முகம் தெரியாத மகன் எழுதிக் கொள்ளும் கடிதம். என் வயது 21. அரசு கல்லூரியில், இரண்டாம் ஆண்டு படி த்து வருகிறேன். இந்த வயதில் எல்லாருக்கும் வரும் காதல், எனக்கும் ஏற் பட்டது அம்மா.
அவளுக்கு, அம்மா கிடையாது. என் நண்பனின் சகோதரியி ன் மூலம், அந்த பெண் எனக்கு அறிமுகம் ஆனாள். நண்பர்களாக பேசினோம், தொலை பேசியில் மட்டும். சிறி து நாட்களில், என்னு டைய நடவடிக்கைகள் அவளுக்கு பிடித்து விட்டது. நான் காட்டிய பாசம், அக்கறையால், அவளுக்கு என் மீது காதல் ஏற்பட்டு, “என்னை கல்யாணம் செய்து கொள்…’ என்றாள்; பல மாதங்கள் கழித்து, நானும் ஒத்துக் கொண் டேன். அம்மா… அவள் சொன்ன ஒரு வார்த்தை, இன்னும் மனசுல இருந்து போகல. “என் அம்மா இல்லாத குறைய, நீ வந்து பூர்த்தி பண் ணிட்ட…’ என்று கூறினாள். “நீ இல்லையென்றால் இறந்து விடுவேன்…’ என்றாள். என் அம்மாவின் புகைப்படம் முன் நின்று, “நீ என் கணவனாக வேண்டும் என்று, தினமும் வேண்டுவேன்…’ என் றாள். இதெல்லாம் பார்த்து, நானும் அளவுக்கு அதிகமாக பாசம் வைத்து, பழகி வந்தேன்.
இருவரும் காதலர்கள் போல அல்ல, கணவன், மனைவி போல பழகினோம். என்னை, “புருஷா, மச்சான்…’ என்று தான் அழைப்பாள். சிறிது நாட்களில், என்னுடைய புகைப்படத்தை அனுப்பி வைத்தேன்; அவளும் அனுப்புகிறேன் என்றவள், இரண்டரை வருடம் காத்திருக் கிறேன் அம்மா… இன்னும் அவளை நான் பார்க்கவே இல்லை… என் அம்மாவின் புகைப்படம் கூட அனுப்பி வைத்தேன்.
பத்து நாட்களாக, என்ன பிரச்னை என்றால், அவளுடைய தோழிகள், நான், அவளை ஏமாற்றி விடுவேன் என்றும், அவனை விட்டுவிடு என்றும், அவளை குழப்பி உள்ளனர்; அவளும் என்னை விட்டு, விலக ஆரம்பித்தாள். ஆனால், என்னால் அவளை விட்டு, விலகி வர முடியவில்லை. தற்கொலை முயற்சி வரை சென்றும், புகைப்படம் அனுப்ப முடியாது என்கிறாள் அவள். இதுவரை அவளைத் தவிர, வேறு ஒரு பெண்ணை மனதார நினைத்தது கூட கிடையாது. அவள் அப்பாவின் சம்மதம் முக்கியம் என்று, அடிக்கடி நான் கூறுவேன். அதை மனதில் வைத்து, “என்னால் அப்பாவிடம் சம்மதம் வாங்க முடியாது; என்னை விட்டுவிடு…” என்கிறாள். அதற்கும் சரி என்று, “உன் அப்பாவிடம் நான் பேசுகிறேன்; சம்மதம் இல்லையென்றால், என் வீட்டின் சம்மதத்துடன் கல்யாணம் செய்து கொள்கிறேன்…’ என்றேன்; சரி என்றாள். “இனி மாற மாட்டேன். என் அப்பாவை விட, நீதான் முக்கியம்…’ என்று அழுதாள். நான் உன்னை பரிசோதனை செய்தேன் என்கிறாள்.
