Home காமசூத்ரா முதல் நாள் இரவு.

முதல் நாள் இரவு.

116

தாம்பத்தியத்தின் முக்கிய கட்டமாகிய அந்தரங்கம் பற்றியது தான் இனி வரும் பதிவுகள். நான் ஏற்கனவே சொன்னது போல் பல குடும்பங்களின் தலைஎழுத்து அங்கே நடக்கும் விவகாரங்களை வைத்து தான் எழுதபடுகிறது என்றால் மிகையில்லை. ஆனால் பல குடும்பங்களிலும் இதை ஒரு பொருட்டாகவே நினைப்பது இல்லை.
இதைவிட முக்கியம் வேறு ஒன்றும் இல்லையா என்பதே…? முக்கியமானதில், இதுவும் ஒன்று அவ்வளவுதான். ‘பல ஊடலும் சரியாவது, கூடலில் தான்’ அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை ஏனோ பலரும் சரிவர கையாளுவது இல்லை. ஒரு கணவன், மனைவி ஆகிய இருவரின் புரிதல் அங்கிருந்தே தொடங்குகிறது…

முதல் நாள் இரவு.
சாந்தி முகூர்த்தம் என்றால் ” காதலில் துடித்துக்கொண்டிருந்த உள்ளம், ஆசைகளை அடக்கிக் கொண்டிருந்த உடம்பு அன்றைக்கு சாந்தி அடைகிறது ” என்பது தான் அதன் அர்த்தம் என்று பெரியவர்கள் சொல்வார்கள்

ஆனால் முதல் நாளே நடந்துதான் ஆகவேண்டுமா என்பதுதான் இப்போதைய காலகட்டத்தில் கொஞ்சம் சரியா தெரியவில்லை.

இருவேறு கலாசாரம், குடும்ப சூழ்நிலையில் பிறந்து வளர்ந்த ஆண், பெண் இருவரையும் திருமணம் என்ற பந்தம் இணைக்கிறது என்பது அற்புதமான ஒரு நிகழ்வு. மாறுபட்ட எண்ணங்கள், வேறுபட்ட உணர்வுகள் என்று வளர்ந்த இருவரையும் அந்த ஒரு நாள் இணைக்கிறது. ஒருவருடைய விருப்பு, வெறுப்பு என்னவென்று மற்றொருவருக்கு அந்த ஒரு நாளில் எப்படி தெரிந்துக்கொள்ள முடியும். அப்படி எதையும் தெரிந்து கொள்ளாமல் புரிந்து கொள்ளாமல், உணர்வுகள் கலக்காமல் வெறும் இரு உடல்கள் மட்டும் கலப்பது என்பது ஒரு வித ஆர்வகோளாரில் கொண்டுபோய் விட்டு விடுகிறது …??

தவிரவும் பல வருடங்களாக ஒன்றாக வாழ்ந்த தம்பதிகள் கூட இன்னும் ஒருவரின் ஆசைகள், தேவைகள், எண்ணங்கள் என்ன என்றே புரியாமல் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது காலையில் தாலி கட்டி பின் அன்று இரவுக்குள் அவர்களுக்குள் எப்படி புரிதல் வந்து இருக்க முடியும் ?? அப்படி கொஞ்சம் கூட வந்திருக்க முடியாத சூழ்நிலையில் எப்படி அவர்களால் ஒருமித்து ஒன்று கலக்க முடியும். அப்படியே சேர்ந்தாலும் அது எப்படி முழுமை பெற்றதாக இருக்கமுடியும்…?? அவசர கோலத்தில் அள்ளி தெளித்த ஒன்றாகத்தான் முடியும்.

அது ஒருவரின் ஏமாற்றத்தில் கூட முடிந்து விடலாம், அந்த ஏமாற்றம் வாழ்வின் இறுதி வரை கூட தொடரக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. ” first impression is the best impression ” என்று சொல்வார்கள். அதனால் மிகவும் சென்சிடிவான இந்த விஷயத்தை கையாளுவதில் இருவருக்கும் மிகுந்த கவனம் தேவைபடுகிறது.

