வாழ்க்கையில் எப்போது என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியுமா என்ன! நீங்கள் வழக்கமாக உடற்பயிற்சி செய்பவராக இருக்கலாம். திடீரென்று ஒரு இடைவெளி வருகிறது – உடல்நலக் குறைவோ, விபத்தோ, திருமணமோ, வேலை விஷயமான பயணமோ எதுவாகவும் இருக்கலாம். இதனால் ஏற்படும் இடைவெளியால் உங்கள் உடல்நலம் குறித்த குறிக்கோள்களை அடைவதில் தடங்கல் ஏற்படலாம், உடற்பயிற்சி செய்ய முடியாமல் போகலாம். இந்தத் தடங்களில் இருந்து எப்படி மீண்டு வருவது? மீண்டும் உங்கள் தினசரி உடற்பயிற்சியைத் தொடங்க இதோ உங்களுக்காக 10 குறிப்புகள்.
முதலில் தொடங்குங்கள் (Just Get Moving)
நீண்ட நாட்கள் உடற்பயிற்சி செய்யாமல் இருந்துவிட்டு மீண்டும் தொடங்கும்போது, ஆரம்பத்திலேயே அதிக எடை தூக்க நினைத்தால் சிரமமாக இருக்கலாம். லேசாக தூண்டுவதற்காக கொஞ்சம் கொஞ்சமாகத் தொடங்குவது நல்லது. உங்கள் ரன்னிங் ஷூக்களை அணிந்துகொண்டு ஒரு நடை பயிற்சி சென்று வாருங்கள், அல்லது ஒரு ரவுண்ட் ஜாகிங் சென்று வாருங்கள். இது நீங்கள் மீண்டும் பழைய நிலைக்கு வர உதவும்.
எண்டோர்பினுக்கு நன்றி சொல்லுங்கள்! (Thank those Endorphins)
உடற்பயிற்சி செய்யும்போது, நல்ல ஹார்மோன்கள் வந்து உடல் எவ்வளவு புத்துணர்ச்சியாகவும் தெம்பாகவும் இருந்தது என்பதை நினைத்துப் பார்த்தால் மீண்டும் வழக்கம்போல் உடற்பயிற்சி செய்ய உங்களுக்கு ஊக்கம் கிடைக்கும். உங்கள் உடல்நலத்தில் உடற்பயிற்சி ஏற்படுத்தும் நல்லவிதமான மாற்றங்களைக் கண்டதும், ஏன் இவ்வளவு நாள் உடற்பயிற்சி செய்யாமல் விட்டோம் என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். விரைவில் வழக்கம்போல் சிறப்பாக உடற்பயிற்சி செய்ய இது உங்களை ஊக்குவிக்கும்.
நண்பரையும் சேர்த்துக்கொள்ளுங்கள் (Get an Exercise Buddy)
உங்களுடன் ஜிம்முக்கு வருபவர் இதற்கு சரியான ஆளாக இருப்பார். காலையில் அவர் ஜிம்முக்குச் செல்லும்போது உங்களை ஃபோன் செய்து எழுப்புமாறு நினைவுபடுத்துங்கள். ஒருவருக்கொருவர் எவ்வளவு ஃபிட்டாக இருக்கிறீர்கள் என்பதைப் பார்ப்பதே இருவரையும் ஆரோக்கியமான போட்டியில் ஈடுபட ஊக்குவிக்கும்.
கலவையான உடற்பயிற்சி (Mix up the Routine)
பளு தூக்குவது சலிப்பாக இருந்தால், உங்கள் தினசரி பயிற்சியில் பல்வேறு வகை பயிற்சிகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள். தபதா பூட் கேம்ப் செல்லலாம் அல்லது ஹிப்-ஹாப் டான்ஸ் பயிற்சி செய்யலாம். மகிழ்ச்சி நிறைந்த, உற்சாகமான உடற்பயிற்சிகள் உங்களுக்கு மற்ற பயிற்சிகளை விட அலாதியான உற்சாகத்தைத் தரும். அதாவது, உடலை வருத்தும் கடுமையான ஹார்ட்-கோர் உடற்பயிற்சிகளை விடுத்து மகிழ்ச்சி தரும் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.
நிறுத்த வேண்டாம் (Don’t Break it off)
உடற்பயிற்சி செய்வதையே முற்றிலும் நிறுத்திவிட்டால், மீண்டும் பழைய வேகத்தை அடைய அதிக சிரமப்பட வேண்டி இருக்கும். ஆகவே, உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை விடாமல் தொடருங்கள். பயணம் செய்தாலும், எளிய உடற்பயிற்சிகளையாவது தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் அறையில் உடற்பயிற்சி செய்யலாம், யோகாசனங்கள் செய்யலாம், நீந்தலாம் அல்லது நடை பயிற்சி செய்யலாம். உங்கள் உடல் எப்போதும் போல சுறுசுறுப்பாக இருக்கவும் பயணம் முடிந்ததும் உங்கள் வழக்கமான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்யவும் இது உதவும்.
