நமது கை ரேகை, கண்விழி, பாவனை போல மனதளவிலும், உணர்ச்சி வெளிப்பாடுகளிலும் உலகில் உள்ள 700 கோடி மக்களும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. ஒரே சூழ்நிலையை ஒவ்வொருவரும் வெவ்வேறு மாதிரி கையாளுவது உண்டு. இதைப் பொறுத்து தான் ஒருவரின் வெற்றியும், தோல்வியும் அமைகிறது.
இதேப் போன்று தான் உங்கள் காதல் மற்றும் இல்லற வாழ்க்கையும். காதல் மற்றும் இல்லற வாழ்க்கையை சந்தோசமாக அமைத்துக்கொள்வதும் கூட அவரவர் அணுகுமுறையில் தான் இருக்கின்றது. சூழ்நிலைகள் ஒன்றாக இருப்பினும் நீங்கள் அதை எவ்வாறு கையாளுகிறீர்கள் என்பதில் தான் உங்களது மகிழ்ச்சி மறைந்திருக்கிறது.
இனி, தங்களது வாழ்க்கை சந்தோசமாக இருக்க சில தம்பதிகள், சில சூழ்நிலைகளை எவ்வாறு வித்தியாசமாக செய்கிறார்கள் என்று பார்க்கலாம்…
வேலையிழப்பு – சாதாரண தம்பதியர்
வேலை இழப்பு ஏற்பட்டால் சாதாரண தம்பதிகளின் இடையே கோபமும், தகராறுகளும் மேலோங்கும். தொட்டதற்கெல்லாம் சண்டையிட்டு உறவுகளுக்கு இடையே பிரிவுகள் தான் அதிகரிக்கும். மேலும், மிகவும் சோகமாகவும், மனதுடைந்தும் போவார்கள்.
வேலையிழப்பு – சந்தோஷமான தம்பதியர்
வேலை இழப்பு ஏற்பட்டால், மனம் தளராது இருக்க ஊக்கவிப்பார்கள். தங்கள் பங்கிற்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று முயற்சி செய்வார்கள். மேலும், முடிந்த வரை அவர்களை அதிலிருந்து வெளிக்கொண்டு வந்து வேறு வேலைகளில் ஈடுபட தூண்டுவார்கள்.
ஈர்ப்பு – சாதாரண தம்பதியர்
வேறு யாராவது தனது துணையின் மீது ஆவல் கொண்டலோ, ஈர்ப்பு கொண்டாலோ மிகவும் கவலை அடைவார்கள். மேலும், சந்தேக குணம் மேலோங்கும். இதனால் வீண் சங்கடங்களும், சச்சரவுகளும் தான் எழும்.
ஈர்ப்பு – சந்தோஷமான தம்பதியர்
“அட, இன்னமும் உன்னை பலர் நேசிக்கின்றனர், நீ அவ்வளவு அழகாய் இருக்கிறாய்” என்று அவர்களை ஊக்கப்படுத்துவார்கள், மகிழ்விப்பார்கள். இது அவர்களை மனதளவில் உறுதியானவர்களாய் மாற்றும். மற்றும் உறவுக்குள் சந்தோஷம் அதிகமாகும்.
பெற்றோர் எதிர்ப்பு – சாதாரண தம்பதியர்
காதலிக்கும் போது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அவர்களது பெற்றோரைப் பற்றி அவதூறாக பேசுவார்கள். மேலும், அவர்களை விட்டு தனியாக சென்றுவிடலாம் என்று முடிவு செய்வார்கள்.
பெற்றோர் எதிர்ப்பு – சந்தோஷமான தம்பதிகள்
பெற்றோர்களுக்கு முன், தங்களது காதலின் வலிமையைக் காட்டவேண்டும் என்று காத்திருப்பார்கள். அவர்களுக்கு தங்களுடைய காதலை புரிய வைக்க முயற்சி செய்வார்கள். மேலும், பெற்றோர் மீதும் அதிகமான அக்கறை எடுத்துக் கொண்டு அவர்களை ஒப்புக்கொள்ள வைக்க முயல்வார்கள்.
நண்பர்களுடனான பழக்கம் – சாதாரண தம்பதிகள்
தனது துணை அவர்களது நண்பர்களுடன் நேரம் செலவழிப்பதை தவிர்க்கக் கூறுவார்கள். நண்பர்கள் வீட்டிற்கு வந்தால் கூட முகம் கொடுத்து பேசாமல் அவமதிப்பது போல நடந்துக்கொள்வார்கள்.
நண்பர்களுடனான பழக்கம் – சந்தோஷமான தம்பதிகள்
நண்பர்களோடு நேரம் செலவழிக்க ஒப்புக்கொள்வார்கள். அவர்களது தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளித்து அந்த வட்டத்திற்குள் தலையை நுழைக்காமல் அவர்களது உறவும் நலமாய் இருக்க வழிவிடுவார்கள்.
உடலுறவு – சாதாரண தம்பதிகள்
உடலுறவில் போதிய அளவு இன்பம் காண முடியாவிட்டால் அவர்களது துணையைக் குறைக் கூறுவார்கள். அவர்கள் கவலையடைய இவர்களே காரணமாக இருப்பார்கள்.
உடலுறவு – சந்தோஷமான தம்பதிகள்
ஒருவேளை தனது துணையால் முழுமையான இன்பத்தை தர இயலாவிட்டால், மனதளவில் அல்லது உடலளவில் அதற்கு ஏதேனும் காரணங்கள் இருக்கின்றனவா? என்று யோசிப்பார்கள். அவர்களை அதிலிருந்து வெளிக் கொண்டுவர முயற்சி செய்வார்கள்.
வேலையே கதியாக இருப்பது – சாதாரணமான தம்பதிகள்
ஒருவேளை அவர்களது துணை வேலை பளுவின் காரணமாக வேலையே கதியாக இருந்தால், மிகவும் கோபப்படுவார்கள். அவர்கள் மேல் அலுத்துக் கொள்வார்கள். தங்களது வெறுப்பை வெளிக்காட்டுவார்கள்.
வேலையே கதியாக இருப்பது – சந்தோஷமான தம்பதிகள்
அவர்களது வேலை பளுவை உணர்ந்து, மனதளவிலும், உடல் அளவிலும் அவர்கள் சோர்வாக இருந்தால் அதிலிருந்து மீட்டுக் கொண்டுவர முயல்வார்கள். முடிந்தவரை அவர்கள் வீட்டில் இருக்கும் போது, அவர்களை ஓய்வெடுக்கவும், அவர்களது விருப்பத்திற்கு ஏற்றார் போல இருக்கவும் உதவுவார்கள்.
உடல்நலக் குறைவு – சாதாரண தம்பதிகள்
அவர்களது துணைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் இவர்களும் நொந்துப்போவர்கள், வருத்தமாக இருப்பார்கள். சிலர் கோபமடைவார்கள்.
உடல்நலக் குறைவு – சந்தோஷமான தம்பதிகள்
உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கும் தங்களது துணையை அந்த கவலையில் இருந்து மீட்டுக் கொண்டு வர அவர்களை மகிழ்விக்க முயற்சி செய்வர்கள். குழந்தையைப் போல கவனித்துக் கொள்வார்கள்.