நம் முந்தைய காலத்தில் பெரியவர்கள் நல்ல நேரம், காலம் பார்த்து இதனை நடத்தினர் . பிறக்க போகும் குழந்தையை மனதில் வைத்து நேரத்தை முடிவு செய்தனர். அப்போது இருந்த ஆண், பெண் இருவருக்கும் எதிர்பார்ப்புகள் என்பது இப்போது இருப்பது போல் அதிகம் இல்லை. அதனால் பெரியோர்களின் வழி நடத்தலின் படி நடந்தார்கள்…., அதனால் இருவருக்கும் நடுவில் ஏதும் பிரச்சனை என்றால் அவர்கள் தலையிட்டு தீர்த்துவைத்து விடுவார்கள். அதனால் பிரச்னை அந்த நாலு சுவற்றுக்குள் மட்டுமே இருந்தன.

இந்த அவசர உலகத்தில் இருவரும் புரிந்து கொண்டு கலப்பது. தொடர்ந்து வாழ்க்கை நல்ல விதத்தில் பயணிப்பதற்கு உதவியாக இருக்கும்.

அன்றே முடியவேண்டும் என்பது கட்டாயமா??

இந்த கேள்வி அவசியமா என்று பலருக்கு தோணலாம். ஆனால் அவசியமான கேள்விதான் . சில குடும்பங்களில் பிரிவினைக்கு அதாவது கருத்து வேறுபாட்டுக்கு காரணம் என்ன என்று விரிவாக விசாரிக்கும் போது தான் தெரிகிறது. அவர்கள் சொல்லும் ஒரு வியப்பான பதில் , ” அன்னைக்கு ராத்தியிலேயே தெரிந்து விட்டது இவர் அல்லது இவளுடன் காலம் முழுக்க ஒற்றுமையாக இருக்கமுடியாது என்று…!! ” .

அது எப்படி ஒரே இரவில் ஒருவர் சரி இல்லை என்ற முடிவுக்கு வர முடியும்…?? காரணம் ரொம்ப சுலபம். அங்கே தான் முழு வாழ்க்கைக்கும் தேவையான அஸ்திபாரம் போடப் படுகிறது. அது அங்கே சரிவர போடப்படவில்லை என்றால் , வாழ்க்கை என்ற முழு கட்டிடமே ஆட்டம் கண்டுவிடும். அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை நாம் ஏன் பேச தயங்க வேண்டும்…??

சில ஆலோசனைகள்

பூ மலரட்டுமே இயல்பாய்..!!
எதையும் முடிவு செய்ய வேண்டியது திருமணம் முடிந்த அந்த ‘புதுமண தம்பதிகள்’ தான். இருவருமே ஒன்றில் தெளிவாக இருக்க வேண்டும்…அந்த அறைக்குள் செல்வதற்கு முன்பே ‘நான்’ என்பதை மறந்து விட்டு புது களி மண் போல மனதை வைத்து கொண்டு செல்லவேண்டும். படித்த படிப்பு, அந்தஸ்து, செல்வாக்கு, அழகு குறித்த பெருமை அனைத்தையும் வெளியே விட்டு விட வேண்டும்….! (புது மண்ணில் எழுதப்படும் எதுவும் நன்கு தடம் பதிந்து விடும், மேலும் புது மண்ணை வைத்து எதையும் செய்யமுடியும், பானை போலாகவோ அல்லது செங்கலாகவோ அல்லது அழகான சிலையாகவோ ?? ‘எதை’ என்பது அவர்களை பொறுத்தது).

தோழிகள், நண்பர்கள் என்று பலரும் சொல்லும் அறிவுரைகளை மனதில் வைத்து கொண்டுதான் பலரும் நடந்துகொள்வார்கள். ஆனால் உங்கள் நண்பர்கள், உறவினர்களையும் வெளியில் விட்டு விட்டு செல்லுங்கள். இப்போது நீங்கள் தான் ஒருவருக்கு ஒருவர் நண்பர்கள், புதிதாய் பார்க்கும் நண்பர்களின் அறிமுகம் எப்படி இருக்குமோ அப்படி இருக்க வேண்டும் உங்களின் உரையாடல். அதுவே உங்களின் படபடப்பு, பயம், அச்சம், வெட்கம் அனைத்தையும் விரட்டும். உங்கள் மனமும், உடலும் அப்போதே உற்சாகமாகி விடும். தெளிவாக தயக்கம் இன்றி பேசுங்கள்…

