Home சூடான செய்திகள் செல்பேசி : மாணவர்களிடம் பரவும் பாலியல் வக்கிரம் !

செல்பேசி : மாணவர்களிடம் பரவும் பாலியல் வக்கிரம் !

45

touch-phoneசம்பவம் – 1

சேகர் கல்லூரி இறுதியாண்டில் படிக்கும் மாணவன். சுமதி நடுத்தர வயதை எட்டிய திருமணமனவர் – இரண்டு பிள்ளைகளின் தாய். இருவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள். இருவரின் குடும்பத்தாரும் நட்பாகப் பழகக் கூடியவர்கள். சுமதியின் செல்பேசி எண் தற்செயலாக சேகருக்குக் கிடைக்கிறது. சுமதியின் செல்போனுக்கு ஆரம்பத்தில் நலம் விசாரிக்கும் குறுந்தகவல்களை அனுப்பத் துவங்கும் சேகர், கொஞ்சம் கொஞ்சமாக நகைச்சுவைத் துணுக்குகளை அனுப்புகிறான். ஒரு கட்டத்தில் சேகரின் செல்பேசியிலிருந்து ஆபாசமான நகைச்சுவைத் துணுக்குகள் அனுப்பப்படுகின்றன. இந்த ‘நட்பு’ ஒரு சில மாதங்களிலேயே மணிக்கணக்கில் செல்போனில் பேசிக்கொள்ளும் அளவுக்கு முன்னேறுகிறது.

சாதாரணமாகத் துவங்கும் பேச்சு ஒரு கட்டத்தில் ஆபாசமான உரையாடல்களாகவும், தனிப்பட்ட பாலியல் உறவாகவும் மாறுகிறது. ஒரு நாள் கணவனுக்குத் தெரியாமல் சுமதி சேகரோடு வீட்டை விட்டு வெளியேறுகிறார். மனைவியைக் காணாத சுமதியின் கணவன் போலீசில் புகார் தெரிவிக்கிறார். ஒரு வாரம் கழித்து பக்கத்து நகரத்தில் இருவரும் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். இன்று இரண்டு குடும்பத்தாரும் மானம், மரியாதையைத் தொலைத்து விட்டு வதையுடன் வாழ்கின்றனர்.

சம்பவம் – 2

குமார் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன். கவிதா திருமணமான பெண் – இதற்கு மேல், சம்பவம் ஒன்றில் விவரிக்கப்பட்டிருக்கும் காட்சிகளை அப்படியே பெயர்த்தெடுத்து இங்கும் பொருத்திக் கொள்ளலாம். ஒரே வித்தியாசம், இங்கே கதையின் முடிவில் போலீசு வரவில்லை. கவிதா வீட்டிலிருந்து களவாடிச் சென்ற காசும், இருவரின் காமமும் தீர்ந்து போன பின் ‘காதல்’ ஜோடிகள் தாமே திரும்பி வந்து விட்டனர்.

(குறிப்பு : இந்த சம்பவங்களில் வரும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)

டச் போன்சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் சிலரைச் சந்தித்து மாணவர்களிடையே செல்பேசிகள் மற்றும் நவீன தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் கலாச்சார தாக்கத்தின் விளைவுகள் பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம். உரையாடலின் போது அவர்கள் தெரிவித்த சம்பவங்கள் அனைத்தும் இந்த ரகம்தான்.

தற்போது பெருநகரங்களின் மாணவர்களிடையே செல்பேசி ஒரு அத்தியாவசியப் பொருளாகவும், அந்தஸ்தின் அடையாளமாகவும் மாறியுள்ளது. எட்டாம் வகுப்பு மாணவர்கள் கூட சொந்தமாக செல்பேசிகள் வைத்துள்ளனர். வசதி படைத்தவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றில்லாமல், அடித்தட்டு வர்க்கங்களைச் சேர்ந்த மாணவர்களும் கூட சொந்தமாக செல்பேசிகள் வைத்திருக்கின்றனர். செல்பேசிகள் என்றால் சாதாரணமாக பேசுவதற்காக மட்டும் பயன்படுத்தப்படும் கருப்பு வெள்ளைக் கருவிகள் அல்ல – இணையப் பயன்பாடு மற்றும் வீடியோக்களை காண்பதற்கு ஏதுவாக சந்தையில் விற்கப்படும் விலை அதிகமான தொடுதிரை செல்பேசிக் கருவிகள் (touch phones).

