தமது மார்பகங்களில் வலி ஏற்படாத பெண்களே இருக்க முடியாது. சிறிதோ பெரிதோ அவர்கள் வாழ்நாளில் எப்பொழுதாவது மார்பகங்களில் வலி வந்தே இருக்கும். மாதவிடாய் வருவதை முந்தைய தினங்களில் பல பெண்களுக்கு மார்புகள் கனதியாக, பொருமலாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதுண்டு. சாதாரணமான பொறுக்கத்தக்க வலியாக இருக்கலாம்.
ஒரு சிலருக்கே தாங்க முடியாத வலியாகத் தொல்லை கொடுத்து மருத்துவரை நாட வைக்கும். மார்பக வலியானது இவ்வாறு மாதா மாதம் சுழற்சி முறையில் வரும் இதைத் தவிர வேறு பல காரணங்களாலும் ஏற்படக் கூடும். மாதவிடாயுடன் தொடர்புடைய மார்பு வலிகள் பொதுவாக இளம் பெண்களிலேயே தோன்றும்.
ஆனால் ஏனைய மார்பக வலிகள் பொதுவாக 40 வயதைத் தாண்டிய பெண்களிலேயே அதிகம் காணப்படுகின்றன. பெரும்பாலும் இத்தகையவை ஒரு மார்பில் மட்டும் ஏற்படலாம். அதிலும் குறிப்பான ஓர் இடத்தில் மட்டும் வரலாம். அவை திடீரெனத் தோன்றும். சில வேளைகளில் அவ்வாறே வந்த சுவடின்றி மாறவும் கூடும். சில தருணங்களில் மார்பகத்தில் முழுமையாகவோ அன்றி இரு மார்பகங்களிலும் தோன்றவும் கூடும்.