Home ஆரோக்கியம் சர்க்கரை அதிகம் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் வருமா? சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ?

சர்க்கரை அதிகம் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் வருமா? சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ?

25

சர்க்கரை நோய் என்றதும், ஒருவர் அதிகம் சர்க்கரை சாப்பிட்டால் அவருக்கு சர்க்கரை நோய் வருமா என்கிற கேள்வி பலரின் மனதிலும் எழுவது இயற்கை.

உடல் ஆரோக்கியமாக இருக்கும் சராசரி மனிதர் ஒருவர் அன்றாட வாழ்க்கையில் சாப்பிடும் சர்க்கரை அல்லது இனிப்பின் அளவுக்கும் அவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கும் நேரடி தொடர்பில்லை என்கிறார்.

அதேசமயம், அவரது பெற்றோர் இருவருக்கும் நீரிழிவு நோய் இருந்து, அவர் உடற்பயிற்சி செய்யாதவராகவும் இருந்து, அவருடைய உடல் பருமனும் அதிகமாக இருக்கும் பட்சத்தில், அவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான மரபு காரணிகளும், சுற்றுப்புறக் காரணிகளும் அதிகபட்சமாக இருக்கும் பின்னணியில், ஒருவர் அதிகமாக சர்க்கரை சாப்பிட்டால், அது அவரது உடல் எடையை அதிகரிக்கச்செய்து, அதன் மூலம் நீரிழிவு நோய் வருவதை ஊக்குவிக்கும் காரணியாக இந்தக் கூடுதல் சர்க்கரை அமைவதற்கான சாத்தியம் இருக்கிறது.

உடல் ஆரோக்கியமாக இருக்கும் சராசரி மனிதர் ஒருவர் அன்றாட வாழ்க்கையில் சாப்பிடும் சர்க்கரை அல்லது இனிப்பின் அளவுக்கும் அவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கும் நேரடி தொடர்பில்லை. அதேசமயம், ஒருவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான மரபு காரணிகளும், சுற்றுப்புறக்காரணிகளும் ஏற்கெனவே அதிகமாக இருக்கும் பின்னணியில், அவர் கூடுதலாக சர்க்கரை சாப்பிட்டால், அதனால் அவரது உடல் எடை அதிகரித்து, அதன் மூலம் நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியங்களும் அதிகரிக்கும்.

அடுத்ததாக, சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்திருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்துகொள்வதற்கு பொதுவான அறிகுறிகள் சில இருக்கின்றன. அதிக தாகம், அதிக பசி, அதிக சோர்வு, எடை குறைதல், அடிக்கடி சிறுநீர்கழித்தல், ஆறாத புண்கள் ஆகிய அறிகுறிகள் நீரிழிவு நோய் வந்திருப்பதை குறிப்புணர்த்துவதாக கருதப்படுகின்றன.

இப்படிப்பட்ட அறிகுறிகள் ஒருவருக்கு இருந்தால், அவர்கள் அவசியம் நீரிழிவுநோய் இருக்கிறதா என்பதை கண்டறியும் ரத்த பரிசோதனையை செய்துகொள்வது மிகவும் அவசியம். அதே சமயம் இத்தகைய அறிகுறிகள் சர்க்கரை நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் அனைவருக்கும் தெரிவதில்லை. நீரிழிவு நோய் தாக்கியவர்களில் சுமார் ஐம்பது சதவீதம் பேருக்கு இந்த அறிகுறிகள் வெளியில் தெரியாமலே இருக்கும் என்பது தான் நீரிழிவு நோயில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவ அவலம்.

இப்படியான அறிகுறிகள் அற்ற நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை நோயின் பாதிப்புகள் வெளியில் தெரியும்போது, அவர்களில் பலருக்கு பாதிப்புகள் கடுமையாக இருக்கும். இதை போக்க வேண்டுமானால், நீரிழிவுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிப்பது அவசியமாகிறது.

இதன் ஒருபகுதியாக, பெற்றோருக்கு நீரிழிவுநோய் இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு 25 வயதாகும்போது அவர்கள் கண்டிப்பாக நீரிழிவுநோய் இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்வது அவசியம்.

அதுவும் தவிர, பொதுவாக தங்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா என்பதை யார் வேண்டுமானாலும் அறிந்துகொள்வதற்கு ஒரு எளிய வழிமுறை இருக்கிறது.

அதாவது ஒருவரின் வயது, அவர் செய்யும் உடற்பயிற்சியின் அளவு, அவரது இடுப்பின் சுற்றளவு, மற்றும் அவரது பெற்றோருக்கு நீரிழிவுநோய் இருக்கிறதா இல்லையா என்கிற நான்கு காரணிகளை கணக்கிடுவதன் மூலம் அந்த குறிப்பிட்ட நபருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா இல்லையா என்பதை யார் வேண்டுமானாலும் கணக்கிட்டு பார்த்துக்கொள்ள முடியும்.

