பொதுவாக ஒரு நாளைக்கு 2,200 கலோரி மதிப்புள்ள உணவை உட்கொள்பவர், கர்ப்பிணி தாய்மாராக இருக்கும் பட்சத்தில் கூடுதலாக 300 கலோரி சத்துள்ள உணவு எடுத்துக் கொள்வது அவசியம்.
அதாவது, சராசரியாக சாப்பிடும் உணவோடு, வயிற்றிலிருக்கும் சேய்க்கும் சேர்த்து கூடுதலாகச் சாப்பிட வேண்டும். காலை உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி அல்லது அதற்கு இணையான சத்துத் தரும் ஓட்ஸ் அல்லது சம்பா கோதுமை உப்புமா (தலா 1/2 கப்) என்று ஏதாவது ஒரு ஐட்டத்தை அளவோடு சாப்பிடலாம். மதிய உணவுக்கு… சாதத்துடன் காய்கறி, ஏதேனும் ஒரு கீரை எடுத்துக் கொள்ளலாம்.
அசைவம் சாப்பிடுபவர்கள் என்றால்… முட்டையின் வெள்ளைக்கரு, கோழிக்கறி, மீன் என்று ஏதாவது ஒன்றை சேர்த்துக்கொள்ளலாம். காலையில் எடுத்துக் கொண்ட அதே மாதிரியான, அதே அளவிலான உணவையே இரவுக்கும் எடுத்துக் கொள்ளலாம்.
தவிர, காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளும் பால் எடுத்துக்கொள்வதுடன், இடைப்பட்ட நேரங்களில் பழங்கள், பழச்சாறுகள் அருந்த வேண்டும். ஒரு நாளைக்கு சராசரியாக எட்டு முதல் பன்னிரண்டு டம்ளர்கள் வரை தண்ணீர் குடிக்க வேண்டியதும் அவசியம். தண்ணீராகக் குடிக்காவிட்டாலும் அதற்கு இணையாக தயிர், மோர் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
எண்ணெயைப் பொறுத்த வரை, தினமும் மூன்றிலிருந்து நான்கு தேக்கரண்டி வரை சேர்த்துக் கொள்ளலாம். மாலை வேளையில் பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, மொச்சை என்று ஏதேனும் முளைகட்டிய பயறு வகை ஒன்றை வேக வைத்து டிபனாக சாப்பிடலாம். ஆறாவது மாதத்தில் இருந்து இரும்புச்சத்து, கால்சியம் தரவல்ல எள்ளுருண்டை சாப்பிடலாம்.
சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் டயாபெட்டிக் பிரச்சினை ஏற்படலாம். அதற்கு ஜெஸ்டேஷனல் டயபடிஸ் என்று பெயர். எனவே, அந்தப் பெண்கள்… பால், கோப்பி வகைகளில் சர்க்கரையை தவிர்ப்பதுடன், இடைப்பட்ட நேரங்களில் மோருடன் வெள்ளரி, மாங்காய் அல்லது காய்கறி சூப் எடுத்துக் கொள்ளலாம்.
மதிய உணவுக்கு எண்ணெயில் பொரித்தவற்றை தவிர்ப்பதுடன், தேங்காய் சேர்க்காத சமையலாக இருக்கும்படியும் பார்த்துக்கொள்ள வேண்டும். சீனி கட்டுப்பாட்டில் இருந்தால், காய்கறி சூப்புடன் ஆப்பிள், கொய்யா, சாத்துக்குடி, தர்பூசணி, பேரிக்காய் முதலிய பழங்களை கையளவு சேர்த்துக் கொள்ளலாம். கூல்டிரிங்க்ஸ், வெல்லம், பேரீச்சம்பழம், மாம்பழம், சீதாப்பழம், வாழைப்பழம், அப்பம், இடியப்பம், புட்டு, கஞ்சி, களி, கூழ், மைதாவில் செய்த பிரெட், பூரி, பரோட்டா, சேமியா, பொங்கல், கிழங்கு வகைகள், கேரட், பீட்ரூட், வாழைக்காய், கோன்பிளார், முட்டை மஞ்சள் கரு, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி (கோழிக்கறி சாப்பிடலாம்), கருவாடு… இவையனைத்தையும் கட்டாயமாக தவிர்த்துவிட வேண்டும். உடற்பயிற்சியைப் பொறுத்தவரையில், முப்பத்தி ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்கள் எனில், உடற்பயிற்சியைத் தவிர்க்கலாம்.
கைகளுக்கு மட்டும் சிறிய அளவிலான பயிற்சிகளைக் கொடுக்கலாம். முப்பத்தி ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள், கர்ப்பம் தரித்த காலத்திலிருந்தே மருத்துவரின் ஆலோசனைப்படி ஒரு நாளைக்கு இருபது நிமிடங்கள் வாக்கிங் செல்வது நலம்.