பிறகு, இரண்டு நாட்கள் கழித்து, மீண்டும் என்னுடன் பேசவில்லை. மீண்டும் காலில் விழாத குறையாக கெஞ்சினேன். “வேண்டாம், வேண்டாம்…’ என்றாள். பிறகு, “சரி… உன்னை திருமணம் செய்கி றேன்…’ என்றாள். புகைப்படம் என்றதும், போனை வைத்து விட்டாள். அம்மா… அவள் எப்படி இருந்தாலும், அவளை நான் திருமணம் செய்து கொள்ள, தயாராக இருக்கிறேன். அவள் இல்லாத வாழ் க்கை, எனக்கு இருண்ட வாழ்க்கை தான்.
அவள் பெற்றோரின் சம்மதம் இருந்தோ, இல்லாமலோ அவளை சட்டப்படி திருமணம் செய்ய, நான் தயாராக இருக்கிறேன். அவளு க்கும், எனக்கும், தக்க அறிவுரையை கூறுங்கள். நாங்கள் இருவரும் மனசை பார்த்துதான் காதலித்தோம்…
உங்கள் அறிவுரை, எங்கள் உண்மையான காதலை இணைக்கும் என்று, நான் நம்புகிறேன்.
— இப்படிக்கு,
பெயர், ஊர் வெளியிட விரும்பாத
உங்கள் மகன்.
பின்குறிப்பு: எங்கள் காதல் இணைய, அம்மா… நான் வேண்டாத சாமியில்லை. காலையில் அவளுடைய பெயரை சொல்லித்தான், என் நாட்கள் தொடரும். அவள் கஷ்டப்பட கூடாது என்ற எண்ணம் தான் என் உள்ளம் முழுவதும். அவள் என்னை விரும்புகிறாள்; ஆனால், ஏதோ ஒரு பயம் அவளுக்கு. உங்கள் அறிவுரைக்கு காத்தி ருக்கும் உங்கள் மகன். என்னால், அவள் இல்லாமல் வாழ முடியாது அம்மா.
அன்புள்ள மகனுக்கு —
உன் காதல், தொலைபேசி காதல் அல்லவா? ஆனால், கடிதத்தில் கைபேசியா, தரைபேசியா எனக் குறிப்பிடவில்லை. கைபேசி என்றால், டிஸ்பிளேயில் அவர் எண் தெரியுமே? அந்த எண்ணை வைத்து, சில நூறுகள் செலவு செய்தால், அவளது முகமும், முகவரி யும் அப்பட்டமாகுமே? தரை பேசி என்றால், ஒரு காலர் ஐடி வாங்கி பொருத்தினால், அவளின் எண்ணை கண்டுபிடித்து விடலாமே? உன் டெலிபோன் காதலி பற்றிய யூகங்களைப் பார்ப்போமா?
நண்பனின் சகோதரி, தனக்கு பழக்கமான குறும்பு ஆணை விட்டு, உனக்கு பெண் குரலில் பேசச் சொல்லி, உன்னை இவாஸியா (இவாஸியா என்றால், மராத்தியில் இளிச்சவாய் என்று அர்த்தம்!) ஆக்குகிறாளோ? கேட்கும் குரலில், பிசிறு தட்டுகிறதா? மிமிக்ரிக்கு தோதாக, சிறு சிறு வார்த்தைகளில், எதிர்முனை பேசுகிறதா? நண் பனின் சகோதரிக்கு, உன் மீது காதலா அல்லது உன் மீது மிதமிஞ்சிய வெறுப்பா?
