Home உறவு-காதல் பிறர் மனதை புண்படுத்தாமல் நம்மால் இருக்க முடியுமா?

பிறர் மனதை புண்படுத்தாமல் நம்மால் இருக்க முடியுமா?

31

ஒருவரின் மனதை காயப்படுத்தாமல் நம்மால் வாழ்ந்திட முடியுமா? கொஞ்சம் கடினமானது தான் ஒருவருக்கு நல்லவராக தெரியவேண்டுமானால் இன்னொருவருக்கு கெட்டவராகத் தான் தெரிவோம். ஆனால் நம்மால் இயன்றவரை பிறர் மனதை புண்படுத்தாமல் இருக்க முயற்சிக்கலாமே. உங்கள் முயற்சியை வெற்றி பெற்றதாக மாற்றிட சில அற்புதமான யோசனைகள்.

சட்டென நோ :
உங்களுக்கு பிடிக்காத விஷயத்தை இணை செய்தால் அங்கேயே உடனேயே முகத்திற்கு நேராக சட்டென சொல்வதை தவிர்த்திடுங்கள். இது அவர்களின் நல்லதுக்காகத்தான் நீங்கள் சொல்கிறீர்கள் என்றாலும் அது வருத்தமடையச் செய்திடும்

பேசுவதற்கு முன்னால் :
ஒரு விஷயத்தை எல்லாரும் ஒரே மாதிரியாகத்தான் அணுகுவார்கள் என்று சொல்ல முடியாது. எதிரிலிருப்பவரின் எண்ணவோட்டங்களையும் நாம் புரிந்து கொள்ளவேண்டியது அவசியம். அப்படி உங்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை எனில் நீங்கள் பேசுவதற்கு முன்னால் நீஙக்ள் சொல்லப்போகும் கருத்து எத்தகையது என்பதை பரீசிலித்துக் கொள்ளுங்கள்.

சமூகவலைதளம் :
இன்றைய இளைஞர் கூட்டத்தினரின் வடிகால் இடமாக இருப்பது சமூகவலைதளங்கள் தான். சின்ன சின்ன சண்டைகளுக்கெல்லாம் டிபியை மாற்றுவது ஸ்டேட்டஸை மாற்றுவது என தன்னைப் பற்றியும் தன்னுடைய மனநிலையைப் பற்றியும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஒருவர் மனதை நோகச் செய்ய வேண்டுமென்றால் முகத்திற்கு நேராக திட்ட வேண்டுமென்றெல்லாம் இல்லை. இப்படி சமூகவலைதளங்கள் நீங்கள் பகிரும் கருத்துக்களே போதுமானது. அன்புக்கு உரியவர் மனதில் என்னை வெறுக்கிறார் என்று தெரிந்தாலே போதும் தானே.

இமோஜி :
சங்கடமான விஷயங்கள் அல்லது நீங்கள் சந்தேகப்படும் விஷயங்களை நேரடியாக சம்பந்தப்பட்டவரிடமே கேட்பது சிறந்தது. நேரில் கேட்க முடியவில்லை எனில் குறுஞ்செய்தியாக கேளுங்கள். முக்கியமாக கேட்கும் மொழியில் உங்களது உறுதித்தன்மை காட்டக்கூடாது. உங்களுக்கு உறுதியாக தெரிந்தாலும் சந்தேகத் தொனியிலேயே கேளுங்கள். அதே நேரத்தில் சிரிக்கும் இமோஜிக்களை சேர்க்க மறந்துவிடாதீர்கள்.

விமர்சனம் :
எல்லாரும் உங்களுக்கு பிடித்தமாதிரியாக உங்களுக்கு ஏற்றமாதிரியாக இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதை தவிர்த்திடுங்கள். எல்லா விஷயத்தையும் விமர்சிக்காதீர்கள். இது எதிரிலிருப்பவருக்கு எரிச்சலையே ஏற்படுத்தும். சின்ன சின்ன குறைகளை தவறுகளை எல்லாம் பெரிதுபடுத்தாமல் மன்னித்துவிடுங்கள். அதே நேரத்தில் இப்படிச் செய்வது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றும் தெரியப்படுத்துங்கள். அதை விடுத்து நீ செய்தது தவறு என்று சொல்ல வேண்டாம்.

சந்தர்ப்பங்கள் :
மற்றவர் தவறை உணர்ந்து அல்லது தவறுக்காக வருந்துகிற போதும் நீங்கள் அதே தவறை சுட்டிக் காட்டி பேசாதீர்கள் இது முதன் முறை அல்ல பல முறை இப்படிச் செய்திருக்கிறாய்.. என் பேச்சை கேட்காமல் செய்ததற்கு இது தேவை தான் என்று அவரை பலகீனப்படுத்தும் படி எதுவும் பேசாதீர்கள். சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்தது போல மேலும் மேலும் செய்த தவறையே சுட்டிக் காட்டுவதை முற்றிலுமாக தவிர்த்திடுங்கள்.

தவிர்ப்பது :
அவரைப் பார்த்தாலே கோபம் வரும் , எரிச்சல் வரும் என்று சொல்லி தவிர்க்க வேண்டாம். ஒரு முறை தவறு செய்தால் வாழ்நாள் முழுவதும் அவர் தவறு செய்து கொண்டே இருக்கப்போவதில்லை. இது உங்களை பலவீனமானவராக காட்டிடும்.

எமோஷனல் :
எப்போதும் ஒருவருடைய எமோஷனுலுடன் விளையாடுவதை தவிர்த்திடுங்கள். இந்தப் பாடல் கேட்டால் அழுகை வந்திடும் என்று சொல்லும் போது அவரது உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுங்கள். அதை விடுத்து இதெல்லாம் ஒரு பாட்டு இதுக்கெல்லாம் ஒரு அழுகையா என்று கிண்டலடிக்காதீர்கள். அதை விட முக்கியமாக பிறருடன் பகிர்ந்து அவரை கார்னர் செய்து கொண்டலடிக்காதீர்கள்.

பொறுமை :
ஒருவர் சொல்வதற்கு முன்னாலேயே நீங்களாகவே யூகித்து முடிவெடுப்பதை தவிர்த்திடுங்கள். வெளியில் சொல்வதும் உள்ளுக்குள்ளே நினைப்பதும் வெவ்வேறாக இருக்க வாய்ப்புகள் அதிகம். அவர் நினைப்பதை தைரியமாக சொல்வதற்கான வாய்ப்புகளை கொடுத்திடுங்கள்.