வெள்ளரியானது ரத்த அழுத்தம், மூட்டுவலி உள்ளிட்ட பலவகை நோய்களை தீர்க்கும் மருத்துவ பயன்களை கொண்டது.
மருத்துவ பயன்கள்
வெள்ளரியின் மருத்துவ பயன்களை கூற தொடங்கினால், அதன் பயன்கள் ஏராளம். 95 சத நீர்ச்சத்துடன், சாதாரண நீரைவிடச் சத்து மிகுந்த நீரைக் கொண்டிருப்பதால், உடல் வெப்பநிலையையும், நீர்ச்சத்தையும் சீராக பராமரித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.
இதில் உள்ள வைட்டமின்களும், மாங்கனீஸ், பொட்டாசியம், சிலிக்கான் ஆகிய தாதுக்கள் தோல் பாதுகாப்பில் உதவுகின்றன. இதிலுள்ள லேரிசிரிசினால், பினோரெசினால், சீகோஐசோசிரிசினால் என்ற மூன்று லிக்னன்கள் பலவகையான புற்றுநோய்கள் வரும் வாய்ப்பை தடுக்கின்றன என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
மூட்டுவலிக்கு நிவாரணம்
வெள்ளரிச்சாறில் உள்ள பொட்டசியம், மெக்னீசியம், நார்ச்சத்து ஆகியன ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகின்றன. வாய் துர்நாற்றத்தைப் போக்கவும், பல், ஈறுகளைப் பாதுகாக்கவும் வெள்ளரி உதவுகிறது. சீரணமண்டலத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், குடல்புண் ஆகியவற்றை குணமாக்கி, சீரான சீரணத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கலை போக்குகிறது.
வெள்ளரி விதைகள் நாடாப்புழுக்களை வெளியேற்ற உதவுகின்றன. இதில் உள்ள சிலிகான், மூட்டு தசைகளுக்கு வலு அளிப்பதனாலும், வைட்டமின்கள் ஏ, பி6, சி, போலேட், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியன யூரிக் அமில அளவை குறைப்பதாலும் மூட்டுவலிக்கு நிவாரணம் அளிக்கின்றன. இன்சுலினை சுரக்கும் கணைய செல்களுக்கு தேவைப்படும் வளர்ச்சி ஊக்கியை (ஹார்மோன்) வெள்ளரி கொண்டுள்ளதால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் வெள்ளரி இனியது. இதில் உள்ள ஸ்டிரால்கள் என்ற கூட்டுப்பொருட்கள் கொழுப்பைக் குறைப்பதாகச் சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இதில் உள்ள சிலிக்கானும், கந்தகமும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
எடையை குறைக்க உதவுகிறது
கண்வீக்கம், கருவளையங்களை போக்கவும், சிறுநீரக கற்களை கரைக்கவும் வெள்ளரி உதவுகிறது. கொழுப்பில்லாத, கலோரி குறைவான உணவாதலால், எடையை குறைக்க இது மிகவும் ஏற்ற உணவு.