நீல வானமும் தங்கமயமான சூரியனும் ரம்மியமாகக் காட்சியளிக்கும் கோடைக்காலம்! கோடைக்காலத்திற்கு ஏற்ற காற்றோட்டமான ஆடைகளைத் தேர்ந்தெடுத்து அணிந்துகொள்வீர்கள். அதெல்லாம் சரிதான்! ஆனால் கோடைக்காலத்தில் உங்கள் கூந்தல் சிக்காகி, வறண்டு போகுமே! தொப்பி அல்லது ஸ்கார்ஃப் கொண்டு கூந்தலை மூடுவதற்குப் பதில், இந்த எளிய ஹேர் மாஸ்க்குகளை முயற்சித்துப் பாருங்கள், உங்கள் கூந்தல் இந்தக் கோடைக்காலத்திலும் ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் காட்சியளிக்கும்!
வாழைப்பழம், தயிர் மற்றும் தேன் (Banana, Curd and Honey)
வாழைப்பழத்தில் வைட்டமின் C, ஆன்டிஆக்சிடன்ட்டுகள் மற்றும் பிற ஊட்டச்சத்துகளும் உள்ளன. இவை உங்கள் மந்தமான கூந்தலுக்கு புத்துயிரளித்து மீண்டும் பளபளக்கச் செய்யும் ஆற்றல் கொண்டவை! இந்த மாஸ்க், உங்கள் கூந்தலை மென்மையாக்கும், பட்டு போன்ற தன்மை கொண்டதாக்கும், கோடை வெயிலால் சேதமடைந்த கூந்தலை சரிசெய்ய இது மிகவும் ஏற்றது.
தேவையான பொருட்கள்:
பழுத்த வாழைப்பழம் – ஒன்று
தேன் – ¼ கப்
வெறும் வெண்ணெய் – ½ கப்
செய்முறை:
வாழைப்பழத்தை நன்றாகக் குழைத்து ஒரு பேஸ்ட் உருவாக்கிக்கொள்ளவும், பிறகு மற்ற பொருள்களை அதில் சேர்த்துக் கலக்கவும். இதனை உங்கள் கூந்தலில் பூசி, சுமார் 30 நிமிடம் ஊரவிட்டு பிறகு மென்மையான ஷாம்பூ போட்டு கழுவவும்.
முட்டை மற்றும் வைட்டமின் E (Egg and Vitamin E)
இவை இரண்டும் சேர்ந்த கலவை உங்கள் கூந்தலுக்கு பளபளப்பைச் சேர்க்கும். கூந்தல் முனையில் பிளவுபடுவதையும் இது தடுக்கும், சிக்கல் உண்டாவதையும் குறைக்கும்.
தேவையான பொருட்கள்:
முட்டை – 1
ஆலிவ் எண்ணெய் – இரண்டு மேசைக்கரண்டி
வைட்டமின் E காப்ஸ்யூல் – ஒன்று
செய்முறை:
முட்டையை நன்கு அடித்துக்கொண்டு அதனுடன் ஆலிவ் எண்ணெயையும் வைட்டமின் E காப்ஸ்யூலையும் சேர்க்கவும் (காப்ஸ்யூலை உடைத்து திரவத்தை சேர்க்கவும்). இந்தக் கலவையை கூந்தல் வேர்கள் உட்பட, முழுவதும் பூசவும். சுமார் முப்பது நிமிடங்கள் கழித்து மென்மையான ஷாம்பூ கொண்டு கழுவவும். இந்த மாஸ்க்கே கண்டிஷனர் தான் என்பதால், இதைப் போட்ட பிறகு கண்டிஷனர் போட வேண்டியதில்லை.
வெண்ணெய்ப்பழம் மற்றும் தேன் (Avocado and Honey)
வெண்ணெய்ப்பழம் முடி உதிர்வதைத் தடுக்க உதவும் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் இயற்கை எண்ணெய்கள் கொண்டது. தேன் உங்கள் கூந்தலை ஆரோக்கியமாகவும் மென்மையாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.
தேவையான பொருட்கள்:
பழுத்த வெண்ணெய்ப்பழம் – ஒன்று
தேன் – இரண்டு மேசைக்கரண்டி
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் வெண்ணெய்ப்பழத்தைப் பிசைந்து கூழாக்கிக்கொள்ளவும். அதனுடன் தேனைச் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த மாஸ்க்கை கூந்தலில் (வேர்களிலிருந்து) பூசி, சுமார் 20 நிமிடங்கள் கழித்து கழுவவும்.
வெந்தய விதைகள் (Fenugreek Seeds)
கோடைக்கால வெப்பத்தால் உங்கள் தலையின் மேற்பரப்பு எண்ணெய்ப்பசை கொண்டதாக மாறுவதால் பொடுகுத்தொல்லை ஏற்படலாம். வெந்தய விதைகள் தலையில் அரிப்பு, பொடுகு, முடி சேதமடைதல் போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்தாகும்!
தேவையான பொருட்கள்:
வெந்தய விதைகள் – இரண்டு மேசைக்கரண்டி
நீர் – ஒரு கப்
செய்முறை:
வெந்தய விதைகளை நீரில் ஊற வைத்து, இரவு முழுதும் ஊறவிடவும். காலையில், அவற்றை அரைத்து பேஸ்ட் தயார் செய்யவும். இதனுடன் தயிரைச் சேர்த்தால் அதிக பலன்கள் கிடைக்கும். இந்த மாஸ்க்கை கூந்தலில் பூசி, 30 நிமிடங்கள் கழித்து மென்மையான ஷாம்பூ கொண்டு கழுவவும்.