யார் வேண்டுமானாலும் இந்த வழிமுறையின் மூலம், தங்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியப்பாடு இருக்கிறதா என்பதை சுமார் 80 சதவீதம் சரியாக கணிக்க முடியும்.

இப்படியாக நீரிழிவு நோயை அதன் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால், அதை கட்டுப்படுத்துவதும் எளிது. நீரிழிவுநோய் உண்டாக்ககூடிய இதர உடல்நலக் கோளாறுகளையும் தவிர்க்க முடியும்.

நீரிழிவு நோய் என்பது அடிப்படையில் வாழ்முறை சார்ந்த ஒரு நோய் என்பதால், இந்தியர்களின் வாழ்முறையில் குறுகிய காலத்தில் ஏற்பட்ட மிகப்பெரும் மாற்றங்கள், நீரிழிவு நோயை பெருமளவில் தூண்டிவிட்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார் கள்.

அதாவது விஞ்ஞான முன்னேற்றத்தால் உருவான தொழில் வளர்ச்சி, மற்றும் அது ஏற்படுத்திய பல்வேறு வசதி வாய்ப்புகள் காரணமாக இந்தியர்களின் உடல் உழைப்பு பெருமளவு குறைந்துவிட்டதாகவும், இதனால் அவர்கள் உடலின் இன்சுலின் சுரக்கும் தன்மை குறைந்து, நீரிழிவு நோய் என்பது இந்தியாவின் மிகப்பெரும் மருத்துவ நெருக்கடியாக உருவாகி யிருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.குறிப்பாக, கிராமம் சார்ந்த, விவசாய பொருளாதாரத்தை நம்பியிருந்த இந்தியர்கள், நகர்மயமான அலுவலகம் சார் வாழ்க்கை முறைக்கு மாறியிருப்பது அவர்களின் அன்றாட உடல் உழைப்பின் அளவை வெகுவாக குறைத்ததாக பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக, இந்தியாவில் கிராமங்கள் வரை எட்டியுள்ள சாலை வசதிகள், அதனால் அதிகரித்திருக்கும் வாகன போக்கு வரத்துக்கான வாய்ப்புகள் என்பவை இந்தியர்களின் நாளாந்த நடையின் அளவையும் குறைத்து விட்டதாக கணிக்கப் படுகிறது.

விஞ்ஞான வளர்ச்சியின் விளைவாக உருவாகியிருக்கும் மின்சாரத்தால் இயங்கும் வீட்டு உபயோகப்பொருட்களின் பயன்பாடு காரணமாக, பெண்களின் மரபுசார் உடல் உழைப்பும் குறைந்து விட்டிருக்கிறது.

அரிசி சாதம் சாப்பிடுவதனால் மட்டுமே ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்துவிடுவதில்லை. அன்றாட உணவில் அரிசியோடு கூட கேழ்வரகு போன்ற மற்ற தானிய வகைகளும், பச்சை காய்கறிகளும் சம அளவு இருந்த நிலைமை மாறி, சராசரியாக ஒருவர் சாப்பிடும் அன்றாட உணவில் அரிசியின் அளவு மட்டுமே 90 சதவீதத்திற்கும் அதிகமாகி விட்ட சமச்சீரற்ற உணவுப்பழக்கம் நீரிழிவு நோயை தூண்டும் காரணியாக அமையும்

இப்படியாக வாழ்க்கை தேவை, போக்குவரத்து ஆகிய இரண்டு அடிப்படை விடயங்களில் இந்தியர்களின் உடல் உழைப்பின் அளவு திடீரென குறைந்து விட்ட அதேசமயம், அவர்களின் அன்றாட உணவு முறையில் ஏற்பட்டிருக்கும் ஆரோக்கியமற்ற மாற்றமும் கூட நீரிழிவு நோயை அதிகப்படுத்தும் காரணியாக உருவாகியிருப்பதாக பார்க்கப்படுகிறது.

அதாவது இந்தியர்களின் மரபு வழி உணவில் அரிசியுடன் கூட கேழ்வரகு, கம்பு, சோளம் போன்ற தானிய வகைகளும், பல் வேறு வகையான பருப்பு வகைகளும், கீரை உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் அளவும் திடீரென குறைந்து, சராசரியாக இந்தியர்கள் சாப்பிடும் தினசரி உணவில், அரிசி சாதத்தின் அளவு 90 சதவீதத்திற்கும் அதிகமாக மாறியிருப்பதாகவும், இது நீரிழிவு நோயை தூண்டும் முக்கிய காரணியாக இருப்பதாகவும் மருத்துவர்கள் கருதுகிறார்கள். மேலும், பீட்சா, பர்கர் போன்ற சர்க்கரை மற்றும் கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கும் உணவு வகைகளின் அளவும் இந்த பிரச்சினையை அதிகப்படுத்துவதாகவும் பார்க்கப்படுகிறது.

இறுதியாக இன்றைய தலைமுறையினர் மத்தியில், சிறு வயது முதலே அதிகரித்துவரும் மன அழுத்தமும் நீரிழிவு நோயை தூண்டுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.