பெண் வயதுக்கு வருகிற வயது தலைமுறைக்குத் தலை முறை மாறிக் கொண்டே வருகிறது. 13 முதல் 16 வயது பூப்பெய்தும் காலம் என்றாலும், பரம்பரைத் தன்மை,
உணவுப் பழக்கம் போன்ற விஷயங்களைப் பொறுத்து அந்த வயது கூடவோ, குறையவோ செய்யலாம். ரொம்பவும் வெப்பமான சூழலில் வாழும் பெண்கள் தாமதமாகவே பூப்பெய்துகிறார்கள் என்று தெரிகிறது.*பெண்ணின் 13-வது வயதில் சினைப் பையில் சினைமுட்டைகள் வளரத் தோன்றும். இது ஆணின் உயிரணுவுடன் சேர்ந்து கரு முட்டையானால், கரு தங்கி வளர்வதற்கு ஏற்ற வகையில் தயாராக இருக்கும். அப்படி இணையாமல் போகிற போது கருப்பையினுள் கருத்தரிப்பிற்காக செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் கலையத் தொடங்கும். அப்படிக் கலைகிற போது ரத்த நாளங்களில் இருந்து இரத்தம் கசியும்.
*இத்துடன் சேர்ந்து கருப்பையின் உள்வரிச் சவ்வுப் பகுதியும், சிதைந்த சினை முட்டையும், கருப்பையின் முகப்பின் வழியே வடிந்து, பெண்ணின் பிறப்புறுப்பின் வழியே வெளியேறும். இதையே மாதவிலக்கு என்கிறோம்.
*மாதவிலக்கு சுழற்சியானது நான்கு வாரங்களுக்கு ஒரு முறையோ, 28, 29 நாட்களுக் கொரு முறையோ, மாதம் ஒரு முறையோ வரும். ஒரு பெண்ணின் வாழ் நாளில் சுமார் 400 முறைகள் மாத விடாய் வரும். மாத விலக்கின் போது வெளியேறும் இரத்தத்தின் அளவும், மாதவிடாய் நீடிக்கும் நாட்களின் எண்ணிக்கையும் பெண்ணுக்குப் பெண் வேறுபடும்.
*பூப்பெய்தும் காலத்து முதல் அறிகுறியாக பெண்ணின் உடலில் சில பகுதிகள் உருண்டு, திரண்டு காணப்படும். மார்பகங்கள், இடுப்பு மற்றும் தொடைகள் லேசாகப் பருக்கும். அக்குள், பிறப்புறுப்பு பகுதிகளில் ரோம வளர்ச்சி தெரிய ஆரம்பிக்கும். மேலுதடு, மார்பகங்களைச் சுற்றி, வயிற்றில் கூட சில பெண்களுக்கு மெல்லிய ரோம வளர்ச்சி தெரியும்.
*ஆண்ட்ரோஜென் என்கிற ஹார்மோன், சீபம் சுரக்கும் சுரப்பியையும், வியர்வை சுரப்பியையும் தூண்டுவதன் விளைவால் பூப்பெய்தும் பருவத்துப் பெண்களின் முகத்தில் வலியுடன் கூடிய பருக்கள் தோன்றலாம். அதைக் கிள்ளாமல், அழுத்தாமல் அப்படியே விடுவதே பாதுகாப்பானது. இல்லா விட்டால் அவை முகத்தில் நிரந்தரக் கரும்புள்ளிகளையும், தழும்புகளையும் ஏற்படுத்தி விடும்.
*பள்ளியிலோ, வீட்டிலோ நீங்கள் இல்லாத சமயத்தில் உங்கள் மகள் பூப்பெய்தினால், இரத்தப் போக்கைக் கண்டு பயப்படாமலிருக்கவும், அதற்கு என்ன செய்யவேண்டும் என்றும் சொல்லிக் கொடுங்கள். நாப்கின் உபயோகிக்கக் கற்றுக்கொடுங்கள்.
*மாத விடாய் பற்றி அவளாகக் கேட்கும் கேள்விகளுக்கு மழுப்பாமல் உண்மையான பதில்களைச் சொல்லுங்கள். இதில் தயக்கத்துக்கோ, கூச்சத்துக்கோ அவசியமே இல்லை.
மனமாற்றங்கள்:
*ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் புரியாத புதிரான காலக்கட்டம் அவர்களது டீன் ஏஜ் பருவம். விடை தெரியாத பல கேள்விகள் மனதைக் குடைந்தெடுக்கும் பருவம்.
செக்ஸ் தொடர்பான சந்தேகங்கள், குழப்பங்கள் உருவாகும். அவற்றுக்கு விடை தேடும் ஆர்வம் அதிகரிக்கும்.எல்லோரும் தன்னையே கவனிக்கிற உணர்வு ஏற்படும்.தன் உடலில் ஏற்படுகிற மாற்றங்களையும், ஆண்களைப் பற்றி எழும் சந்தேகங்களையும் யாரிடமாவது பகிர்ந்து கொள்ளத் தோன்றும்.
பூப்பெய்துதல் என்பது பெண்களுக்கு இயற்கையாக ஏற்படக் கூடிய ஒரு நிகழ்வு. ஆனால் சில பெண்கள் அதை செக்ஸ் உறவில் ஈடுபடுவதற்கான அங்கீகாரமாக நினைத்து வழிதவறிப் போவதுண்டு. வயதுக்கு வந்தது முதல் திருமணம் வரைத் தன்னைக் கட்டுப் பாடாக வைத்திருக்க வேண்டியது அவளது கடமை.