Home சூடான செய்திகள் மாற்றாந்தாய் – டீன் ஏஜ் உறவில் ஏற்படும் பிரச்சனைகள்

மாற்றாந்தாய் – டீன் ஏஜ் உறவில் ஏற்படும் பிரச்சனைகள்

43

சாதாரணமாகவே பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையே மனப்போராட்டங்களும் விரிசல்களும் உண்டாக்குகிற பருவம் டீன் ஏஜ். மாற்றாந்தாய்க்கு, பெற்ற தாயைப் போல தொப்புள் கொடி பந்தமோ, பாசமோ இருக்க வாய்ப்பில்லை.

தனது ரத்த உறவல்லாத, தனது கணவரின் டீன் ஏஜ் பிள்ளைகளை எதிர்கொள்வதும் வளர்ப்பதும் அத்தனை எளிதானதுமில்லை. அனுபவமும் அறிவாற்றலும் நிறைந்த பெற்றோருக்கு டீன் ஏஜில் தங்கள் பிள்ளைகள் செய்யக் கூடிய தவறுகளைப் பற்றியும் அவர்கள் எடுக்கின்ற தவறான முடிவுகளைப் பற்றியும் கூடத் தெரிந்திருக்கும்.

தமது தவறான முடிவுகளினால் தவறான செயல்களைச் செய்துவிட்டுத் தவிக்கிற டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு, பெற்றோரால் அறிவுரை சொல்லவும், பேசிப் புரிய வைக்கவும், மன்னிக்கவும் தெரியும். இதெல்லாம் மாற்றாந்தாய்களுக்கு எளிதில் சாத்தியமாவதில்லை.

தன் கணவரின் முதல் மனைவியின் டீன் ஏஜ் பிள்ளைகளை நடத்தும் விதத்திலும் மாற்றாந்தாயின் அணுகுமுறை வேறு மாதிரியே இருக்கும். அவர்களைக் கட்டுப்படுத்துகிற தொனியில் அல்லது இப்படித்தான் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிற வகையில் அவர்களது அணுகுமுறை இருக்கும்.

அப்படிப்பட்ட மாற்றாந்தாய்களை டீன் ஏஜ் பிள்ளைகள் பெரிதாக மதிப்பதுமில்லை. பெற்ற அம்மாவே தன்னைக் கட்டுப்படுத்துவதையும், இதைச் செய், அதைச் செய்யாதே என்று சொல்வதையும் விரும்பாத அவர்கள், மாற்றாந்தாய் பேச்சையா கேட்பார்கள்? மாற்றாந்தாயின் வளர்ப்பில் வளரும் டீன் ஏஜ் பிள்ளைகளின் நடவடிக்கைகளும் வித்தியாசமாக இருக்கும்.

பெரும்பாலும் அவர்கள் மற்றாந்தாயின் பொறுமையையும் எல்லை வரம்புகளையும் சோதிக்கவே நினைப்பார்கள். அவர்களது கோபம், வன்முறை போன்றவை மாற்றாந்தாயை எந்தளவுக்குப் பாதிக்கிறது என்பதைக் கவனிப்பார்கள்.

தன் சொந்தப் பிள்ளைகளின் மனதைப் புண்படுத்துகிற வார்த்தைகளை, அணுகுமுறைகளை மாற்றாந்தாய் சுலபமாக ஒதுக்கித் தள்ளி விடுவாள். பொதுவாக, அதே வார்த்தைகளை, அணுகுமுறைகளை தன்னுடைய கணவரின் முதல் தாரத்துப் பிள்ளைகளிடமிருந்து சந்திக்கும் போது அவை தன்னை தனித்துக் குறிவைத்து செய்யப்பட்டதாக நினைப்பாள்.

மன்னிக்கிற விஷயத்துக்கும் இதே விதிதான். தன் சொந்தப் பிள்ளைகளை மன்னித்து ஏற்பது என்பது எல்லா தாய்களுக்குமே சுலபமானதாக இருக்கும். அதுவே அந்தத் தாய் மாற்றாந்தாயாக இருக்கும் போது மன்னிப்பும், மறத்தலும் சிரமமாகிறது.

தன்னுடைய மாற்றாந்தாய், தன் சொந்தப் பிள்ளைகளுக்கே அதிக சலுகைகளைக் கொடுப்பதாக இந்தப் பிள்ளைகள் நினைக்கலாம். ஆதலால் மாற்றாந்தாய் தன் மாற்றான் பிள்ளைகளின் மனதைப் புண்படுத்துகிற வார்த்தைகளை, அணுகுமுறைகளை மன்னித்து அவர்களை அளவு கடந்த பொறுமையுடனும் அன்புடனும் ஆட்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக, பெற்றெடுத்த அம்மா, அப்பாவின் மீது டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு என்னதான் கோபம் இருந்தாலும், அதை மீறிய ஒரு பாசமும் நன்றி உணர்வும் நிச்சயம் இருக்கும். பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு தன் தாய் மீது என்னதான் கோபம் இருந்தாலும் அதை மீறி தன் பெற்றோர் மீது கரிசனம் இருந்து கொண்டே இருக்கும்.

திடீரென ஒரு மாற்றாந்தாய் அல்லது தகப்பனுடன் ஒட்டி உறவாடச் சொல்கிற புதிய குடும்ப அமைப்பானது டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு அத்தனை சுலபத்தில் சாத்தியப்படாது. மாற்றாந்தாய் எப்படி பகை உணர்ச்சியை விரும்புவதில்லையோ அதே போல மாற்றான் பிள்ளையும் அதை விரும்புவதில்லை என்பதே உண்மை.