பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகள் மற்றும் நவீன அறுவை சிகிச்சை குறித்து மருத்துவ நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 10 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு, நவீனமுறையில் கர்ப்பப்பை அகற்றும் சிகிச்சை செய்யப்படுகிறது. கர்ப்பப்பை கோளாறுகள் மற்றும் நவீன அறுவை சிகிச்சை குறித்து மருத்துவ நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்க்கலாம்:-
பெண்களுக்கு மாதவிடாயின்போது அதிகளவு ரத்தப்போக்கு, இடையில் ஏற்படும் ரத்தப்போக்கு, வயிற்றின் அடியில் பின்புறம் ஏற்படும் வலி, முதுகு வலி, அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், கர்ப்பப்பையில் ஏதேனும் கோளாறுகள் இருக்கலாம் என்று கண்டறியலாம்.
மேற்கண்ட அறிகுறிகள் காரணமாக கர்ப்பப்பையில் உள்ள தசைகளில் வீக்கம் அல்லது வலி, கர்ப்பப்பையில் இருந்து வெளியேறும் ரத்தப்போக்கில் அதிகளவில் மாற்றம் ஏற்படுதல், அடிவயிற்று வீக்கம் அல்லது வலிஉண்டாகுதல், கர்ப்பப்பையின் பக்கத்தில் இருக்கும் சுரப்பிகளில் நீர் தேக்கம், கர்ப்பப்பை வீக்கம் மற்றும் சுரப்பிகளின் வீக்கம் போன்றவை ஏற்படலாம்.
இந்த நிலையில் கர்ப்பப்பை பிரச்சினை தீவிரமாகும்போது கர்ப்பப்பையை அறுவை சிகிச்சை மூலம் நீக்குவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்படுகிறது. தற்போது அதிநவீன வீடியோ லேப்ராஸ்கோப்பி என்ற நவீன சிகிச்சைமுறையில் பாதுகாப்பாக கர்ப்பப்பை அகற்றப்படுகிறது.
இந்த சிகிச்சை மூலம் ஓரிரு வாரங்களில் நோயாளிகள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம். இந்த லேப்ராஸ் கோப்பிக் ஹிஸ்ட்ரெக்டமி சிகிச்சை மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்படுவதால் நோயாளிக்கு வலி இருக்காது. லேப்ராஸ்கோப் ட்ரேக்கார் (சிறிய தொலை நோக்கு கருவி) என்ற கருவியின் உள் பகுதியில் கேமரா செலுத்தப்படுகிறது.
இதனால் நோயாளியின் உடலின் உள்ளே இருக்கிற உறுப்புகள் பல மடங்கு பெரியதாக 3 டி திரையில் மிக தெளிவாகவும், துல்லியமாகவும் தெரிகிறது. இதனால் மருத்துவ நிபுணர்கள் மிக எளிதாக சிகிச்சைஅளிக்க முடிகிறது. கர்ப்பப்பை நீக்கப்பட்ட பிறகு அடிவயிற்றுப்பகுதியில் உள்ள சிறு துளைக்கு தையல் போடப்படுகிறது. அல்லது டேப் போட்டு ஒட்டப்படு கிறது. சில மாதங்களில் தழும்பே இல்லாமல் அந்த இடம் மாறிவிடுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.