Home உறவு-காதல் நட்பு காதலாவதற்கு முன்னால் கேட்டுக் கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள்!

நட்பு காதலாவதற்கு முன்னால் கேட்டுக் கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள்!

43

‘நட்பு நட்பு தான் காதல் காதல் தான்’ என்று பாடிய காலமெல்லாம் மலையேறிவிட்டது. இன்றைய இளைஞர்கள் அதே பாடலில் வரும் ‘நட்பின் வழியிலே காதல் வளருமே’ என்ற வரியை கச்சிதமாக பிடித்துக் கொண்டனர்.
காதல் கதைகளை கேட்க ஆரம்பித்தால் பெரும்பாலான கதைகளில், முதலில் நட்பாக பேசினோம்… அப்படியே பழக பழக அது காதலாக மாறிவிட்டது என்று சொல்வார்கள். நட்பை காதலாக எடுத்துச் செல்லவதற்கு முன்னாள் உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய ஐந்து முக்கிய கேள்விகள்.

முதல் கேள்வி :
என்ன தான் பல ஆண்டுகள் பழகியிருந்த நட்பாக இருந்தாலும் அவரது சில குணங்கள் உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். திடீரென்று நடந்த ஏதேனும் சம்பவம் அவர் மீது உங்களுக்கு விருப்பத்தை அதிகப்படுத்தியிருக்கலாம். அதற்காக உடனே அதனை காதலாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
அவரின் குறைகள் பற்றி முழுவதும் உங்களுக்கு தெரியும் என்பதால் அவரும் சங்கடப்படுவார். என்ன குறைகள் இருந்தாலும் அதனை ஏற்கும் பக்குவம் உங்களுக்கு இருக்கிறதா என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

இரண்டாம் கேள்வி :
இருவரும் சேர்ந்து பேசிய விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். நட்பாக இருந்த போது பேசிய விஷயத்தை காதலிக்க ஆரம்பித்ததும் மாற்றுவதோ அல்லது சந்தேகப்படுவதோ சண்டையிடுவதோ வைத்துக் கொள்ளாதீர்கள்.
நட்பினை காதலாக மாற்றும் போது, அவர்களுடைய அணுகுமுறையும் மாறும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

மூன்றாம் கேள்வி :
காதலில் மிக அடிப்படையான விஷயம் புரிதல் தான். நட்பில் இருக்கும் போது அவரது தேவையை இருப்பை அவ்வளவாக உணர்ந்திருக்க மாட்டீர்கள். கேங் என்ற சொல்லுக்குள் ஒரு ஆளாகத்தான் அவர் இருந்திருப்பார்.
ஆனால் காதல் எனும் வரும் போது உங்களுடைய எதிர்ப்பார்ப்புகள் அதிகரிக்கும். உங்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்று விரும்புவீர்கள். இதனால் இருவருக்குள்ளும் மனஸ்தாபம் ஏற்படலாம். இதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்கிறதா? என்பதை கேட்டுக் கொள்ளுங்கள்.

நான்காவது கேள்வி :
காதலின் ஸ்திரத்தன்மைக்கு இந்த விஷயம் மிகவும் முக்கியம். நம்பிக்கை, நல்லதும் கெட்டதுமாக வாழ்க்கையில் நடந்த எல்லா சம்பவங்களுமே ஒருவரைப்பற்றி ஒருவருக்கு முழுவதும் தெரிந்திருக்கும்.
எல்லாம் தெரிந்திருந்தும் நான் என் இணையை முழுவதுமாக நம்புகிறேன் என்று உங்களால் ஏற்க முடிகிறதா என்று யோசனை செய்து பாருங்கள்.
பிறிதொரு நாளில், நண்பர்களாக இருந்த போது இப்படிச் சொன்னாயே, இப்படி நடந்து கொண்டாயே என்று கேட்பீர்களானால் நட்பாய் தொடர்வதே சிறந்தது.

ஐந்தாவது கேள்வி :
கடைசிக் கேள்வி மிக முக்கியமான கேள்வியும் கூட. இது உண்மையிலேயே காதலா அல்லது அந்த நட்பு நம்மை விட்டு விலகிடக்கூடாது என்கிற ஏக்கமா என்பதை பிரித்து உணருங்கள்.
புதிய நட்புகள் கிடைத்ததும் உங்களை தவிர்க்கும் போது, அந்தப் பிரிவை சமாளிக்க முடியாமல் கூட நீங்கள் இந்த முடிவை எடுத்திருக்கலாம். அல்லது அவரது ஏதேனும் ஒரு குணம் மட்டும் பிடித்திருக்கலாம். இது காதல் தானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.