Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலம்

கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலம்

92

வழக்கமாக கர்ப்ப காலம் 40 வாரங்களாகும். கர்ப்பத்தின் போது ஏற்படும் அறிகுறிகள் மற்றும் அடையாளங்களை மூன்று காலப் பிரிவுகளாகக் கருத்தில் கொள்கிறோம். ஒவ்வொரு பிரிவும் மூன்று மாத காலமாகும்.
முதல் மூன்று மாதம் (1-12 வாரங்கள்) (The first trimester)
கடைசி மாதவிடாய் சுழற்சியின் முதல் நாள் தொடங்கி கர்ப்ப காலத்தின் 12வது வாரம் வரை உள்ள காலமாகும். மாதவிடாய் ஏற்படாமல் போவதிலிருந்து இதனை அறிந்துகொள்ளலாம். சோர்வு, மார்பகங்கள் விரிவடைதல், குமட்டல் போன்ற அறிகுறிகளும் இருக்கும். இந்தக் காலகட்டத்தின் போது, கருவானது மருந்துகள், நோய்த்தொற்றுகள் மற்றும் நச்சுப் பொருள்களால் எளிதில் பாதிக்கும் தன்மை கொண்டிருக்கும்.
கருவுற்ற பிறகு, கரு முட்டையானது செல்களின் ஒரு சிறு தொகுதியாக வளர்ச்சியடையும், அதுவே கரு எனப்படுகிறது. அதன் பிறகு, இந்த செல்களில் இருந்து குழந்தையின் உடல் உறுப்புகள் வடிவம் பெறத் தொடங்கும். இந்த நிலையின் குழந்தை வெறும் சிவப்புக் காராமணி ஒன்றின் அளவே இருக்கும். குழந்தை ஒவ்வொரு நாளும் வளர வளர தாயின் உடலில் மாற்றங்கள் ஏற்படும். தாய்க்கு அவ்வப்போது வலி, களைப்பு மற்றும் அசௌகரியங்கள் ஏற்படலாம்.

முதல் மூன்று மாத கர்ப்பம் – வாரங்களின்படி (Week by week summary of the first trimester):
1-2 வாரங்கள்: பெண்ணின் உடல் கருமுட்டையை உற்பத்தி செய்யவும், அதனைத் தொடர்ந்து கருவுறவும் தயாராகும்போது கர்ப்பம் தொடங்குகிறது.
3வது வாரம்: விந்தணு, கருமுட்டையைக் கருவுறச் செய்து செல்களின் ஒரு சிறு தொகுப்பாக வளரும் (பிளேஸ்டோசிஸ்ட்), இதுவே பின்னாளில் குழந்தையாக வளர்ச்சியடைகிறது.
4வது வாரம்: இந்த செல் தொகுதி, பகுப்படைந்து கருவாகவும் நஞ்சுக்கொடியாகவும் பிரியும். குழந்தையின் தனித்தனி உறுப்புகள் வடிவம் பெறத் தொடங்குகின்றன.
5வது வாரம்: குழந்தையின் இரத்த ஓட்ட மண்டலமும் இதயமும் உருவாகத் தொடங்குகின்றன. இந்தச் சமயத்தில் தாயின் உடலில் ஹ்யூமன் காரியனிக் கொனடோட்ரோபின் (hCG) எனும் ஹார்மோன் அளவு மிகவும் அதிகரிக்கிறது. வீட்டிலேயே பரிசோதனைகள் செய்து கர்ப்பத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இந்த ஹார்மோனே உதவுகிறது.

6வது uவாரம்: குழந்தையின் முகக் கட்டமைப்பு உருவாகத் தொடங்குகிறது. இச்சமயத்தில் தாய் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி இருக்கலாம்.
7வது வாரம்: தாயின் மார்பகங்கள் வளரத் தொடங்கும். குழந்தையின் மூளை மூளை வடிவம் பெறுகிறது.
8வது வாரம்: தாய்மார்களுக்கு மசக்கை உண்டாகலாம்.
9வது வாரம்: குழந்தையின் தசைகள் உருவாகத் தொடங்குகின்றன.
10வது வாரம்: எலும்புகள் மற்றும் குருத்தெலும்புகளுடன் கூடிய எலும்பு மண்டலம் வளரத் தொடங்குகிறது. இந்தக் கட்டத்தில் தாய்க்கு மலச்சிக்கல் ஏற்படலாம்.
11வது வாரம்: இந்த நேரத்தில் குழந்தை, கை கால்களுடன் மனித உருவத்துடன் காணப்படும்.
12வது வாரம்: குழந்தை எடை கூடுகிறது.
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தின்போது எதிர்ப்பார்க்கப்படும் அறிகுறிகள் (Symptoms to expect in the first trimester):

