Home உறவு-காதல் பொண்டாட்டிக்காக ஒரு முறையாவது இந்த 8 விஷயத்த செஞ்சிருக்கீங்களா?

பொண்டாட்டிக்காக ஒரு முறையாவது இந்த 8 விஷயத்த செஞ்சிருக்கீங்களா?

63

நமது சமூகத்தில் இல்லறத்தில் ஆண்களுக்கான வேலை இது, பெண்களுக்கான வேலை இது என ஒரு பட்டியல் இருக்கிறது.

அன்று ஆண் வெளி வேலைக்கு சென்றான், பெண் வீட்டு வேலைகள் பார்த்துக் கொண்டாள் என்பதால் இந்த பாகுபாடு பட்டியல் இருந்தது ஓகே என்றாலும். அதை இன்று ஆண், பெண் இருவரும் வேலைக்கு செல்லும் காலத்திலும் அப்படியே கடைப்பிடிப்பது எப்படி நியாயம் ஆகும்.

கணவன் எதிர்பார்க்காமலேயே அவனுக்கான வேலைகளை இன்றுவரை மனைவி செய்துக் கொண்டே தான் இருக்கிறாள். ஆனால், மனைவி எதிர்பாராத தருணத்தில், மனைவிக்கு தேவையான வேலைகள் என்னென்ன நீங்கள் ஒரு கணவனாக செய்துள்ளீர்கள்?

அட்லீஸ்ட் இந்த லிஸ்ட்ல இருக்க இந்த 8 விஷயமாவது கட்டின பொண்டாட்டிக்காக செஞ்சிருக்கீங்களா?

சொடக்கு எடுத்துவிடுதல்!
மனைவி சோர்வாக, களைப்பாக உணரும் போது, அவரருகே அமர்ந்து, கால் பிடித்துவிடுவது, கால் விரல் சொடக்கு எடுத்துவிடுதல் போன்றவை செய்துள்ளீர்களா? இன்னும் சில ஆண்கள் மனைவியின் கால்களை பிடிக்க கௌரவம் பார்ப்பார்கள். ஆனால், இது மனைவிக்கு கணவன் மீது,” கௌரவம் பாராமல் தன் மீது அன்பு செலுத்துகிறார்” என்ற உணர்வு அதிகரிக்க, காதல் அதிகரிக்க செய்யும் கருவியாக அமையும்.

கட்டிப்பிடி!
சமையல் செய்யும் போது பின்னாடி இருந்து கட்டிபிடிப்பது ஆச்சரியத்தில் ஆழ்த்துவது. காதல் விளையாட்டுகளுடன் அவருடன் சேர்ந்து சமைக்க உதவுவது.

ஆசை முத்தம்!
சண்டையிட்டு அழவைத்த பிறகு, முதல் ஆளாக சென்று சாரி கேட்டு, அரவணைத்து ஒரு ஆசை முத்தம் கொடுத்தது உண்டா? இல்லையேல் அடுத்த முறை சண்டையிடும் போது கொடுத்து பாருங்கள். சண்டை மட்டுமல்ல, உங்கள் மீதுள்ள கோபமும் ஒரு நொடியில் அடங்கிவிடும்.

மாதவிடாய் நாட்களில் உதவி!
இப்போதெல்லாம், மாடர்ன் கணவன்மார்கள் மாதவிடாய் காலத்தில் மனைவியை ஒதுக்குவது இல்லை. ஆண்களுக்கும் மாதவிடாய் பற்றிய தெளிவு அதிகரித்து வருகிறது. ஆனால், இன்றும் மாதவிடாய் நாட்களில் மனைவியை தொட கூட தயக்கம் காட்டும் ஆண்களும் இருந்து வருகிறார்கள். இது உடலளவில் பாதிக்கப்படும் அவர்களுள் மனதளவிலும் பாதிப்பை அதிகரிக்கும். முடிந்த வரை மாதவிடாய் நாட்களில் மனைவியை அனுசரித்து பழகுங்கள். அந்த நாட்களில் ஏற்படும் மூட் ஸ்விங் காரணத்தால் கூட அவர்கள் தேவையில்லாத கோபத்தை வெளிப்படுத்த வாய்ப்புகள் உண்டு.

வீட்டு வேலைகள்!
வீட்டில் மனைவி அல்லது அம்மா நோய்வாய்ப்பட்டு விட்டால் சுழலும் உலகம் நின்று போனது போல, வீட்டில் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளும் நின்று விடும். அவர் உடல்நலம் குணமாகி மீண்டும் அவரே அந்த வேலைகளை செய்யும் வகையில் வீட்டை அலங்கோலப்படுத்தி வைத்திருப்பார்கள். இதை திருத்திக் கொண்டு, அவருக்கு முடியாத நாட்களில் நீங்களே துணி துவைத்து, சமையல் சமைத்து, வீடுகளை சுத்தமாக வைத்திருக்கிறீர்களா?

நள்ளிரவில் காத்திருந்து…
மனைவி வேலை விஷயமாக அல்லது வெளியூர் சென்று நள்ளிரவில் ஊர் திரும்பும் போது, நேரம் பாராமல் அவருக்காக ஏர்போர்ட், ரயில்நிலையம் அல்லது பேருந்து நிலையத்தில் தாமதம் ஆவதை பொருட்படுத்தாமல், அவருக்காக காத்திருந்தது உண்டா? இது போன்ற செயல்களை நீங்கள் மனம், முகம் சுளிக்காமல் செய்தால், அதை பற்றி தம்பட்டம் அடித்து பெருமையாக பேசுவது மனைவிக்கு பிடித்தமான செயலாகும்.

வேலை அவசரம்!
மனைவி அலுவல் வேலையாக அதிகாலை அவசரம் கிளம்ப வேண்டும், அல்லது வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற சூழல் உண்டாகும் போது, அவருக்கு என்ன தேவை, என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்பதை அவர் யோசிக்கும் முன்னரே நீங்கள் செய்து முடித்து அசத்தியது உண்டா? இதெல்லாம் செய்யுங்க பாஸ், வாழ்க்கை சிறப்பா இருக்கும்! ஏன்னா? இதெல்லாம் அவங்க எப்பவுமே கணவனுக்காக செய்யிற விஷயம்.

அசதியாக இருக்கும் போது டீ!
லாஸ் பட் நாட் லீஸ்ட், வீட்டு வேலை, அலுவல் வேலை அல்லது மனைவி சோர்வாக இருக்கும் போது மனைவி கேட்காமலேயே இதமான சூட்டில் ஒரு அசத்தல் டீ அல்லது காபி போட்டுக் கொடுத்தது உண்டா? இது போன்ற சின்ன, சின்ன வேலைகளை அவர் கேட்காமலேயே அவரது நிலை அறிந்து கணவன்கள் செய்யும் போது இல்லறம் எப்போதும் நல்லறமாக விளங்க அடித்தளமாக அமையும்.