Home ஆரோக்கியம் புரை ஏறுவது எதனால்? அதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

புரை ஏறுவது எதனால்? அதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

49

நமது செரிமானக் குழாயின் தொடக்கம், தொண்டை. தொண்டையில் உணவுப் பாதை, காற்றுப் பாதை என்று இரண்டு பாதைகள் உள்ளன. மூக்கு வழியாக வருகிறது காற்றுப் பாதை. வாய் வழியாக வருகிறது உணவுப் பாதை.

தொண்டையின் மையப் பகுதியில் இந்த இரண்டு பாதைகளும் சேரும் இடத்தில் குரல்வளை (Larynx) உள்ளது. இது மூச்சுக் குழாயின் தொடக்கம். மூச்சுக் குழாய்க்குப் பின்புறம் உணவுக் குழாய் உள்ளது. குரல்வளையின் மேல் துவாரத்துக்கு ‘கிளாட்டிஸ்’ (Glottis) என்று பெயர். அதை மூடியிருக்கும் தசை ‘எபிகிளாட்டிஸ்’ (Epiglottis).

நாம் உணவை விழுங்கும்போது, எபிகிளாட்டிஸ் என்ற மூடி கிளாட்டிஸை மூடிக்கொள்ள, மூச்சுக் குழாயும் மூடிக்கொள்கிறது. இதனால் உணவுக் கவளம் உணவுக் குழாய்க்குள் போகிறது. சுவாசிக்கும்போது எபிகிளாட்டிஸ் திறந்துகொள்ள, கிளாட்டிஸ் வழியாக மூச்சுக் குழாய்க்குள் காற்று போகிறது. இப்படிச் சாதாரணமாகக் காற்றும், உணவும் ‘சண்டை போடாமல்’ ஒவ்வொன்றும் ‘தனி வழி’களில் செல்கின்றன. இதனால் பிரச்சினை ஏற்படுவது இல்லை.

சில காரணங்களால், குரல்வளை சரியாக மூடப்படவில்லை என்றால், உணவுக் குழாய்க்குள் செல்ல வேண்டிய உணவுக் கவளம் தவறுதலாக மூச்சுக் குழாய்க்குள் சென்றுவிடும். அப்போது மூச்சுக் குழாய் தடைபடும். நம்மால் மூச்சுவிட முடியாது.

இப்படித் தடை உண்டாக்கிய பொருளை வெளியேற்ற, நம் உடலில் இயற்கையாக இருக்கிற மெக்கானிஸம், இருமல். இருமும்போது, நுரையீரலில் இருந்து கிளம்பும் அழுத்தம் நிறைந்த காற்றால் மூச்சுக்குழாய்க்குள் சென்ற உணவு பலமாக வெளியே உந்தி தள்ளப்படும். இதைத்தான் ‘புரையேறி விட்டது’ என்று சொல்கிறோம்.

என்ன காரணம் ?

அவசர அவசரமாக உணவை விழுங்குவது, பேசிக்கொண்டே சாப்பிடுவது, உணவு உண்ணும்போது சிரிப்பது, தும்முவது, வேகவேகமாகத் தண்ணீர் குடிப்பது, தண்ணீர் குடித்துக்கொண்டே உணவைச் சாப்பிடுவது, உணவுக் குழாய்ப் புற்றுநோய், தொண்டை நரம்பு வாதம் போன்ற காரணங்களால் புரையேறும்.

குழந்தைகளின் உணவுக் குழாயும் சுவாசக் குழாயும் மிகவும் குறுகிய விட்டம் கொண்டதாக இருப்பதால் பட்டாணி, வேர்க்கடலை, சுண்டல் போன்ற சிறிய உணவுப் பொருள்கள் கூடச் சுவாசக் குழாயை மிக எளிதாக அடைத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இவற்றை உடனடியாக வெளியேற்றாவிட்டால், மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் தடைபட்டு உயிருக்கே ஆபத்து உண்டாகலாம்.

என்ன செய்ய வேண்டும்?

# பாதிக்கப்பட்ட நபரை நிற்க வைத்து, முதுகை மட்டும் முன்னோக்கிக் குனியச் சொல்லுங்கள். அவரது இரண்டு தோள்பட்டை எலும்புகளுக்கு இடையில், உங்கள் உள்ளங்கையின் அடிப்பாகத்தால் தொடர்ந்து நான்கைந்து முறை ஓங்கித் தட்டுங்கள். புரையேறிய பொருள் வெளியில் வந்துவிடும்.

# இதில் அந்தப் பொருள் வெளியேறவில்லையா? அந்த நபரைக் குனியச் சொல்லுங்கள். அவரது பின்புறம் நீங்கள் நின்று கொள்ளுங்கள். உங்கள் இரு கைகளையும் அவரது விலா எலும்புகளுக்குக் கீழாக, வயிற்றுக்கு முன்பாக இணைத்து, உள்நோக்கியும், மேல்புறமாகவும், வலுவாக அழுத்துங்கள். இப்படி முதுகில் தட்டுவதையும், வயிற்றில் அழுத்தம் கொடுப்பதையும் மாறி மாறிச் செய்யுங்கள். உணவுப் பொருள் வெளியேறிவிடும்.

# அப்படியும் உணவுப் பொருள் வெளியேறவில்லை என்றால், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கு ‘பிராங்காஸ்கோப்’ கருவி மூலம் உணவுப்பொருளை மருத்துவர் வெளியே எடுத்துவிடுவார்.