மசக்கை (Morning Sickness):
5வது வாரம் முதல், மசக்கை அறிகுறிகள் நன்கு வெளிப்படையாக இருக்கும், எந்த நேரத்திலும் அவை ஏற்படலாம். அவ்வப்போது சிறுகச் சிறுகச் சாப்பிடுவது மசக்கையை எதிர்கொள்ள உதவக்கூடும். அறிகுறிகள் கடுமையாக இருந்தால், கர்ப்பம் தொடர்பான குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கட்டுப்படுத்த மருத்துவர் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்.
மனநிலையில் திடீர் மாற்றங்கள் (Mood swings):
இச்சமயத்தில் ஒருவர் மிகுந்த இன்பமான உணர்வைப் பெறலாம் திடீரென்று சோகமாக உணரலாம். ஆனால் இப்படிக் கண்டிப்பாக ஏற்படும் என்று கூற முடியாது. மன அழுத்தம் போன்ற அறிகுறிகள் தொடர்ந்து நீடித்தால் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டியது அவசியம்.
மார்பகங்கள் மென்மையாதல் (Tender breasts):
கர்ப்பத்தின் 6 வார காலத்தின்போது, தாய்க்கு மார்பகங்கள் மென்மையாகவும் பெரிதாகவும் கூச்சம் உடையதாகவும் மாறலாம்.
பிரசவத்திற்கு முன்பு மருத்துவருடனான முதல் சந்திப்பு (First Prenatal Visit):
பிரசவத்திற்கு முன்னதாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவதுடன் தேவையான மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துகொள்வதும் அவசியமாகும்.
மருத்துவர் இவை பற்றி உங்களிடம் கேட்கலாம்:
உங்களுக்கு ஏதாவது உடலம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளதா என்று கேட்கலாம்
இதற்கு முன்பு கர்ப்பமடைந்துள்ளது பற்றிக் கேட்கலாம்
நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் மற்றும் வைட்டமின்கள் பற்றிக் கேட்கலாம்
புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் உள்ளதா என்பது பற்றிக் கேட்கலாம்
உடற்பயிற்சி ஏதேனும் செய்கிறீர்களா என்பது பற்றிக் கேட்கலாம்
குடும்பத்தில் பரம்பரையாகத் தொடரும் பிரச்சனைகள் பற்றிய தகவலைக் கேட்கலாம்
முதல் மூன்று மாதத்தின்போது செய்ய வேண்டிய பரிசோதனைகள் (Tests during the first trimester of pregnancy):
முதல் சந்திப்பில், உங்களைப் பரிசோதனை செய்து, பிரசவத்திற்கு முன்பாகச் செய்ய வேண்டிய சில மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துகொள்ளுமாறு கேட்கலாம். உங்கள் உடல்நலம் மற்றும் குழந்தையின் உடல்நலம் பற்றிய தகவலைப் பெற இந்தப் பரிசோதனைகள் அவருக்கு உதவும்.
இடுப்புக் கீழ்ப்பகுதியை ஆய்வு செய்வார், பாப் ஸ்மியர் சோதனை செய்வார் ஏதேனும் நோய்த்தொற்றுகள் உள்ளனவா என அறிவதற்காக கல்ச்சருக்காக சிறுநீர் மாதிரிகளைச் சேகரிப்பார். மருத்துவர் கருவின் இதயத்துடிப்பு ஓசையை சோதித்துப் பார்க்கலாம். உங்கள் உணவுப் பழக்கம், பிரசவத்திற்கு முன்பு இருக்க வேண்டிய இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்கள் மற்றும் வாழ்க்கை முறையில் தேவையான மாற்றங்கள் போன்றவை பற்றியும் உங்களிடம் அவர் பேசலாம்.
இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளைக் கொண்டு பின்வரும் சோதனைகள் செய்யப்படுகின்றன:
இரத்தசோகை
பாலியல் தொற்று நோய்க்கான அறிகுறிகள்
முன்சூல்வலிப்பு (ப்ரீக்ளாம்ப்சியா)
நீரிழிவுநோய்
ஹெப்பட்டைட்டிஸ் B
ஆர். எச். காரணி
ஆரம்பகாலத்தில் குழந்தையின் வளர்ச்சியை மதிப்பிடுவதற்காக மீயொலி (அல்ட்ராசவுண்ட்) சோதனை செய்யப்படலாம்.

பின்வரும் நிலைகளில் சிலருக்கு மரபியல் சோதனை செய்யப் பரிந்துரைக்கப்படலாம்.
35 வயதுக்கும் மேற்பட்டவராக இருந்தால்
முந்தைய பிரசவங்களில் பிறவிக் குறைபாடு, குறைப்பிரசவம், கருச்சிதைவு அல்லது குழந்தை இறந்து பிறத்தல் போன்ற சிக்கல்கள் ஏற்பட்டிருந்தால்
குடும்பத்தில் யாருக்கேனும் மரபியல் கோளாறுகள் இருந்தால்
முன்னதாகவே முன்சூல்வலிப்பு அல்லது கர்ப்பகால நீரிழிவு இருப்பதாகத் தெரியவந்திருந்தால்.
சோதனைகளின் முடிவுப்படி வேறு பிரச்சனைகள் உள்ளதா என அறிந்துகொள்வதற்காக மேலும் சோதனைகள் செய்யப்படலாம்

ஊட்டச்சத்து (Nutrition)
கர்ப்பத்தின் போது எப்போதையும் விட இன்னும் ஆரோக்கியமான உணவு உட்கொள்ளுதல் மிக அவசியம். புரதம், கால்சியம், இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம் போன்ற சத்துகள் கர்ப்பத்திற்கு முன்பு உங்களுக்குத் தேவைப்பட்டதை விட மிக அதிக அளவில் தேவைப்படும். நீங்கள் சாப்பிடும் உணவிளிருந்துதான் குழந்தை தனக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை எடுத்துக்கொள்ளும், ஆகவே சிரிவிகித உணவு என்பது மிக முக்கியம். முதல் மூன்று மாதங்களில் 1 முதல் 2 கிலோ எடை கூட வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.
எச்சரிக்கை (Red Flags)
கீழ்க்கண்ட பிரச்சனைகள் ஏற்பட்டால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனையும் மருத்துவக் கவனிப்பும் பெற வேண்டும்:
கருப்பை தசைப்பிடிப்பு (யூட்டரின் கிராம்ப்) மற்றும் பிறப்புறுப்பில் இரத்தம் கசிதல் போன்ற பிரச்சனைகள்
காய்ச்சல், சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது எரிச்சல் இருந்தால். பிறப்புறுப்பில் அதிகமாக திரவங்கள் வெளியேறினால்