ஒரு மாதம் விடாமல் தொடர வேண்டும் (Commit for a Month)
ஒரு செயல் பழக்கமாக மாற 21 நாட்கள் ஆகும் என்று கூறுகின்றனர். ஆகவே, என்ன நடந்தாலும் விடாமல் தொடர்ந்து ஒரு மாதமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கவும். 20 நிமிடங்கள் தான் உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்றாலும் சரி, பரவாயில்லை. அந்த 20 நிமிடங்களைத் தவறாமல் செய்யுங்கள். இது ஒரு முதலீடு என்று நினைத்துக்கொள்ளுங்கள்!
ஓய்வு நேரங்களில் உடற்பயிற்சி (Schedule it During Leisure Hours)
நாக்கு வறண்டு போகும் ப்ரெசன்டேஷன் கொடுக்கும் முன்பு உடற்பயிற்சி செய்வது தேவையற்ற களைப்பை உண்டாக்கும். அதுமட்டுமின்றி, மன அழுத்தத்துடன் உடற்பயிற்சி செய்வதால் உடற்பயிற்சியும் சரியாக நடக்காது. உங்கள் உடற்பயிற்சி நேரத்திட்டத்தை கவனமாக வடிவமைக்கவும். பொதுவாக, விடியற்காலை அல்லது வேலை முடித்துவிட்டு வந்த பிறகு மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது சிறந்தது.
தடைகளைக் கண்டுபிடித்து தகர்த்தெறியுங்கள் (Identify the Deterrents)
விடியற்காலையில் உடற்பயிற்சியைத் தொடங்க விடாமல் தடுப்பது எது என்று கண்டுபிடியுங்கள். அதற்கான மூல காரணம் எது என்று கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். சோம்பலாக இருக்கலாம், உடற்பயிற்சி உபகரணமாக இருக்கலாம் அல்லது வெப்பம் கூட உங்களை உடற்பயிற்சி செய்யவிடாமல் தடுக்கும் காரணமாக இருக்கலாம். மூல காரணத்தைக் கண்டுபிடித்ததும், அதனைச் சரி செய்து உங்கள் சூழ்நிலையை மேம்படுத்துங்கள்.
சீக்கிரம் சாப்பிட வேண்டும் (Eat early)
உடற்பயிற்சியும் உணவுப் பழக்கமும் ஒன்றையொன்று சார்ந்தது என்று நமக்குத் தெரியும். ஆகவே, உங்கள் உணவில் கவனமாக இருக்கவும். ஆரோக்கியமான உணவு வகைகளைத் தேர்வு செய்து சாப்பிடுங்கள், கடைசி வேளை உணவை மாலை 7 மணிக்குள் முடித்துவிடுங்கள். நல்ல ஊட்டச்சத்து இருந்தால் உங்கள் உடற்பயிற்சியும் சிறந்த பலனளிக்கும்.
உங்களுக்கே பரிசு கொடுத்துக்கொள்ளுங்கள் (Reward Yourself)
ஃபிட்னஸ் குறிக்கோள்களை அடையும் ஒவ்வொரு முறையும் உங்களுக்கு நீங்களே ஏதேனும் பரிசு கொடுத்துக்கொள்வது உடற்பயிற்சியை விடாமல் தொடர ஊக்குவிக்கும். அது ஃபெஷியல், ஸ்பா அல்லது புதிய ஆடை என்று எதுவாகவும் இருக்கலாம். அளவான சின்ன ட்ரீட் வைத்துக்கொள்ளலாம் அல்லது உங்களுக்குப் பிடித்த டெசர்ட் வகைகளை விருப்பம்போல் சாப்பிடலாம் (எப்போதாவது). உங்கள் ஃபிட்னஸ் குறிக்கோளை அடைந்ததும் என்ன கிடைக்கும் என்ற மனதின் ஆசையைப் பயன்படுத்தி ஊக்கம் பெறுவதுதான் இதன் நோக்கம்.
வழக்கம் போல உடற்பயிற்சி செய்யத் தொடங்கிவிட்டதும், நீங்களே உறுதியாக உணர்வீர்கள், அந்த உணர்வே மேலும் மேலும் முன்னேற ஊக்கம் கொடுக்கும். இன்றே முயற்சி செய்யுங்கள்!
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள மருத்துவ விவரங்கள் தகவலுக்காக மட்டுமே. உடல்நலம் சார்ந்த எந்த முடிவுகளையும் எடுக்கும் முன் அல்லது குறிப்பிட்ட மருத்துவ நிலை பற்றிய வழிகாட்டலுக்கு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.