வசதி படைத்த மாணவர்கள் தங்கள் பெற்றோரை நச்சரித்து, விலையுயர்ந்த செல்பேசிகளை வாங்கிக் கொள்கிறார்கள். வசதியற்ற மாணவர்களோ இது போன்ற செல்பேசிக் கருவிகளை வாங்க பள்ளி, கல்லூரி நேரம் போக சின்னச் சின்ன வேலைகளுக்குச் செல்கிறார்கள். காலையில் பேப்பர் போடுவது, மாலையில் கொரியர் கம்பெனிகளில் வேலை செய்வது என்று கிடைக்கும் வேலைகளைச் செய்து சேர்க்கும் காசில் செல்பேசிகளை வாங்குகிறார்கள். இந்தளவு மெனக்கெடத் தயாரில்லாத சில கல்லூரி மாணவர்களோ, இதற்காகவே சிறு சிறு திருட்டுக்களில் ஈடுபடுவது, வேறு கல்லூரிகளில் படிக்கும் வசதியான மாணவர்களிடம் அடித்துப் பறிப்பது, செயின் அறுப்பது என்று எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருப்பதாக அம்மாணவர்கள் தெரிவித்தனர்.

உலகம் புரியாத விடலைப் பருவம்; உணர்ச்சிகளைக் கையாளப் பழகியிராத இரண்டுங்கெட்டான் வயது; சமூகப் பாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியிராத பொறுப்புணர்வற்ற வளர்ப்பு முறை; பொருளாதார பிரச்சினைகளைச் சமாளிக்க வேலையைத் துரத்தும் பெற்றோரால் கவனிக்கப்படாமல் விடப்படுவது; அதிகரித்து வரும் நுகர்வுக் கலாச்சாரம் மற்றும் தனிநபர் வாதம் – இவற்றோடு சேர்த்து கையில் அதிநவீன தகவல் தொழில்நுட்பம். இந்தக் ரசாபாசமான கூட்டுக்கலவை என்பது தவிர்க்கவியலாதபடிக்கு மாணவ சமுதாயத்தை திறந்து வைக்கப்பட்டிருக்கும் அசிங்கமான உலகம் ஒன்றின் வாசலுக்குள் தள்ளி விடுகிறது.

இம்மாணவர்களில் அநேகமானோர் முக நூல் (facebook) கணக்கு வைத்துள்ளனர். செல்பேசியில் கிடைக்கும் இணையத்தை அறிவைத் தேடித் தெரிந்து கொள்வதற்காகவோ, கல்வி சம்பந்தப்பட்ட துறை வாரியான தகவல்களைத் தேடிப் படிப்பதற்காகவோ இவர்கள் பயன்படுத்துவதில்லை. முக நூலில் பெண்களை நட்பாக்குவது, அவர்களோடு ஆபாசமாக உரையாடுவது (chat), ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களைப் பரிமாறிக் கொள்வது போன்றவைகளுக்காகவே பிரதானமாகப் பயன்படுத்துகிறார்கள். அவ்வகையில் செல்பேசி என்பது மலிவான “போர்னோ” (pornography – பாலியல் வெறியைத் தூண்டும் படங்கள் — இலக்கியம்) கிடைக்கும் கருவியாகிவிட்டது.

செல்பேசியில் இணைய வசதி மிக மலிவாகக் கிடைக்கிறது. ஒரு நாள் முழுவதும் செல்பேசியில் இணையம் பயன்படுத்த வகைசெய்யும் ஐந்து ரூபாய் ரீசார்ஜ் கூப்பன்களை பெரும்பாலான செல்போன் நிறுவனங்கள் வழங்குகின்றன. பெற்றோர் பேருந்துக் கட்டணத்திற்காகவும், கைச் செலவுகளுக்காகவும் கொடுக்கும் காசை மிச்சப்படுத்தினால இணையச் செலவுகளை ஈடுகட்டிக் கொள்ளலாம். ஆபாச இணையதளங்களில் இருந்து வீடியோக்களைத் தரவிறக்கம் செய்யும் இம்மாணவர்கள், அவற்றை நண்பர்களோடு பரிமாறிக் கொள்கிறார்கள். வகுப்பறையில் பாடம் நடந்து கொண்டிருக்கும் போதே மேஜைக்கடியில் வைத்து இது போன்ற வீடியோக்களைப் பார்க்கவும் தயங்குவதில்லை.

இணையத்தின் மெய்நிகர் அனுபவங்களில் தோய்ந்தெழுவது அலுத்துப் போகும் போது, அதையே செயல்முறையில் பரீட்சித்துப் பார்க்க முற்படுகிறார்கள். அந்த வகையில் தான் தற்போது பெண்களோடு ஆபாசமாக உரையாடும் கலாச்சாரம் மாணவர்களிடையே வெகு வேகமாகப் பரவி வருகிறது. இப்படி உரையாடுவதற்கென்றே பிரத்யேகமான நட்பு வட்டங்களைத் தமக்குள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். தமது பகுதியில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த திருமணமான பெண்களின் செல்போன் எண்களை எப்படியோ அறிந்து கொள்ளும் மாணவர்கள், அதை இந்த நட்பு வட்டத்திலிருப்பவர்களோடு பரிமாறிக் கொள்கிறார்கள்.

