கோவை அருகே விபசாரத்துக்கு வரும் ஆண்களிடம் போலீஸ் போல நடித்து பணம் பறித்ததாக பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
ரகசிய தகவல்
கோவையை அடுத்த சின்னவேடப்பட்டி முருகன் நகரில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சரவணம்பட்டி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். பின்னர் அதிரடியாக அந்த வீட்டுக்குள் புகுந்தனர்.
அப்போது அங்கிருந்த முருகேசன்(வயது 37), புதுசித்தாபுதூரை சேர்ந்த ரகுபதி(43), நாகர்கோவிலை சேர்ந்த குமாரி கலா(35), காந்திபுரத்தை சேர்ந்த பூபதி(52) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 25 வயது பெண்ணையும் போலீசார் மீட்டனர். அவரை போலீசார் காப்பகத்திற்கு அனுப்பினார்கள்.
ஆண்களை மிரட்டி பணம் பறிப்பு
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:–
குமாரி கலா நாகர்கோவிலில் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். முருகேசனும், ரகுபதியும் வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரத்துக்கு ஆட்களை அழைத்து வருவார்கள். விபசாரத்துக்கு வந்தவர்கள் அந்த வீட்டுக்கு வந்த சிறிது நேரம் கழித்து குமாரி கலாவும், பூபதியும் அந்த வீட்டுக்குள் திடீரென்று புகுந்து தங்களை விபசார தடுப்பு போலீசார் என்று கூறிக் கொள்வார்கள்.
அதன்பின்னர் அங்கு விபசாரத்தில் ஈடுபட்டுள்ள ஆண்களை மிரட்டி விபசாரத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்தால் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும் என்று கூறி மிரட்டி அவர்களிடம் பணம் பறித்துள்ளனர். இதுபோன்று பல மாதங்களாக விபசாரத்துக்கு வரும் ஆண்களிடம் பணம் பறித்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கு ரகுபதியும், முருகேசனும் உடந்தையாக இருந்துள்ளனர். இவர்கள் 4 பேரும் சேர்ந்து பலரிடம் பணம் பறித்துள்ளனர்.