போடுகைப் போக்கும் என்று விளம்பரத்துடன் விற்பனை செய்யப்படும் பல்வேறு தயாரிப்புகளையும் பயன்படுத்திப் பார்த்தும் பலனில்லையா? கவலை வேண்டாம்! இயற்கை முறையில் பொடுகை ஒழிக்க சில குறிப்புகளை இங்கு காணலாம்:
எலுமிச்சைச் சாறு (Lemon juice)
தலை சருமத்தின் pH அளவை சமநிலையில் வைப்பதற்கு எலுமிச்சைச் சாறு உதவுகிறது.
தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய் (உங்கள் முடியின் நீளத்தைப் பொறுத்து) மற்றும் எலுமிச்சைச் சாறு ஒரு டீஸ்பூன்.
செய்முறை: மேலே குறிப்பிட்டவற்றைக் கலந்து தலையில், குறிப்பாக தலை சருமத்தில் தேய்த்து மசாஜ் செய்யவும்.சுமார் 30 நிமிடங்கள் கழித்து மிதமான ஷாம்பூ போட்டு தலை குளிக்கவும்.
ஆப்பிள் சைடர் வினிகர் (Apple Cider Vinegar)
தலை சருமத்தின் pH அளவை சமநிலையில் வைக்க உதவும் மற்றொரு பொருள் ஆப்பிள் சைடர் வினிகர் (ACV) ஆகும்
தேவையான பொருட்கள்: ACV மற்றும் சம அளவு நீர்.
செய்முறை: ஒரு கிண்ணத்தில் ஆப்பிள் சைடரையும் வினிகரையும் கலந்துகொள்ளவும்.வழக்கம் போல தலைகுளித்த பிறகு, இந்தக் கலவையை தலையில் தேய்த்து, தலை சருமத்தில் நன்கு மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
முட்டை மஞ்சள் கரு (Egg Yolks)
முட்டையில் பயோட்டின் உள்ளது, இது பொடுகுப் பிரச்சனையைக் குணப்படுத்த உதவக்கூடியதாகும்.
தேவையான பொருட்கள்: 1 அல்லது 2 முட்டை மஞ்சள் கருக்கள் (உங்கள் முடியின் நீளத்தைப் பொறுத்து).
செய்முறை: ஒரு கிண்ணத்தில் முட்டை மஞ்சள் கருக்களை ஊற்றி, நன்கு அடித்து தலையில் தேய்த்துக்கொள்ளவும்.ஷவர் கேப் அல்லது பிளாஸ்டிக் பை கொண்டு முடியை மூடிக்கொள்ளவும்.சுமார் 30 – 60 நிமிடங்கள் விட்டு, பிறகு முட்டையின் மணம் போகும்வரை ஷாம்பூ போட்டு தலை குளிக்கவும். தேவைப்பட்டால் இரண்டு முறை ஷாம்பூ போட்டு குளிக்கலாம்.
பூண்டு (Garlic)
பூண்டு பூஞ்சை எதிர்ப்புப் பண்பு கொண்டது, இது பொடுகை உண்டாக்கும் பூஞ்சையைப் போக்குகிறது.
தேவையான பொருட்கள்: பூண்டு ஒரு சில பற்கள் எடுத்துக்கொண்டு அத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேனைச் சேர்க்கவும் (இது பூண்டின் கடுமையான மனத்தை அடக்கும்)
செய்முறை: பூண்டை இடித்து நசுக்கிக் கொள்ளவும், அதனுடன் தேனைச் சேர்த்துக் கலந்து தலையில் தேய்த்து மசாஜ் செய்யவும், 15 நிமிடங்கள் கழித்து தலை குளிக்கவும்.
எண்ணெய் (Oil)
தேங்காய் எண்ணெயும் ஆலிவ் எண்ணெயும் பொடுகைப் போக்க மிகவும் உதவக்கூடியவை.
தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் – 2 டீஸ்பூன், தேன் – 2 டீஸ்பூன் மற்றும் தயிர் – 3 டீஸ்பூன்.
செய்முறை: ஒரு கிண்ணத்தில் இவை அனைத்தையும் போட்டுக் கலந்துகொள்ளவும், தயிரின் அளவை தேவைக்கேற்ப கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து சற்று கெட்டியான பசை போன்ற பதம் வரும்படி செய்யவும்.இதனை தலையில் தேய்த்து மசாஜ் செய்யவும். இதை முடியின் முனைகள் வரையும் படும்படி தேய்த்துக்கொள்ளலாம், இதிலுள்ள அனைத்துமே முடிக்கு நல்லது, கண்டிஷனர் போலச் செயல்படும்! இந்த மாஸ்க்கை ஒரு மணிநேரம் போட்டுக்கொண்டு பிறகு ஷாம்பூ போட்டு தலை குளிக்கவும்.
கற்றாழை (அலோ வேரா) (Aloe Vera)
கற்றாழையில் உள்ள பாக்டீரிய மற்றும் பூஞ்சை எதிர்ப்புப் பண்புகளால், பொடுகுப் பிரச்சனையைப் போக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள்: கற்றாழைச் சோறு
செய்முறை: கற்றாழைச் சோற்றை தலையில் தேய்த்து மெதுவாக மசாஜ் செய்யவும்.ஒரு மணிநேரம் வரை விட்டு, பிறகு வழக்கம் போல் தலை குளிக்கவும்.
இங்கு வழங்கப்பட்டுள்ள குறிப்புகளில் ஏதேனும் ஒரு சிலவற்றை தொடர்ந்து முயற்சி செய்து பாருங்கள். அவை பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட பெருமளவு உதவும்! இவற்றைப் பயன்படுத்தியும் பலன் இல்லையெனில், மருத்துவரிடம் செல்லவும்.