திருமணம் என்ற பந்தத்திற்குள் எத்தனையோ விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. திருமணம் என்பது ஒரு ஆணையும், பெண்ணையும் மட்டும் இல்லறத்திற்குள் இணைப்பது அல்ல. அவர்கள் மூலமாக அவர்களது குடும்பங்களும் உறவுகளாக மாறுவதற்கான ஒரு அடிப்படை பாலமாகும்.
பல வெளிநாட்டு மக்கள் இந்தியாவைப் போல ஒருவனுக்கு ஒருத்தி என காலம் முழுக்க வாழ வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் நாமோ, நமது கலாச்சாரத்தின் அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல், வெளிநாட்டு மக்களைப் போல திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழும் முறையை தத்தெடுத்துக் கொள்ள நினைக்கிறோம்.
திருமணம் இன்றி கணவன் மனைவி `போல’ வாழ்வது அவர்களுக்கு வேண்டுமானால் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களது குடும்பத்திற்கும், அவர்களுக்குப் பிறகு வரும் சமுதாயத்திற்கும் இது ஒரு பெரிய கேள்விக்குறியாகிவிடும் என்பதை நினைவு கூற வேண்டும்.
ஒருத்தனுக்கு ஒருத்தியாக வாழும் நமது தாம்பத்திய உறவுகளில் எத்தனையோ விட்டுக் கொடுத்தல்களும், புரிந்துணர்வுகளும், எழுதப்படாத ஒப்பந்தங்களும், சகிப்புத் தன்மையும் வேரூன்றி உள்ளது. இதனால்தான் எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் கணவனோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று நம் நாட்டுப் பெண்கள் நினைக்கின்றனர்.
கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கு ஒரு சுமூகமான முடிவினைத் தரலாம் என்றுதான் நமது திருமண பந்தங்கள் நினைக்கின்றன. ஆனால், இதுபோன்று திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் `தம்பதிகள்’ அவர்களுக்குள்ளாகவே ஒரு பிடிப்பு இன்மையையே அவர்களது நிலைப்பாடு உணர்த்துகிறது.