Home குழந்தை நலம் குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமமா?

குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமமா?

40

captureஉங்கள் குழந்தைக்கு அடிக்கடி சளிப் பிரச்சனை ஏற்படுகிறதா? மூக்கடைப்பு ஏற்பட்டு வாய் வழியாக சுவாசிக்கிறதா? ஒரு வேளை அது அடினாய்டு பிரச்சனையாக இருக்கலாம்.

‘‘அடினாய்டு என்பது மூக்கின் உள் அறையில், நாசல் கேவிட்டியின் (Nasal Cavity) பின்புறம் இருக்கும். அதாவது, மூக்கும் தொண்டையும் சேரும் இடத்தில் உள்ள நிணநீர் சதைக்கோளம் தான் அடினாய்டு. பிறக்கும் போதே உருவாகியுள்ள இந்த சதைக்கோளம், குழந்தைகளை நோயில் இருந்து காப்பதற்காகவே அமைந்திருக்கிறது.

சுவாசிக்கும் போது வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் உள்ளே செல்லாமல் தடுக்கும் அடினாய்டு, குழந்தை வளர வளரச் சுருங்கி செயலிழந்துவிடும் தன்மை கொண்டது. 5 – 7 வயதில் சுருங்க ஆரம்பித்து, டீன் ஏஜை தொடும் போது அடினாய்டு முழுவதுமாக நீங்கிவிடும். அதற்குப் பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்களால் வேறு வகையில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு விடும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் நொய்த்தொற்றுக்கு எதிராக செயல்படும் இந்த அடினாய்டினாலேயே சில நேரம் கிருமித்தொற்று ஏற்பட்டுவிடும். அப்போது அப்பகுதியில் வீக்கம் அல்லது அழற்சி ஏற்படும்.

குழந்தைகளுக்கு சளி பிடிப்பதும் மூக்கடைப்பதும் இயல்பான ஒன்றுதான். தொடர்ந்து ஏற்படும் பட்சத்தில், அது அடினாய்டு அழற்சியின் காரணமாகவும் இருக்கலாம். அடினாய்டு அழற்சி அல்லது வீக்கத்தின் அளவு குறைவாக இருக்கும் போது மூக்கால் சுவாசிக்க முடியும். அழற்சி அல்லது வீக்கம் பெரிதாகும் போது குழந்தைக்கு மூக்கடைப்பு ஏற்பட்டு, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அதனால் வாய் வழியாக சுவாசிப்பார்கள். வாய் வழியாக சுவாசிப்பதால் பற்கள் சீரற்று அமைந்து விடும்.

முன்பற்கள் நீண்டு போகும். சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாது. மூச்சுப் பிரச்சனை காரணமாக குறட்டையும் தூக்கமின்மையும் ஏற்படும். அடினாய்டு பிரச்சனையின் சிலருக்கு காதில் வலி மற்றும் குடைச்சல் ஏற்படும். சிலருக்கு காதில் சீழும் வரலாம். அடினாய்டில் ஏற்படும் அழற்சி காரணமாக டான்சில் பிரச்சனையும் தோன்றும். தொண்டை வலி ஏற்படும்.

இந்தப் பிரச்சனைகள் அதிகமாகும்போது அறுவை சிகிச்சை செய்து அடினாய்டு சதைக்கோள த்தை நீக்கி விடுவார்கள். இனி குழந்தை மூச்சு விட சிரமப்பட்டால் அலட்சியமாக இருக்காமல் மருத்துவரைச் சந்தித்து அடினாய்டு பிரச்சனை இருக்கிறதா என்று பரிசோதிப்பதே நல்லது.