டாக்டர் நான் இரண்டு வருடங்களாக கர்ப்பத்தடை மாத்திரைகளை பாவித்துவருகின்றேன். நான் மிகவும் ஒழுங்காகத்தான் பாவித்து வந்தேன் இருந்தாலும் கர்ப்பத்தடை மாத்திரை பாவிக்கும் போதே கர்ப்பமாகி விட்டேன்.இப்போது இரண்டு மாதமாக முழுகாமல் இருக்கேன்.
கர்ப்பத்தடை மாத்திரை பாவித்ததன் விளைவாக குழந்தை அங்கக் குறைபாடோடு பிறக்கும் என்பதால் கருக்கலைப்புச் செய்யச் சொல்லி உறவினர்கள் கூறுகிறார்கள்.எனது கணவரும் நான் ஒழுங்காக மாத்திரை பாவிக்காததால்தான் இப்படியாகி விட்டதாக குறைபடுகிறார்.ஆனால் நான் ஒழுங்காகத்தான் மாத்திரைகளை உட்கொண்டேன். நான் என்ன செய்வது என்று தெரியாமல் அவதிப்படுகிறேன்.எனது குழந்தை குறைபாடோடு பிறக்கும் என்பது உண்மையா?
நான் கருவைக் கலைக்கத்தான் வேணுமா?
நீங்கள் தேவை இல்லாமல் மனத்தைக் குழப்ப வேண்டிய அவசியம் இல்லை சகோதரி.
முதலாவதாக எந்தவொரு கருத்தடை முறையும் 100 வீதம் நம்பகமானதல்ல. எந்தவொரு கர்ப்பத்தடை முறையும் சிலவேளைகளில் பிழையாகிப் போகலாம். கர்ப்பத்தடை சத்திர சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு கூட அரிதாக கர்ப்பம் ஏற்படும் சந்தர்ப்பம் உள்ளது.
ஆகவே உங்கள் தவறு என்று இதில் எதுவுமே இல்லை. உங்கள் கணவரையும் இதை வாசிக்கச் சொல்லி அவரின் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்.
அடுத்ததாக கர்ப்பத்தடை மாத்திரை உட்கொண்டதால் உங்கள் குழந்தை அங்க்லவீனமாகப் பிறக்கும் என்பதிலும் எந்தவிதமான உண்மையும் இல்லை. கர்ப்பத்தடை மாத்திரைகளில் உள்ளவை வெறுமனே ஹார்மோன்களே . இவை நமது உடலில் உள்ள இயற்கையான ஹார்மோன்கள்.இவற்றால் உங்கள் குழந்தைக்கு எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்படாது.
தேவை இல்லாத மூட நம்பிக்கைகள் காரணமாக மனதை அலட்டிக் கொள்ளாமல் சந்தோசமாக உங்கள் தாய்மைப் பருவத்தை அனுபவியுங்கள்