Home ஆண்கள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் விந்தணுக்கள் எண்ணிக்கை குறையுமா?

நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் விந்தணுக்கள் எண்ணிக்கை குறையுமா?

45

கடந்த பத்தாண்டு காலகட்டத்தில் ஆண்களின் விந்தின் தரம் படிப்படியாகக் குறைந்துவருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான முக்கியமான காரணம் என்ன என்பது இன்னும் பிடிபடவில்லை, இதைப் பற்றிய விவாதங்கள் இன்றளவும் தொடர்கின்றன.
நீண்ட காலமாக அதிக உடலுழைப்பின்றி இருப்பதும் உட்கார்ந்தே வேலை செய்து வருவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்க வாய்ப்புள்ளது என்று கருதப்படுகிறது.

விந்தின் தரமும் தொலைக்காட்சி பார்க்கும் பழக்கமும் (Semen Quality and Television viewing)
ஹார்வார்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்று பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் இதழில் வெளிவந்தது. 18 முதல் 22 வயது வரையுள்ள ஆரோக்கியமான வாலிபர்கள் 189 பேரைக் கொண்டு நடத்தப்பட்ட அந்த ஆய்வில், தொலைக்காட்சி பார்ப்பது மற்றும் உடலுழைப்பு ஆகிய இரண்டுக்கும், விந்தின் தரம் குறைவதற்கும் தொடர்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த ஆய்வில் கண்டறியப்பட்ட முக்கியமான விஷயங்களில் சில:
வாரத்திற்கு 20 மணிநேரத்திற்கும் அதிகமாக தொலைக்காட்சி பார்த்த ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையானது, தொலைக்காட்சி பார்க்காத ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையைவிட 44% குறைவாக இருந்தது.

வாரத்திற்கு 15 மணிநேரம் அல்லது அதிக நேரம் உடற்பயிற்சி செய்த ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையானது, வாரத்திற்கு 5 மணிநேரத்திற்கும் குறைவாக உடற்பயிற்சி செய்த ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையைவிட 73% அதிகமாக இருந்தது.

உடலுழைப்பு (Physical Activity)
உடலுழைப்பு குறைவாக இருப்பதற்கும் விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கும் தொடர்பு இருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. உடலுழைப்பு போதிய அளவு இருந்தால் நீரிழிவுநோய், உடல் பருமன், இதயம் இரத்த நாளம் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவை வரும் வாய்ப்பு குறைவதுடன் பல்வேறு நன்மைகளும் கிடைக்கும். அதே சமயம் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பொருள் திறன் சமநிலையின்மைக்கும் உடலுழைப்புக்கும் தொடர்புள்ளது. பல்வேறு நோய்கள் மட்டுமின்றி ஆண்களின் மலட்டுத்தன்மையிலும் இந்த சமநிலையின்மை முக்கியப் பங்கு வகிக்கிறது.

அதே சமயம், அளவுக்கு அதிகமான கடுமையான உடற்பயிற்சியாலும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அறியப்பட்டுள்ளது. தொடர்ந்து மிதமான அளவு உடற்பயிற்சி செய்வது, எதிர்விளைவை ஏற்படுத்தக்கூடிய ஆக்சிஜன் பொருள்கள் உற்பத்தியாவதைத் தடுத்து, ஆக்சிஜனேற்ற சேதத்திலிருந்து ஆண்களின் கருச்செல்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்க உதவும்.

விதைப்பை வெப்பநிலை (Scrotal Temperature)
அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்வதால் விதைப்பையின் வெப்பநிலை சிறிய அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. விதைப்பையின் வெப்பநிலை அதிகரித்தால், விந்தணுக்களின் உற்பத்தி குறையலாம்.
விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதால் ஆண்களின் குழந்தை பெறும் திறன் குறையும். ஆனாலும் இந்தப் பாதிப்பு ஏற்பட்ட ஆண்களும் குழந்தை பெற முடியும்.

இறுதிக் கருத்து (Conclusion)
தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தைக் குறைத்து, நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்வதைத் தவிர்த்து, தொடர்ந்து மிதமான அளவு உடற்பயிற்சி செய்துவந்தால், இனப்பெருக்க வயதுள்ள ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.