பெண்களைத் தொடரும் ஆடைக் கட்டுப்பாடு தேவையில்லாதது என்றும், ஆடைக் கட்டுப்பாடு அவசியமே என்றும் பலரின் கருத்து. எந்தவிதமான ஆடை அணிகிறோமோ அதைப் பொறுத்துதான் நம்மை மதிப்பிடுவார்கள் என்றும், மேற்கத்திய ஆடைகளைக்கூட கண்ணியமாக அணிந்தால் தவறில்லை என்ற கருத்தையும் பல பெண்கள் முன்வைக்கின்றனர்.
எந்த ஆடையாக இருந்தாலும் உடலை இறுக்கி, அவயங்களை வெளிக்காட்டுவது போல் அணிவதைத் தவிர்க்க வேண்டும். மெய்யழகை வெளிச்சம்போட்டுக் காட்டும் ஆடைகள் நம் கலாச்சாரத்துக்கும் கண்ணியத்துக்கும் கேடு விளைவிப்பவை என்பதை பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மேற்கத்திய ஆடைகள் என்பதற்காக மட்டுமே ஒரு ஆடையைத் தடை செய்வது சரியல்லை. இப்போது பெண்கள் பலரும் ஜீன்ஸ், லெகிங்ஸ் போன்றவற்றைத்தான் அணிகிறார்கள்.
அதே சமயம் ஒருவர் உடை அணிகிற பாங்கு அடுத்தவரின் இச்சையைத் தூண்டுகிற விதத்தில் இருந்தால் நிச்சயம் அதைத் தவிர்க்க வேண்டும். ஒரு பெண் தன் உடல்வாகுக்கும் செய்கிற பணிக்கும் பொருந்துகிற வகையில் லெகிங்ஸ் இருந்தால் அதை அணிவதில் தவறில்லை. உடை அணிபவருக்கு வசதியாகவும் பொருத்தமாகவும் இருக்க வேண்டும் என்பதைவிட பார்ப்பவர் மனதில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். அதற்காகப் புடவைதான் கட்ட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
உடல் முழுவதையும் மறைக்கும் சுடிதார் போன்ற ஆடைகளை அணிவது தவறில்லை. உடலை இறுக்கிப் பிடிக்கும் லெகிங்ஸ் போன்ற உடைகள், நம் அங்கத்தை அப்படியே வெளிக்காட்டும். இது நிச்சயம் மற்றவர் மனதைச் சலனப்படவைக்கும். நாமே நம் உடையின் மீது கவனம் செலுத்தி மற்றவர் கண்களை உறுத்தாத உடைகளை அணிவதுதான் நல்லது. லெகிங்ஸ் மட்டுமல்ல எந்த ஆடை அணிந்தாலும் குறை சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள். ஆடைக் கட்டுப்பாடு என்பது பெண்களுக்கு மட்டும்தான் என்கிற பொது விதி நம் சமூகத்தில் நிலவுகிறது.
ஆண்கள் தாங்கள் செய்யும் தவறுக்கு சொல்லும் காரணங்கள்தான் ஆடைக் கட்டுப்பாடு. இந்தச் சமூகம் வரையறுத்து வைத்திருக்கும் கண்ணியமான ஆடைகளை அணிகிற பெண்களுக்கு எந்தத் தொந்தரவும் ஏற்படுவதில்லையா? முதலில் காட்சி ஊடங்களில், விளம்பரங்களில் பெண்களை இயல்பாகக் காட்டட்டும். அதன் பிறகு எல்லா மாற்றங்களும் தானாகவே நடக்கும். லெகிங்ஸ் அணிந்து, உயரம் குறைவான சட்டை அணியும் பெண்கள் தாங்கள் காட்சிப்படுகிறோம் என்பதை உணர்வதில்லை.
அதிலும் குறிப்பாகத் தோல் நிறத்து உடைகள் இன்னும் மோசம். இப்படிப்பட்ட புதிதான ஆடைகள் பெண்களைக் குறி வைத்தே மிகுதியாக வருவதையும் பெண்கள் உணர வேண்டும். நம் பெண்கள் இதுபோன்ற மாயையிலிருந்து விரைவில் விடுபட வேண்டும். சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை பாலியல் வன்முறைக்கு ஆளாவதைப் பார்க்கும் போது, தவறு அவர்கள் அணிகிற உடையில் இல்லை, பார்க்கிறவர்களின் பார்வையில் உள்ளது என்பதை உணர முடிகிறது. இப்படியொரு கீழான சமூகத்தில் ஆடைக் கட்டுப்பாடு இல்லையென்றால் பெண்களின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்பட்டுவிடும்