Home ஆரோக்கியம் மூன்று வாரங்களுக்கு மேல் நெஞ்சு எரிச்சலா? புற்றுநோயாக இருக்கலாம்

மூன்று வாரங்களுக்கு மேல் நெஞ்சு எரிச்சலா? புற்றுநோயாக இருக்கலாம்

25

“புற்றுநோய் குறித்து தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள்” என்ற தலைப்பில் தேசிய விழிப்புணர்வு பிரச்சாரம் கடந்த 4 ஆம் திகதி பிரித்தானியாவில் தொடங்கப்பட்டது.
இதில், மூன்று வாரங்கள் அல்லது மூன்று வாரங்களுக்கும் அதிகமாக தொடர் நெஞ்சு எரிச்சல் இருந்தால், அது உணவுக்குழாய் அல்லது வயிற்று புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்பதை மக்களிடையே வலியுறுத்தி பிரச்சாரம் நடத்தப்பட்டது.

பிரித்தானியா பொது சுகாதார அமைப்பு நடத்திய சமீபத்திய ஆய்வில், மூன்று வாரங்களுக்கு மேல் தொடர் நெஞ்சு எரிச்சல் உள்ளவர்களில் இரண்டு பேரில் ஒரு நபர் தான் (55 சதவிகிதத்தினர்) மருத்துவமனைக்கு செல்வதாக வந்த தகவலை தொடர்ந்து இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் உணவுக்குழாய் அல்லது வயிற்று புற்றுநோய்க்கான சிகிச்சைகள் கடினமானதோடு மட்டுமல்லாமல், அதில் வெற்றி வாய்ப்பு என்பது மிகக் குறைந்த அளவே இருந்துள்ளது.

உணவுக்குழாய் மற்றும் வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 67 சதவிகிதத்தினர் ஆரம்பக்கட்டத்திலேயே சிகிச்சையை மேற்கொள்வதால் அவர்களால் 5 வருடங்கள் வரை உயிர் வாழ முடியும்.

ஆனால் சிகிச்சையை காலம் தாழ்த்தி மேற்கொள்வதால் இது தற்போது 3 சதவிகிதமாக குறைந்துள்ளது.

இந்த ஆய்வின் படி, நெஞ்சு எரிச்சலால் பாதிக்கப்பட்ட 59 சதவிகித நபர்களுக்கு அது புற்று நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்பது தெரியவில்லை என்றும் 15 சதவிகிதத்தினர் நெஞ்சு எரிச்சல் புற்றுநோயிற்கான அறிகுறி தான் என உறுதியாக நம்பியதாக தெரியவந்துள்ளது.

Clatterbridge Cancer Centre NHS Trust மருத்துவனையை சேர்ந்த புற்றுநோய் ஆலோசகர் டாக்டர். சின்னமணி ஈஸ்வர் கூறுகையில், தென் ஆசிய கலாசாரத்தின்படி, பெரும்பான்மையான மக்கள் காரசாரமான உணவுகள் உண்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் என்றும் அதனால் உண்டாகும் நெஞ்சு எரிச்சலை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும், மூன்று வாரங்களுக்கு அதிகமாக தொடர் நெஞ்சு எரிச்சல் இருந்தால், அது உணவுக்குழாய் அல்லது வயிற்று புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். நீங்கள் மருத்துவரை சந்திப்பதால் அவருடைய நேரம் எதுவும் பாதிக்கப்படாது.

மருத்துவரை சந்திப்பதால் அது புற்று நோயிற்கான அறிகுறி இல்லை என்பது தெளிவாகும் அல்லது அது புற்று நோயாக இருந்தால், அதற்குரிய சிகிச்சையை ஆரம்பக்கட்டத்திலேயே மேற்கொண்டு அதிலிருந்து வெற்றிகரமாக விடுபட ஒரு வாய்ப்பாக அமையும்.

மேலும், உணவை விழுங்குவதில் உள்ள பிரச்சனைகள் குறித்தும், அதன் அறிகுறிகள் குறித்தும் இந்த பிரச்சாரத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஆய்வின் படி, சுமார் 70 சதவிகித நபர்களுக்கு உணவை விழுங்கும்போது தொண்டையில் ஏற்படும் வலி, உறுத்தல்கள் கூட புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்பது தெரிந்திருக்கவில்லை என்றும் அவர்களில் 13 சதவிகிதத்தினர் அது புற்றுநோயிற்கான அறிகுறியாக இருக்கலாம் என உறுதியாக நம்பியதாக தெரியவந்துள்ளது.

உணவுக்குழாய் மற்றும் வயிற்று புற்றுநோயால் உயிர் வாழும் நபர்களின் விகிதாச்சாரம் ஐரோப்பிய நாடுகளில் மிகச்சரியாக பொருந்தினால், இங்கிலாந்தில் சுமார் 950 நபர்களை ஒவ்வொரு வருடமும் காப்பாற்றலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து நாடுகளில் உள்ள ஆண்களுக்கு உணவுக்குழாய் புற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவும், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பெண்களுக்கு உணவுக்குழாய் புற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

புகைப்பிடிப்பது, மது அருந்துவது மற்றும் பழங்கள், காய்கறிகளை குறைவாக உணவில் சேர்த்துக்கொள்வது உள்ளிட்டவைகள் உடல்பருமனை அதிகரிப்பதுடன் உணவுக்குழாய் மற்றும் வயிற்று புற்று நோயை உண்டாக்குகிறது.

உணவுக்குழாய் மற்றும் வயிற்று புற்றுநோயால் பாதித்தவர்களில் 10 பேரில் 9 நபர்கள் 50 வயதிற்கு மேல் உள்ளதால் அந்த வயதுக்குரிய நபர்களிடம் தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பிரித்தானியா சுகாதார மருத்துவ அமைப்பை சேர்ந்த சுகாதார மற்றும் மக்கள் நலத்துறை தேசிய இயக்குனரான பேராசிரியர் கெவின் ஃபெண்டன் கூறுகையில், ‘தொடர் நெஞ்சு எரிச்சல் குறித்து மருத்துவரிடம் செல்ல பெரும்பாலான மக்கள் தயக்கம் காட்டுவதாகவும், அது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் என தெரியாமலே வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தென் ஆசியா நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் தங்களுடைய மதம், கலாசாரம், மொழிகளை அடிப்படையாக கொண்டு அவற்றிற்கு கட்டுப்பட்டு ஆரம்பக்கட்டத்திலேயே மருத்துவர்களை நாடுவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அதனால் விரைவில் மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளுமாறு சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதே இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.