இரண்டரை வருடங்களாக, வெறும் குரலை காதலித்து வருகிறாய். நீ உன் புகைப்படத்தை அனுப்பியிருக்கிறாய். அவள் ஏன் அனுப்ப வில்லை? அவளின் தனி புகைப்படம் இல்லையென்றால், உன் நண்பனின் சகோதரி, அவளிருக்கும் குரூப் போட்டோவை உனக்கு தரலாமே? கேமரா போன் வைத்து, டெலிபோன் காதலியை பட மெடுத்து வந்து, உன்னிடம் கொடுத்து விடலாமே…
உன்னை வம்பு செய்வது, நண்பனின் சகோதரி என்ற தனி ஆள் அல்ல. பெரும் பெண் கூட்டமே, இந்த தில்லாலங்கடி வேலையில் ஈடுபட்டுள்ளது என நம்புகிறேன். ஒரு விஷயம் யோசி… உன்னை கிண்டலடிக்கும் பெண் கூட்டத்தில், எவளுக்காவது, நீ தேவைப் பட்டவனாய் இருந்தால், நடக்கும் காதல் நாடகத்தை உளறிக் கொட் டியிருப்பாளே… உன் மைனஸ் பாயின்ட், உன் பெர்சனாலிட்டியா, அறுத்து தள்ளும் பேச்சா அல்லது எவளாவது நம்மைக் காதலித்து விடமாட்டாளா என அலையும் தன்மையா?
உனக்கு அம்மா சென்டிமென்ட் அதிகம். அதனால்தான், டெலிபோன் காதலி, தனக்கு அம்மா இல்லை என்றும், உன்னை அவளது அம்மா வாக பாவிப்பதாகவும், உன்னிடம் கூறியிருக்கிறாள். உனக்கும், அவளுக்குமான டெலிபோன் உறவில், முழுக்க முழுக்க, செயற்கை த்தனமும், நாடகத் தனமும் விரவிக் கிடப்பது உனக்கே புரிபட வில்லையா? புருஷா, மச்சான் என, அவள் உன்னை கூப்பிடுவது, டூ மச். இல்லாத அவளுக்காக, நீ தற்கொலை வரை போனது, மும் முறை வடிகட்டிய அசட்டுத்தனம்.
இரண்டாவது சாத்தியத்தை பார்ப்போம்…
உன்னுடன் பேசும் டெலிபோன் காதலி, உண்மையிலேயே பெண் ணாகவும் இருக்கக் கூடும். அவள் மாற்றுத் திறனாளியாகவோ, நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஆன்ட்டியாகவோ இருந்தாலும் இருப் பாள். காதலுக்கு கண்ணில்லை எனக் கூறுவர். ஆனால், பத்துக்கு, அஞ்சு பொருத்தங்கள் இல்லாத காதலும், கல்யாணமும் பாழ். காத லும், காமமும் உருவாக்கும் பெண்ணைத்தான், எந்த ஆணும் மணந்து கொள்வான்.
இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா…
உன் கைபேசி எண்ணை மாற்று. டெலிபோன் காதலியிடம் பேசாதே. நண்பனின் சகோதரியைக் கூப்பிட்டு, டெலிபோன் பெண்மணி நேரில் வந்தால்தான், மேற்கொண்டு பேச்சு என கூறி விடு. உன்னை சுற்றி இருக்கும் ஆண் – பெண் நண்பர்கள், உன்னை விளையாட்டுப் பொம்மையாக கருதுகின்றனரோ என்று தோன்றுகிறது. ஒன்று, அவர்களை மாறச் சொல் அல்லது அவர்களிடமிருந்து விலகி நில். உன்னை சுற்றி நடக்கும் நடப்புகளை எண்ணி பார்த்து, நீ நீயாகவே இரு. காதலுக்கும், உனக்கும் ஏழாம் பொருத்தம். ஒழுங்காக படி. முதுகலை பட்டப்படிப்பை முடித்து விட்டு, வேலைக்கு போ. பெற்றோர் பார்த்து வைக்கும் பெண்ணை மணந்து கொள். உன் கை பேசி எண்ணை ரகசியமாக வைத்துக் கொள். வெளியே அம்பல மானால் தினம் நூறு ஆண்கள், பெண் குரலில் பேசி இம்சிப்பர்.