இங்கு ஒன்றை கட்டாயம் சொல்லியே ஆக வேண்டும். ஆணோ, பெண்ணோ தங்கள் துணையிடம் உண்மையாக இருக்க வேண்டும் என்று தங்கள் வாழ்வில் நடந்த, ‘பிறரிடம் பகிர்ந்து கொள்ள கூடாத’ காதல் மாதிரியான சென்சிடிவான விசயங்களை சொல்லிவிடுவார்கள்.(பொய் சொல்ல சொல்றீங்களா என்று நினைக்காதீர்கள்…உண்மையை சொல்லவேண்டிய அவசியம் இல்லை..அது இனி தொடரபோகும் வாழ்க்கைக்கு முக்கியமும் இல்லை, தேவையும் இல்லை ) காதல், ஈர்ப்பு போன்ற விசயங்கள் இப்போது சகஜமான ஒன்று. துணையுடன் உண்மையை சொல்கிறேன் பேர்வழி என்று கொட்டிவிட்டீர்கள் என்றால் முடிந்தது கதை.

எந்த ஒரு பெண்ணும், எந்த ஒரு ஆணும் தனது துணை இன்னொருவரால் காதலிக்கபட்டவர் என்பதை ஜீரணிப்பது என்பது சிரமம். அவர்களும் அந்த நேரம் பெருந்தன்மையாக ஏற்று கொள்வார்கள் ” இதுக்கு முன்னாடி நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லை, இனி உனக்கு நான் எனக்கு நீ ” என்று கூட வசனம் பேசலாம். ஆனால் கொஞ்ச நாள் சென்றதும், இந்த உண்மை அவர்களின் மனதை கண்டிப்பாக யோசிக்க வைத்து குழப்பும். சாதாரணமாக வேறு யாரிடம் பேசினாலும் மனதில் கேள்வி குறி தோன்றும்..அப்புறம் சந்தேகமாக உருவெடுக்கும்…….அப்புறம் என்ன உங்கள் நிம்மதி குலையும்…..தினம் போராட்டம் தான்.

அதனால் பழைய கதை பேசுவது இருவருக்குமே நல்லது இல்லை… எல்லோரின் வாழ்விலும் ஏற்படக்கூடிய ஈர்ப்புதான் என்று ஒதுக்கி விட்டு இனி வாழபோகும் பாதையை ஒழுங்கு படுத்துவது தான் முக்கியம் என்ற திட நம்பிக்கை கொண்டு கருத்துகளை கவனமுடன் பரிமாறி கொள்ளுங்கள்.

இறுதியாக இருவரும் நன்கு பேசி ரிலாக்ஸ் ஆன பின்னர் உங்கள் அந்தரங்கம் நடக்கட்டும் இயல்பாக. ஆனால் கல்யாண களைப்பில் இருவரும் இருந்தால் அந்த நாளை ஒத்திவைத்து விடுவது மிகவும் நல்லது. இந்த இடத்தில் பெண்ணின் விருப்பம் கண்டிப்பாக கேட்கப்பட வேண்டும் . அவளின் விருப்பம் இல்லாமல் எதுவும் நடப்பிக்க படுவதை இந்த விசயத்தில் எந்த பெண்ணும் விரும்புவது இல்லை.

விருப்பம் இல்லை என்ற மாதிரி தெரிந்தால் பெரிய கட்டத்திற்கு போகாமல் சின்ன சின்ன சீண்டல்கள், சில அன்பான வருடல்கள், மென்மையான சில முத்தங்கள் , ஆதரவான அணைப்பு இவற்றுடன் அந்த நாளை நிறைவு படுத்துங்கள். தன்னுடைய எண்ணத்திற்கும் கணவன் மதிப்பு கொடுக்கிறாரே என்று எண்ணி நீங்கள் அவளின் மனதில் விரைவாய் குடியேறி விடுவீர்கள். முதலில் தனது துணையை காதலிக்க (கற்றுகொள்ளுங்கள்)தொடங்குங்கள்….! அப்புறம் பாக்கலாம் மற்றதை…!!

அற்புதமான இந்த வாழ்க்கையை ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து சுவையானதாக மாற்றுங்கள். எல்லாம் அந்த ஒரு நாளில் மட்டுமே முடிந்து போய் விடுவது இல்லை. அந்த நாள் ஒரு இனிய தொடக்கம் மட்டுமே…..இனி தொடரும் நாட்களில் மெது மெதுவாய் முன்னேறி அடுத்து வெல்லுங்கள் அவளின் மனதையும் , அழகையும்…