Home ஆரோக்கியம் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் லவங்கப்பட்டை

சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் லவங்கப்பட்டை

24

Captureஇந்திய உணவுகளில், நறுமண உணவுப் பொருட்கள் முக்கிய இடம் பெறுகின்றன. இந்திய நறுமண உணவுப் பொருட்களுக்கு உலக அளவில் சிறந்த வரவேற்பு இருக்கிறது. நறுமணப் பொருட்கள் உணவுக்கு சுவையையும், மணத்தையும் மட்டும் தருவதில்லை. அவை நோய்த் தடுப்பாற்றலையும் தருகின்றன.

நாம் அன்றாடம் உண்ணும் உணவுப் பொருட்களில் நமது உடலுக்கு கேடு விளைவிக்கும் நஞ்சுப் பொருட்கள் கலந்திருக்கின்றன. அவை நமக்குத் தெரியாமலே உடலுக்குள் சென்றுவிடுகின்றன. அவைகளை உடலில் இருந்து நீக்கும் வேலையை நறுமண உணவுப் பொருட்கள் செய்கின்றன. அதன் மூலம் ஜீரண நலம் பாதுகாக்கப்படுகிறது. உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை உடலோடு சேர்க்கும் வேலையையும் நறுமணப் பொருட்கள் செய்கின்றன.

இத்தகைய பணிகளை சிறப்பாக செய்யும் நறுமண உணவுப் பொருட்களில் ஒன்று, லவங்கப்பட்டை.

இருமல், மூச்சிறைப்பு போன்ற நோய்களுக்கும் லவங்கப்பட்டை சிறந்த மருந்து.

200 மி.லி. நீரில், ஒரு தேக்கரண்டி லவங்கப்பட்டை தூள் கலந்து கொதிக்க வைத்து இறக்கி, அதில் சிறிதளவு தேன் கலந்து பருகினால் கபம் மற்றும் மூச்சிறைப்பு நீங்கும்.

இதன் தூளுக்கு தசைகளை வலுப்படுத்தும் தன்மை இருக்கிறது. அதனால் தசைகள் வலுவாகி தசை வலி மற்றும் மூட்டு வலி நீங்கும். இத்தகைய வலி இருப்பவர்கள் தினமும் அரை தேக்கரண்டி லவங்கத்தூளை காலை, மாலை இரு வேளை தேனில் கலந்து சாப்பிடவேண்டும்.

லவங்கப்பட்டையில் மாங்கனீஸ், கால்சியம், இரும்பு போன்ற தாது சத்துகள் இருக்கின்றன. அதனால் இது ரத்த சோகைக்கும்நல்ல மருந்தாகிறது.

லவங்கப்பட்டை, சுக்கு, ஏலக்காய் ஆகியவைகளை பொடிசெய்து வைத்துக் கொள்ளுங்கள். 100 மி.லி. நீரில் ஒரு தேக்கரண்டி பொடி சேர்த்து கொதிக்க வையுங்கள். சாப்பிட்ட பின்பு குடிநீராக அதை அருந்துங்கள். அருந்தினால் வயிற்று வலி, வயிற்று பொருமல், வயிற்றுக்கடுப்பு, கழிச்சல் போன்றவை நீங்கும்.

லவங்கப்பட்டை சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து. முக்கியமாக உணவு உண்ட பின்பு அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை இது கட்டுப்படுத்தும். இன்சுலின் செயல்படுவதை போன்று லவங்கப்பட்டையும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை உடல் செல்களுக்குள் செலுத்த உதவுகின்றது. லவங்கப்பட்டை தூளை தினமும் சிறிதளவு காலை, மாலை உணவிற்கு முன்பு சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும். ரத்த அழுத்தமும் கட்டுப்படும். கெட்ட கொழுப்பும் குறையும்.

பெண்களுக்கு சினைப்பையில் நீர்க்கட்டிகள் தோன்றினால், மாதவிலக்கு குளறுபடிகள் தோன்றும். அதனால் பாதிக்கப்படுகிறவர்கள், தினமும் இதனை காலை–மாலை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் குணம் கிடைக்கும். லவங்கப்பட்டை பிரசவித்த பெண்களுக்கும் ஏற்றது. குழந்தை பிறந்த பிறகு கருப்பையில் உள்ள கழிவுகளை நீக்கி, கருப்பை சுருங்குவதற்கும் உதவுகின்றது.

இந்த பட்டையில் இருந்து நறுமண எண்ணெய் தயாரிக்கிறார்கள். இந்த எண்ணெய்யை நுகர்ந்தால் மன அமைதியும், ஆழ்ந்த தூக்கமும் கிடைக்கும். தூக்கமின்மையால் துன்பப்படுபவர்கள் தினம் ஒரு தேக் கரண்டி லவங்கப்பட்டை தூளை தேனில் கலந்து சாப்பிட்டு வரலாம்.

இந்த பட்டையில் இருந்து தயாரிக்கப்படும் நறுமண எண்ணெய் இருமல் மற்றும் உடல்வலிக்கான மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. சோப்பு, பற்பசை மற்றும் வாய் துர்நாற்றத்தை போக்க பயன்படுத்தப்படும் பொருட்களிலும் இந்த எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

சித்த மருந்துகளான சூரணங்கள் மற்றும் லேகியங்களிலும் லவங்கப்பட்டை சேர்க்கப்படுகிறது.