பாதங்கள் தான் நமக்கும் தரைக்கும் உள்ள முதல் தொடர்பு. உணவுப் பழக்கம், தூக்கம், சருமம், முடி என எல்லாவற்றையும் அக்கறையாகப் பார்த்துக்கொள்ளும் நாம் பாதங்களை அதே அளவுக்குப் பார்த்துக்கொள்கிறோமா?
புதிய வண்ணமயமான நெயில் பாலிஷ் வைத்துக்கொண்டால் மட்டும் உங்கள் பாதங்கள் ஆரோக்கியமாக இருக்கும் என்று நம்பிவிடாதீர்கள்.
உங்கள் பாதங்களைக் கவனிப்பதற்கு என கடைசியாக எப்போது நேரம் ஒதுக்கினீர்கள்? அட, ஆமாம்! கடந்த மாதம் பார்லருக்குச் செல்லும்போது தானே! அதற்குப் பிறகு?
உலகெங்கும் நீங்கள் ஒய்யார நடைபோட உங்கள் பாதங்கள் தான் உதவுகின்றன, உங்கள் கனவுகளையும் இலட்சியங்களையும் கம்பீரமாக நின்று உலகுக்கு உரத்துக் கூறவும் பாதங்கள் தான் உங்களைத் தாங்கி நிற்கின்றன. அந்த அளவுக்கு முக்கியமான பாதங்களுக்கு உரிய அக்கறையை நீங்கள் செலுத்த வேண்டாமா!
உங்கள் பாதங்களை ஆரோக்கியமாகவும் அழகாகவும் பராமரிப்பதற்காக இங்கே சில குறிப்புகளை வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றுங்கள், அடுத்த முறை நீங்கள் அழகிய ஹீல்ஸ் போடும்போது அல்லது கொலுசு அணிந்துகொள்ளும்போது உங்கள் பாதங்களை பிறர் பார்க்கக்கூடாதே என்று கவலையின்றி இருக்கலாம்!
தினமும் கழுவுங்கள், உலர்த்துங்கள், ஈரப்பதமூட்டுங்கள் (Wash, dry and moisturise (repeat every day)):
அலுவலகத்தில் மும்முரமாக நீண்ட நேரம் உழைத்துவிட்டு வருகிறீர்கள், அவ்வளவு நேரம் உழைத்துவிட்டு, வீடு வந்ததும் காற்றோட்டமான உடையணிந்து திருப்தியாகப் பசியாறச் சாப்பிட்டு படுத்து ஓய்வெடுக்க வேண்டும் என்று தான் தோன்றும். அப்போது உங்கள் பாதங்கள்? ஒரு மக் நீரை ஊற்றி லேசாகக் கழுவிவிட்டு மேட்டில் துடைத்துவிட்டால் உங்கள் பாதங்கள் சுத்தமாகிவிடாது! உண்மையில் இப்படிச் செய்வதால் உங்கள் விரல் இடுக்குகளில் ஈரம் படிந்து பூஞ்சை வளரவே உதவும். எனவே உங்கள் பாதங்களை சோப்பு போட்டு நன்கு கழுவி, நன்றாக உலர விட வேண்டும். தினமும் வெந்நீரில் பாதங்களை வைத்திருக்கும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். தினமும் இப்படிச் செய்வதால் உங்கள் சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசை போய்விடும். பாதங்களை உலரவைத்ததும், சோப்பினால் உண்டான வறட்சி பாதங்களைப் பாதிக்காமல் இருக்க, ஈரப்பதமூட்ட வேண்டியது அவசியம்.
பாதங்கள், விரல்கள், விரல் நகங்களை அழகுபடுத்துதல் (Pedicure):
பாதங்கள், விரல்கள், விரல் நகங்களை அழகுபடுத்திக்கொள்வதில் உங்களுக்கு அதிக ஆர்வமா? தேய்த்து பழைய செல்களை அகற்றும்போது கவனமாக இருங்கள், ஏனெனில் கடுமையாகத் தேய்த்தால் சருமம் பாதிப்படைந்து பூஞ்சையும் பாக்டீரியாவும் வளரக்கூடும். பூஞ்சை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும், அதுமட்டுமின்றி, இந்தக் கருவிகளை சுத்தம் செய்யாமல் வைத்திருந்தால் அவை ஓரிரு நாட்கள் கூட அப்படியே இருக்கலாம். ஆகவே அவர்கள் பயன்படுத்தும் கருவிகள் நன்கு கிருமிநீக்கம் செய்யப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
விரல் நகங்களை ட்ரிம் செய்தல் மற்றும் நெயில் ஆர்ட் (Nail trimming and Nail Art):
நகங்களை ட்ரிம் செய்யும்போது மிகக் கவனமாக இருங்கள். அதுவும் ட்ரிம் செய்பவர் நகத்தின் புறத்தோலை வெட்டக்கூடாது, பின்புறமாகத் தள்ளிவிட வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். நீங்களாகவே செய்துகொள்வதாக இருந்தால், நகங்களின் இயற்கையான வளைவுடன் பொருந்துகின்ற வெட்டும் பகுதி கொண்ட நெயில் நிப்பரைப் பயன்படுத்த வேண்டும். வயது அதிகமாகும்போது, நமது நகங்கள் எளிதில் உடையும் தன்மை பெறுகின்றன. நகத்திற்கு நாம் பூசும் வண்ணப்பூச்சுகளில் உள்ள ஃபார்மால்டிஹைடு, டோலூவீன், டைபியூட்டைல் ஃப்தாலேட் போன்ற இரசாயனங்கள் இந்தச் செயல்பாட்டை இன்னும் வேகப்படுத்துகின்றன. மேலும் அடிக்கடி நெயில் ஆர்ட்டை மாற்றுவதற்காக நாம் பயன்படுத்தும் நெயில் பாலிஷ் ரிமூவரில் ஆல்கஹால் இருப்பதால் நகங்கள் வறண்டு போகும். நகங்களுக்கு உங்களுக்குப் பிடித்த வண்ணத்தைப் பூசும் முன்பு, பெட்ரோலியம் ஜெல்லி, கியூட்டிக்கில் கிரீம் அல்லது குறைந்தபட்சம் வைட்டமின் E கொண்டுள்ள ஏதேனும் என்னே எண்ணெயைப் பயன்படுத்தி நகங்களைத் துடைத்துக்கொள்ளுங்கள்.
சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள் (Wear Sunscreen):
வெறும் காலுடனோ, அதிகம் வெயில் படும்படியான வடிவமைப்பு கொண்ட காலணிகளை அணிந்துகொண்டோ வெளியே செல்லும் முன்பு, சூரியனின் UV கதிர்களால் பாதிக்கப்படாமல் இருக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்த மறக்க வேண்டாம்.
சரியான அளவு கொண்ட காலணிகள், ஹீல்ஸ் காலணிகளை அணிய வேண்டும் (Correct Size Sandals and Heels):
ஹை ஹீல்ஸ் அணிந்தால் அழகாக இருக்கலாம், ஆனால் இவற்றால் பாதத்தில் வெவ்வேறு பகுதியில் வெவ்வேறு அளவு அழுத்தம் பரவும் என்பதால் அவற்றை நீண்ட நேரம் அணிவதைத் தவிர்க்கவும்.
பொதுவாக, நம் அனைவருக்கும் ஒரு பாதம் மற்றொன்றை விடப் பெரியதாக இருக்கும். நீங்கள் அணியும் காலணி உங்கள் பெரிய பாதத்திற்குப் பொருத்தமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.
சரியான அளவு கொண்ட ஷூக்களை அணியவும். உங்கள் ஸ்னீக்கர்ஸ் அளவும் உங்கள் ஃபேன்சி சேன்டல் அளவும் வெவ்வேறாக இருக்கலாம்.
பாதத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள் (Common foot problems):
கால் ஆணி மற்றும் காய்ப்பு: உங்கள் பாதத்தில் எலும்புகள் அதிகம் இருக்கும் பகுதி காலணியுடன் உராய்வதால் இவை ஏற்படுகின்றன. வாஷ்க்ளாத் அல்லது பியூமிஸ் கொண்டு கால் ஆணியை மெதுவாகத் தேய்க்கவும். இதன் மூலம் அதன் அளவு குறையும். கால் ஆணி அல்லது காய்த்துப் போயிருக்கும் பகுதிகளில் ஒருபோதும் ஷேவிங் செய்ய வேண்டாம். அப்படிச் செய்வதால் நோய்த்தொற்று ஏற்படலாம்.
விரல் நகங்கள் தோலைத் துளைத்துக்கொண்டு செல்வதால் விரல் நகங்கள் உள்ளுக்குள் வளருகின்றன. எல்லாக் கால் விரல் நகங்களையும் சீராக வெட்டாமல் விடுவதால் இது ஏற்படுகிறது. உள்ளுக்குள் வளரும் நகங்களை அகற்ற மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.
பூஞ்சைத் தொற்று: பாதப்படை என்றும் இதனை அழைப்பார்கள். பொதுவாக பெரும்பாலான நேரம் காலணிகளை அணிந்திருப்பவர்களுக்கு இந்தப் பிரச்சனை ஏற்படலாம். ஷூக்கள் பாதங்களை சிறிது வெப்பத்துடன் வைத்திருக்கும், அதனுடன் ஈரப்பதமும் இருட்டாக இருப்பதும் பூஞ்சைகள் வளர ஏதுவான சூழலாகிறது. மருந்து கடைகளில் கிடைக்கும் ஆன்டிஃபங்கல் பவுடர் அல்லது கிரீம்களைப் பயன்படுத்துவது உதவக்கூடும். 2-4 வாரங்களுக்குள் உங்கள் பாதங்களின் இந்தப் பிரச்சனையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் மருத்துவரிடம் செல்லவும்.
பாதங்கள் வீங்குதல்: நீண்ட நேரம் நின்றுகொண்டு இருந்தால் அல்லது நீண்ட நேரம் கால்களைத் தொங்கப் போட்டு அமர்ந்திருந்தால் கால்களுக்கு போதிய இரத்த ஓட்டம் கிடைக்காமல் போவதால் இந்தப் பிரச்சனை ஏற்படலாம். நீண்ட நாட்களாக கணுக்கால் அல்லது பாதம் வீங்கியிருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.
எச்சரிக்கை (Be Alert)!
உங்களுக்கு நீரிழிவுநோய் அல்லது தமனி குறுகல் நோய் (பெரிஃபெரல் ஆர்ட்டரி டிசீஸ்) இருந்தால் உங்கள் பாதங்களை தினமும் சோதித்துக்கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சனைகள் பாதங்களுக்கு குறைவான இரத்த ஓட்டம் கிடைக்க வழிவகுக்கும் என்பதால், பாதத்தில் சிராய்ப்போ வெட்டுக் காயமோ ஏற்பட்டால் அவற்றின் மூலம் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம். சிராய்ப்போ, வெட்டுக் காயமோ நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கிறதா என சோதித்து அறிந்துகொள்ள வேண்டும்.