்களை ஆக்கபூர்வமாக, நேர்மறையாக மாற்றுவது முக்கியம்.
உடல்நிலை, மனநிலை குறித்த அச்சம் தவிர்த்து, தனக்குப் பிடித்த செயல்களில் மனதைச் செலுத்துவது நல்லது.