Home பெண்கள் அழகு குறிப்பு முகப்பருவா டீ பேக் போதுமே!

முகப்பருவா டீ பேக் போதுமே!

17

கோடை காலத்தில் எண்ணெயும், வியர்வையும் அதிகரித்து பருக்கள் ஏற்படுவது இயல்பு. அதை நகங்களினால் கிள்ளினால் அதிக ஆபத்து. அவை சீல்வைத்து புண்கள் வடுக்கலாக மாறி விடும். கோடைகால பருக்களைப் போக்க சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் அழகியல் நிபுணர்கள்.

டீ பேக் பேஸ்ட்

சருமத்தில் ஏற்படும் கறுமையை போக்கவும், பருக்களை நீக்கவும் டீ டிகாசன் சிறந்த நிவாரணி. தேனீர் தயாரித்த பின்பு மீதம் இருக்கும் டிக்காஷனில் சிறிதளவு கடலைமாவு கலந்து பேஸ்ட் மாதிரி தயாரியுங்கள். அதனை கை, முகம், கழுத்து போன்ற பகுதிகளில் பூசி 15 நிமிடம் காயவைக்கவும். உலர்ந்து இறுக்கமான பின்பு குளிர்ந்த நீரில் கழுவவும். பயன்படுத்திய `டீ பேக்கை’ கழுவி கண்களின் மேல் 10 நிமிடங்கள் வைத்திருந்தால், சூட்டினால் ஏற்படும் கண் சோர்வு, எரிச்சல் நீங்கும்.

அதேபோல் கிரீன் டீ முகப்பருவைப் போக்கும் சிறந்த மருத்துவப் பொருளாக செயல்படுகிறது. இதில் உள்ள பென்சாயில் பெராக்ஸைடு முகத்தில் உள்ள அதிக எண்ணெய் பசையை நீக்கும். வறட்சி ஏற்படவிடாது. சருமத்தை பருவின்றி பொலிவாக்கும்.

துளசி சாறு

ஒரு லிட்டர் தண்ணீரை சூடாக்குங்கள். சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கிவைத்து விட்டு அதில் ஒரு கைப்பிடி துளசியை போட்டு மூடிவைத்துவிடுங்கள். நன்றாக ஆறிய பின்பு அந்த நீரை வடிகட்டி முகம் கழுவ பயன்படுத்துங்கள்.

வேப்பிலை வடிநீர்

தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் புதினா, துளசி, வேப்பிலை மூன்றையும் தலா ஒரு கைப்பிடி வீதம் போட்டு மூடிவைக்கவும். இதனை வடிகட்டி ஆறவைத்து முகம் கழுவினாலும் முகப்பரு வராது. இதை பிரிஜ்ஜில் வைத்து 3 நாட்கள் வரை பயன்படுத்தலாம். அந்த நீரில் ஒரு கப் எடுத்து, அதில் 3 டீ ஸ்பூன் முல்தாணி மிட்டி கலந்து பரு இருக்கும் இடங்களில் பூசவேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவிவிட்டால் பரு மறையும்.

ரோஜா, சந்தனம்

ஒரு லிட்டர் தண்ணீரை சூடாக்கி, அதில் பிங்க் கலர் ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு போட்டு மூடிவைத்துவிடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து வடிகட்டி எடுத்து, அந்த நீரை பயன்படுத்தி சந்தன கட்டையை கல்லில் தேய்த்து உரசி, அரைக்கவேண்டும். அதை பரு, வியர்க்குரு, கருமையான சருமங்கள் உள்ள பகுதிகளில் பூசவும். அரை மணி நேரத்தில் குளிர்ந்த நீரால் முகம் கழுவவேண்டும்.

இளநீர், தர்பூசணி

இளநீரையும், தர்பூசணி சாறையும் சம அளவு எடுத்து கலந்து முகத்தில் தேயுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து மீண்டும் ஒருமுறை பூசுங்கள். படுத்துக்கொண்டு பஞ்சில் முக்கி இதை தேய்ப்பது நல்லது. இல்லாவிட்டால் வழிந்தோடி விடும். பஞ்சில் முக்கிய சாறை கண்களை மூடிக்கொண்டு, கண்களின் மேல் பகுதியிலும் வைக்கவேண்டும். உடல் சூட்டினால் ஏற்படும் கட்டியை கட்டுப்படுத்தும். கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். முகமும் பொலிவு பெறும்.

அதிக அளவு டிவி பார்த்தாலோ, கணினியில் வேலை செய்தாலோ பருக்களும், கரும்புள்ளிகளும் தோன்றும். கண்களைச் சுற்றி கருவளையும், சோர்வும் ஏற்படும். எனவே இவற்றை தவிர்க்க வேண்டும். மன அழுத்தம் இருந்தாலும் முகப்பரு வரும். எனவே மனதை அமைதியாக்குவதோடு, ஊட்டச்சத்து மிக்க உணவு உண்டு நன்றாக உறங்கி எழுந்தாலே முகப்பரு ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள்.