பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளனர். ஆனால் அந்த அளவு கடந்த பாசம் கூட சில சமயம் வினையாகிவிடுகிறது. உங்கள் பாசமே குழந்தை உங்களை வெறுக்க காரணமாகிறது. குழந்தைகள் உங்களை ஏன் வெறுக்கிறார்கள் என்பதை பற்றி காண்போம்.
குழந்தைகளை ஒரளவு கண்டிப்பது சரி. எங்கே குழந்தை தவறான வழியில் சென்றுவிடுமோ என்று நினைத்து அதிகமாக கண்டித்து வைப்பது குழந்தைகள் மனதை புண்படுத்தும்.
வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் சிலர், தங்களது குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவதில்லை. வீட்டில் இருக்கும் போது கூட வேலை வேலை என வேலையில் மட்டுமே கவனம் செலுத்துவதால், குழந்தைகள் பெற்றோர்களின் பாசத்திற்காக ஏங்கி போய்விடுகின்றனர்.
மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்குமே தேவைகள் இருக்கும். குழந்தைகள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள பெற்றோர்களையே நாடுகின்றனர். பெற்றோர்கள் அவர்களது தேவைகளை நிறைவேற்றவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைகின்றனர்.
பெற்றோர்கள் தான் பிள்ளைகளுக்கு சண்டை போடாமல் அமைதியாக இருக்க சொல்லி தர வேண்டும். ஆனால் பெற்றோர்களுக்குள் உண்டாகும் சண்டைகள் மற்றும் பிறருடன் பெற்றோர்கள் போடும் சண்டைகள் குழந்தைகளை வெறுப்படைய செய்கிறது.
குழந்தைகள் மீது பொதுவாக பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள். ஆனால் மிக அதிகமான பாசம் மற்றும் அக்கறை ஆகியவற்றை குழந்தைகள் விரும்புவதில்லையாம். அதிக அக்கறையும் பாசமும் குழந்தைகள் தங்களது வழியில் செல்ல தடையாக இருக்கிறதாம்.
இரண்டு குழந்தைகள் இருந்தாலும், ஒரு குழந்தையை செல்லப்பிள்ளையாக நினைத்து வளர்ப்பது, அதிக அக்கறை காட்டுவது, அந்த குழந்தை என்ன கேட்டாலும் வாங்கி தருவது போன்றவை மற்றொரு குழந்தையை வருத்தப்பட வைக்கும். எனவே இரண்டு குழந்தைகளையும் சமமாக கவனித்துக்கொள்வது அவசியம்.