குழந்தைகளுக்கு திடீரென்று மூக்கில் அடிபடாமல், காயம் எதுவும் ஏற்படாமல், மூக்கிலிருந்து இரத்தம் வடியும். இதை ‘சில்லுமூக்கு’ என்று சொல்வர். நமது மூக்கு பார்ப்பதற்குத்தான் பலமானது போல் தோன்றுகிறதே தவிர. உள்ளுக்குள் அது மிக மென்மையானது. அதுவும் குழந்தைகளது மூக்கு மிகவும் மென்மையானது. இந்த இடத்தை லேசாக சீண்டினால் கூட மூக்கிலிருந்து இரத்தம் கொட்டிவிடும். மூக்கிலிருந்து இரத்தம் வடிவதற்கு 80 சதவீதக் காரணம் இந்தப் பகுதியில் உண்டாகும் கோளாறுதான். இதனால் உயிருக்கு எந்த ஆபத்தும் வராது.
என்ன காரணம்?
குழந்தைகளுக்கு ஒவ்வாமை காரணமாக அடிக்கடி ஜலதோஷம், மூக்கில் சளி ஒழுகும். அப்போது மூக்கினுள் அளவுக்கு அதிகமாக ஈரத் தன்மை காணப்படும். இதனால் மூக்கில் வெடிப்புகள் தோன்றும். அப்போது மூக்கிலிருந்து இரத்தம் வடியும்.
மூக்கிலிருந்து சளியை வெளியேற்ற மூக்கைப் பலமாகச் சிந்துவார்கள். இதனாலும் இரத்தக் குழாய்கள் வெடித்து இரத்தம் வரலாம்.
மூக்கு அடைத்துக் கொள்ளும் போது அடைப்பை விலக்க குழந்தைகள் அடிக்கடி மூக்கைக் குடைவார்கள். இதனாலும் மூக்கிலிருந்து இரத்தம் கொட்டும்.
குழந்தைகள் விளையாட்டாக குச்சி, பேப்பர், ரப்பர், பஞ்சு, பிளாஸ்டிக் பொருள்கள் முதலிய பொருள்களை மூக்கில் திணித்துக் கொள்வார்கள். இவை மூக்கினுள்ளே ஊறி, புடைத்து, புண் ஏற்படுத்தும். அப்போது அந்த புண்ணிலிருந்து இரத்தம் கசியும்.
மூக்குக்கு மிகுந்த குளிர்ச்சியும், மிகுந்த வெப்பமும் ஆகாது. குளிர்காலங்களில் குளிர்ந்த காற்றைச் சுவாசித்தாலும், கோடையில் வெப்பம் மிகுந்த காற்றைச் சுவாசித்தாலும், மூக்கில் இரத்தம் வடியும்.
இரத்தம் வருவதை நிறுத்த என்ன செய்யலாம்?
குழந்தையை லேசாகத் தலையைக் குனிந்து உட்காரச் சொல்லி, வாயைத் திறந்து மூச்சுவிடச் சொல்ல வேண்டும்.
மூக்கின் இரண்டு துவாரங்களையும் பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரல்களால் பத்து நிமிடங்களுக்குத் தொடர்ச்சியாகப் அழுத்தமாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். இரத்தம் வடிவது நின்றுவிடும்.
பஞ்சு அல்லது சுத்தமான துணியைக் நீரில் நனைத்து, மூக்கினுள் அழுத்தமாகத் திணித்து, மூக்கை அடைக்கலாம். அப்படியும் இரத்தம் வடிவது நிற்கவில்லை என்றால், இரத்தம் மூக்கின் மேற்பகுதியிலிருந்து தான் வருகிறது, அதற்கு உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
என்ன செய்யக்கூடாது?
1. மூக்கைச் சிந்தக்கூடாது.
2. விரலை நுழைத்து அடைக்கக் கூடாது
3. மருத்துவர் சொல்லாமல் எந்த சொட்டு மருந்தையும் மூக்கில் விடக்கூடாது.
ஆகவே குழந்தைகளை பத்திரமா பாத்துக்கோங்க!!!