படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்?
சர்க்கஸ் தான் நினைவிற்கு வருகிறது. மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் “ரிங் மாஸ்டரை”ப் போல குழந்தைகளை அடித்து, திருத்தி வழிப்படுத்துவது யாரை மகிழ்விக்க, “குழந்தையை நல்லா வளர்திருக்கிறாங்க” என்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா
**
சேட்டை செய்யும் குழந்தைகளை எவ்வாறு கையாள்வது?
*
குழந்தைகள் எல்லாவற்றையும் பரிசோதித்து பார்க்க விரும்புவார்கள். அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் தான் “எதுசரி” “எதுதவறு” என்று சொல்லிக் கொடுக்கவேண்டும். “சேட்டை” என்றால் என்ன? நாம் சந்தோசமாக இருக்கும் போது குழந்தை நமது மூக்கில் விரலை வைத்து ஆட்டினால் கூட சிரித்து மகிழ்கிறோம். நாம் வேறு மனநிலையில் இருக்கும் போது குழந்தை சும்மானாச்சுக்கும் மண்ணைத் தொட்டால் கூட “சனியனே, “சனியனே” “பேயா பொறக்க வேண்டியது புள்ளையா பொறந்திருக்கு” என்று திட்டுவோம். ஆக “சேட்டை” என்பது குழந்தையை மையப்படுத்தி அல்ல. நம்மை மையப்படுத்தி இருக்கிறது. முதலில் அதை உணர்வோம்.
அடுத்து, குழந்தை தன்னையோ, மற்றவரையோ, மற்றவைகளையோ பாதிக்காமல் விளையாட அனுமதிக்க வேண்டும். சேட்டை செய்த பிறகு அடிக்காமல் முன்பே “விதிகளை“ சொல்லிவிட வேண்டும். விதிகளை குழந்தை மீறும்போது நிச்சயமாய்க் கண்டிக்கவேண்டும். நீங்க குழந்தையா இருந்தபோது சேட்டை செய்தீர்களா? இல்லையா?
***
அடிக்காமல் வளர்ப்பது எப்படி?
அடிப்பதைத் தாண்டி வேறு எதையுமே யோசிக்க மாட்டீர்களா? அடித்து சரிபடுத்த அவர்கள் என்ன மத்தளமா? கண்டிப்பாக என்பது “இந்தச் செயல் எனக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்த்துவது” சில குழந்தைகள் “நான் உன் கூட பேசமாட்டேன்” என்று சொன்னாலே தங்களது தவறுகளை திருத்திக்கொள்ளும். இப்படி ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான உளவியல் (சைக்காலஜி) உண்டு. பெற்றோர்களுக்கும் அவரவர் குழந்தைகளைப்பற்றி நன்கு தெரியும். பொறுமையின்மையின் காரணமாக, வேலைப்பளுவின் காரணமாக, நேரமின்மையின் காரணமாக, இப்படி ஒவ்வொரு பிரச்சனையின் ஊடே குழந்தைகள் பரிதவிக்கின்றன. அடிப்பதும், மனரீதியாக வன்முறைப்படுத்தும் விதமும் கண்டிப்பாக குழந்தை உரிமை மீறல் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.