முதலில் அந்த எண்ணுக்கு ஏதாவது அநாமதேயமான தொலைபேசி இலக்கத்திலிருந்து சாதாரண குறுந்தகவல்கள் போகும். அதற்கு என்னவிதமான எதிர்வினை வருகிறது என்பதைப் பொறுத்து மேற்கொண்டு தொடர்கிறார்கள். நல விசாரிப்பு குறுந்தகவல்கள், மெல்லிய நகைச்சுவைக் குறுந்தகவல்கள், மெல்லிய ஆபாச நகைச்சுவைகள் என்று கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொண்டே போய் ஒரு கட்டத்தில் மணிக்கணக்காக பேசுவது, ஆபாச நகைச்சுவைகளைச் சொல்வது, ஆபாசப் பேச்சு என்று வளர்த்து விடுகிறார்கள்.

பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் நடுத்தர, மேல் நடுத்தர வர்க்கங்களைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வாறு ‘நட்பாகும்’ பெண்களைத் தமது பாலியல் வக்கிரங்களைத் தீர்த்துக்கொள்ளப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளின் மாணவர்களோ, பிரதானமாக மிரட்டிப் பணம் பறிப்பதற்காக இதில் ஈடுபடுகிறார்கள். தனது செல்பேசிகளுக்கு ரீசார்ஜ் செய்து கொள்வது, அதிலேயே சினிமா டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து வாங்குவது, ஆடம்பரமான துணிமணிகள் வாங்கிக் கொள்வது, குடிப்பதற்கு காசு வாங்குவது என்று பணம் கறப்பதற்கான தேவைகள் நீள்கிறது. புதுப்புது பாணிகளில் முடிவில்லாமல் குவியும் நகரத்து வசதிகளை துய்ப்பதற்கான குறுக்கு வழியாக இத்தகைய விபரீதங்களை மாணவர்கள் செய்கிறார்கள்.

சக வயது மாணவிகளைக் ‘காதலிக்கும்’ ஒரு சில மாணவர்கள், அந்தக் காதலியை சினிமாவுக்கு அழைத்துச் செல்லவும், பரிசுப் பொருட்களை வாங்கித் தரவும், இன்னும் வேறு ‘காதல்’ நடவடிக்கைகளுக்கு ஆகும் செலவுகளையும் கூட தனது ஆபாசப் பேச்சுக் கூட்டாளியிடமிருந்து பெற்று சமாளித்துக் கொள்கிறார்களாம். ஒரு கட்டத்திற்கு மேல் குறிப்பிட்ட பெண்களோடு பேசுவது சலித்துப் போனால், தம்மிடம் உள்ள எண்களை நண்பர்களிடம் கொடுத்து அதற்குப் பதிலாக வேறு எண்களை வாங்கிக் கொள்கிறார்கள்.

ஆபாசப் பேச்சுக் கலாச்சாரத்திற்கு ஆட்பட்டிருக்கும் மாணவர்கள் இதன் ஆபத்தான தொடர் விளைவுகள் பற்றிய பிரக்ஞையற்று இருக்கிறார்கள். கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட வாழ்க்கை முறை, பொறுப்புகளுக்காக வயதுக்கேற்ற கடமைகளை ஆற்றுவது, சமூகரீதியான ஒழுக்க நெறிகளைப் பின்பற்றுவது எல்லாம் பழங்கதைகளாகவும், கட்டுப்பெட்டித்தனங்களாகவுமே இவர்களால் நகைக்கப்படுகின்றன. மாணவர்களின் ஆதர்சங்களாய் வெள்ளித்திரையில் தோன்றும் நாயகர்கள் காட்டும் விட்டேத்தித்தனமும், சில்லறைத்தனமும், ஆணாதிக்க பொறுக்கித்தனமும் பொதுக் கலாச்சாரங்களாய் திரைக்கு வெளியே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

பழைய பாணி செல்பேசிகளை வைத்திருப்பவர்களைப் பார்த்து சூர்யாவும், மாதவனும் விளம்பரங்களில் எள்ளி நகையாடுகிறார்கள். செல்பேசி வைத்துக்கொள்ளாத மாணவர்கள் ‘நவ நாகரீக’ உலகத்தின் அங்கமாக மதிக்கப்படுவதில்லை. உடன் படிக்கும் மாணவர்களில் வசதியுள்ளவர்கள் ஆடம்பர நுகர் பொருட்களைத் துய்ப்பதன் மூலம் ஏற்படுத்தும் ‘முன்னுதாரணம்’ வாய்ப்பற்றவர்களிடம் ஏக்கத்தையும், வாய்ப்பை மறுக்கும் வரம்புகளை உடைத்தெறியும் வெறியையும் தோற்றுவிக்கிறது. விளைவாக, செல்போன் வாங்க செயின் அறுப்பும் – அதை ரீசார்ஜ் செய்ய ‘ஆண்டிகள்’ (ச்தணtதூ – அவர்களது மொழியில் நடுத்தர வயதுப் பெண்) தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதும் இவர்களிடம் எந்தவிதமான குற்றவுணர்ச்சியையும் ஏற்படுத்துவதில்லை.