நாம் உண்ணும் உணவு நம் பற்களின் இடையில் தங்கும்போது கழிவாக மாறி அங்கு நுண்கிருமிகள் வளர்கின்றன. இதில் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் ஈகோலி பாக்டீரியாவும், சருமத் தொற்றுநோயை ஏற்படுத்தும் ஸ்டாபில்கோலி பாக்டீரியாவும் அடக்கம். இந்த நுண்கிருமிகள் தொடர்ந்து பற்களிலேயே இருந்தால் அநேக நோய்கள் தோன்றுகின்றன. அதனால் பல் துலக்குவது அவசியமாகிறது.
பொதுவாக 2 வயதுக்குப்பிறகே பல்துலக்கத் துவங்குகிறார்கள். ஆனால், குழந்தைகளுக்கு பல் முளைத்த உடனேயே பல்துலக்க கற்றுக் கொடுப்பது மிகவும் நல்லது. இதற்குக் காரணம், குழந்தைகளுக்கு பாட்டில் மூலம் புட்டிப்பால் கொடுக்கும்போது பல் நோய்கள் உருவாக வாய்ப்புகள் உண்டு. குழந்தைகளுக்கு பல்துலக்கும் முறை தெரிய வாய்ப்பில்லை என்பதால் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர் பல்துலக்கிவிடுவது சிறந்தது.
கடைவாய்ப் பற்களில் இருந்து பல்துலக்க ஆரம்பிக்க வேண்டும். இப்படி செய்வதால் மொத்தப் பற்களையும் துலக்கிய திருப்தி கிடைக்கும். கீழ் வரிசை மற்றும் மேல் வரிசைப் பற்களை ஒட்டியபடி துலக்கும்போது நுண்கிருமிகள் வெளியேறாமல் மீண்டும் பல் ஈறுகளின் அடியிலேயே மறைந்திருக்கும். எனவே, மேல்வரிசைக்கும் கீழ்வரிசைக்கும் இடைவெளிவிட்டு துலக்கும்போது கழிவுகள் வாய்க்குள் சென்று விடும், அவை பின்னர் வாய்கொப்பளிக்கும்போது வெறியேறிவிடும்.
அதேபோல இரவு தூங்கும் முன்னர் பல்துலக்குவதும் அவசியம். தூங்கும்போது நமது உதடுகள் மற்றும் நாக்கின் அசைவுகள் முற்றிலும் நிறுத்தப்படுவதால் பல் இடுக்கில் ஒட்டியுள்ள நுண்ணுயிரிகள் பலமடங்கு பெருகுவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, இரவு பல்துலக்குதல் நல்லது.
மிருதுவான பல்துலக்கியே பற்களின் இடையில் உருவாகி உள்ள நுண்ணுயிரிகளை அகற்ற உகந்ததாகும். 2 வயதுக்கும் குறைவான குழந்தைகள் பிங்கர் பிரஷ் கொண்டு பல் துலக்கலாம். இத்தகைய பல் துலக்கிகளை பெற்றோர் தனது விரலுக்குள் செலுத்தி குழந்தைகளுக்கு பல்துலக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மிருதுவான பல் துலக்கிகளை உபயோகிக்கலாம்.
இவர்களும் பெற்றோரின் கண்காணிப்பில் பல்துலக்கப் பழக்கிட வேண்டும். 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தானாகவே பல் துலக்கலாம். பல் வரிசையை சீராக்குவதற்கு பொருத்தப்படும் கிளிப் பொருத்தி உள்ளவர்கள், அதற்கென உள்ள ஸ்பெஷல் பிரஷ்சைப் பயன்படுத்த வேண்டும். பற்களுக்கு இடையே பின்புறத்தில்தான் அதிக அளவு கிருமிகள் இருக்கும். இவைகளை நீக்க இண்டர்டென்டல் பிரஸ் எனப்படும் பல்லிடுக்கு பல் துலக்கிகளைப் பயன்படுத்தலாம்.
கழிப்பிடத்துக்குப் பக்கத்திலேயே வீடுகளில் குளியலறையும் உள்ளது. இதனால், அங்குதான் பல்துலக்கிகளை வைக்கிறோம். இப்படி வைக்கும்போது கழிப்பறைக் கிருமிகள் காற்றின் மூலம் பல்துலக்கியில் வந்து தங்கிவிடுகின்றன. எனவே, கழிப்பறையில் இருந்து எவ்வளவு தூரம் தள்ளிவைக்க முடியுமோ அவ்வளவு தூரத்தில் தள்ளிவைப்பது நல்லது. இதேபோல், ஒரே பெட்டியில் குடும்பத்தில் உள்ள அனைவரது பல்துலக்கிகளையும் வைக்கும்போது ஒருவருக்கு உள்ள நோய்க்கிருமி இன்னொருவருக்கு பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, பல்துலக்கியதும் நன்றாக கழுவி வெயிலில் உலரவைத்து தனித்தனியாக வைப்பதே நல்லது.