Home பெண்கள் உடல் கட்டுப்பாடு ஜோக்கிங்கின் போது கவனிக்க வேண்டியவை

ஜோக்கிங்கின் போது கவனிக்க வேண்டியவை

23

joggingஜோக்கிங்கிற்கு தேவையான மிகவும் அடிப்படைப் பொருள் ஒரு ஜோடி ஷூக்கள். வெறும் காலால் ஓடுவது விரைவில் பலவகையான இன்னல்களுக்கு உங்களை ஆளாக்கக் கூடும். ஓடும் பாதையிலுள்ள முட்கள், கண்ணாடித் துண்டுகள், பழைய ஆணிகள் உங்கள் கால்களுக்கு ஊறு விளைவிக்கக்கூடும்.

எனவே நல்ல ஷூக்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது மிகவும் சிறந்ததாகும். ஜாக்கிங் போகும் பொழுது அணியும் ஆடைகள் பருத்தியினால் ஆன ஆடைகளாக இருந்தால் மிகவும் சிறந்ததாகும். பொதுவாக வியர்வையை நன்கு உறிஞ்சும் தன்மையுள்ள பருத்தியினால் ஆன டி.ஷர்ட்களை அணிவது சிறந்ததாகும். ஜாக்கிங்கின் போது நாம் அணியும் ஆடையானது ஓட்டத்தைத் தடை செய்யாதவாறு கொஞ்சம் தளர்ச்சியாக இருப்பது நலமாகும். உங்கள் வசதிக்கு ஏற்ப அரைக்கால் சட்டையோ, அல்லது முழுக்கால் சட்டையோ நீங்கள் அணிந்து கொள்ளலாம்.

அதிகாலை வேளையில் வீசும் குளிரான காற்று உங்கள் உடலை நேரிடையாகத் தாக்காதவாறு உங்கள் ஆடைகள் இருக்க வேண்டும். நீங்கள் பெண்ணாக இருந்தால் பருத்தியால் ஆன சல்வார்கம்மீஸ் ஆடை மிகவும் சிறந்த ஆடையாகும். ஜோக்கிங் செய்வதற்கு அமைதியான பூங்கா, திறந்த வெளி, நன்கு செம்மைப்படுத்தப்பட்ட மைதானங்கள், நகரிலுள்ள பந்தயத் திடல் மைதானங்கள், விளையாட்டுத்திடல்கள் போன்ற இடங்கள் ஏற்ற இடங்களாகும். ஜாக்கிங்கிற்காக நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாதையானது கரடு முரடாக இல்லாமல் சமதளமாக இருப்பது மிகவும் முக்கியமாகும்.

கரடு முரடான பாதைகள் பயிற்சி செய்தால் சில நாட்களில் உங்கள் மூட்டுக் காலில் கடுமையான வலியை ஏற்படுத்தக் கூடும். மேலும் போக்குவரத்துக்கள் அதிகமுள்ள சாலைகளும் ஜோக்கிங் செய்வதற்கு ஏற்ற இடமல்ல. ஏனென்றால், பலவகையான ஊர்திகளிலிருந்து வெளிவரும் கார்பன்-மோனாக்ஸைடு என்ற தீய வாயு உங்கள் உடலின் நலத்தை நாளடைவில் கெடுத்து விடும். போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள சாலைகளில் நீங்கள் ஓடும் பொழுது பின்னால் ஊர்திகள் வருகின்றனவா? இல்லையா? என அடிக்கடி உங்கள் கழுத்தைத் திருப்பிப் பார்க்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்குவதால் உங்கள் கழுத்தில் நிரந்தர வலியை ஏற்படுத்தக் கூடும்.

நம் நாட்டு சூழலில் ஜோக்கிங் செய்வதற்கு சிறந்த நேரம், காலையில் 8 மணிக்கு முன்பும், மாலை 5 மணிக்குப் பின்பும். மாலைப் பொழுதை விட விடியல் பொழுதுதான் மிகவும் சிறந்த வேளையாகும். ஏனென்றால் காலைப் பொழுதில் வீசும் இலேசான இளம் தென்றலும், மாசுபடியாத நிலையில் இருக்கும் தூய்மையான காற்றும் உங்கள் உடலுக்கு நல்லது.