கர்ப்பமாகிய பெண் ஒருவர் 40 வார காலத்திற்கு கர்ப்பத்தை தொடர்ந்தும் ஒரு சிசுவைப் பெற்றெடுப்பது வழமை. இக்காலப்பகுதியில் அப் பெண் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் சிக் கல்களும் பல. இவற்றால் தாய்க்கும் சிசுவுக் கும் பல இன்னல்கள் ஏற்படுவது வழக்கம். இவ்வாறான ஒரு பிரச்சினையாகவே கர்ப்பகாலத்திலேற்படும் உயர்குருதியமுக்கமும் காணப்படுகின்றது.
இவ்வகையான உயர்குருதியமுக்கம் கர்ப்பகாலத்திலேற்படும் போது தாய்க்கும் சிசுவுக்கும் எவ்வகையான சிக்கல்கள் பாதிப்புகள் ஏற்படும் என்பதனை நீங்கள் அறிந்திருப்பது அவசியம். அப்போதுதான் இதற்கு சிகிச்சையளிக்கும் போது மக்களதும், பெண்களதும் ஒத்துழைப்பை முற்றாகப் பெற்றுக்கொள்ள முடியும். ஆகையால் இந்தக் கர்ப்பகால உயர் குருதியமுக்கம் பற்றிய விபரங்களை ஆராய்வது பொருத்தமானது.
கர்ப்பகாலத்தில் ஏற்படும் உயர்குருதியமுக்கம்
பெண் ஒருவருக்கு குருதியமுக்கம் சாதாரண அளவில் இருந்து கர்ப்பந்தரித்து 5 மாதங்கள் முடிவடைந்த பின்னர் அதிகரிக் குமாயின் அது உயர்குருதியமுக்கம் என
வரையறுப்போம். குருதியமுக்கம் 140 / 90 MM Hgக்கு மேல் செல்லும் போது அதிகரித்த குருதியமுக்கம் என வரையறுப்போம். இந்த அதிகரித்த குருதியமுக்கம் பிரசவத்தின் பின்னர் குறைவடைந்து சாதாரண நிலைக்குத் திரும்பும்.
கர்ப்பகாலத்தில் ஏற்படும் உயர் குருதியமுக்கத்தை அறிதல்
கர்ப்பகாலப் பராமரிப்புகள் ஒழுங்காக ஆரம்ப காலத்தில் மாதம் ஒரு முறையும், பிந்திய காலத்தில் இரு வாரங்களுக்கு ஒரு முறையும் மேற்கொள்ளப்படும். இதன் போது வைத்தியர் உங்களது குருதியமுக்கத்தை (Blood Pressure) அளப்பார். அத்து டன் சிறுநீர்ப்பரிசோதனையில் புரதம் உள்ளதன்மை அறியப்படும். இவ்வாறு ஒழுங்காக குருதியமுக்கத்தையும் சிறுநீரையும் பரிசோதிக்கும் போது இதற்கான ஆதாரங்களைக் கண்டறிய முடியும்.
கர்ப்பகாலத்தில் உயர்குருதியமுக்கம் ஏற்படும் போது ஏற்படக்கூடிய பாதிப்புகள்:
கர்ப்பகாலத்திலேற்படும் குருதியமுக்க அதிகரிப்பால் தாய்க்கும் சிசுவுக்கும் பாதிப்புக்கள் ஏற்படும்.
தாய்க்கும் ஏற்படும் பாதிப்புகளாவன:
தலைவலி, வாந்தி, கண்பார்வை கலங்கல், குருதியமுக்க அதிகரிப்புடன் சிலரில் சிறு நீருடன் புரதமும் வெளியேறத்தொடங்குதல் (இந்நிலை சற்றுத் தீவிரமான நிலையமாக கருதப்படும் Pre – eclampsia) வலிப்பு ஆகியனவாகும்.
சிசுவுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளாவன:
சிசு வளர்ச்சி குறைதல், சிசுவின் துடிப்புக் குறைவடைதல் சிசுவின் எடை குறைதல், சிசுவுடன் வளரும் நச்சுக்குடலில் குருதிப் பெருக்கு ஏற்படல் (Placental Abruption) மற்றும் சிறுமரணங்கள் ஆகும்.
கர்ப்பகாலத்தில் உயர்குருதியமுக்கம்ஏற்படுவதற்கான காரணம்
கர்ப்பிணி ஒருவரி நச்சுக்குடல் (Placental) சுரக்கும் பதார்த்தங்கள் பெண்ணின் குருதியில் கலக்கும்போது அவை குருதிக்குழாய்களை சுருங்கச்செய்யும் போது இந் நிலை ஏற்படும் எனவே தான் பிரசவத்தின் பின் நச்சுக்குடலும் வெளியேறுவதால் குருதியமுக்கம் சாதாரண அளவுக்குத் திரும்புகிறது.
இந்நிலை கூடுதலாக ஏற்படும் பெண்களின் வகைகள்
35 வயதுக்கு மேல் கர்ப்பந்தரித்தவர்கள், பரம்பரையில் இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டவர்கள் அதாவது நெருங்கிய இரத்த உறவினர்களில் இவ்வாறன குருதியமுக்க அதிகரிப்பு ஏற்பட்டவர்கள்.
உடற்பருமன் அதிகமாக உள்ள பெண்கள்.
கடந்த கர்ப்பகாலத்தில் இவ்வாறான பிரச்சினை எற்பட்ட பெண்கள்.முதல் தடவை கர்ப்பந்தரிக்கும் பெண்களில் குருதியமுக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் கூடுதலாக உள்ளன.
கர்ப்பந்தரிக்கும் போது சிறுநீரக நோயுடையவர்கள்.கர்ப்பந்தரிக்கும் போது நீரிழிவு நோயுடையவர்கள். மேற்குறிப்பிட்ட பெண்களில் கர்ப்பகா லக் குருதியமுக்க அதிகரிப்பு நிலை ஏற்படுகின்றது. கர்ப்ப
காலத்தில் குருதியமுக்கம் அதிகரிப்பதனை கவனிக்காது விடும் போது தாயில் ஏற்படும் விளைவுகள்:
சிறுநீரக செயற்பாடு குறைதல், சிறுநீர் வெளியேற்றம் குறைதல், மூளையில் குருதிக்கசிவு, பாரிசவாதம், ஈரலில் ஏற்படும் குருதிக் கசிவு, ஈரல் தொழிற்பாடுகள் பாதிப்படைந்து கண்கள் மஞ்சள் ஆகுதல், கால்கள் முகம் கைகள் வீங்குதல், குருதி உறையாத் தன்மைக்கு மாறுதல், நுரையீரலில் நீர் தேங்குதல் என பல வழிகளில் சிக்கல்கள் ஏற்பட்டு. இறுதியில் தொடர்ச்சியான வலிப்புகள் மயக்கம் ஏற்பட்டு மரணங்கள் கூட ஏற்படும் நிலைகள் கூட உள்ளன.
கர்ப்பகால உயர்குருதியமுக்கத்திற்கு மேற்கொள்ளும் சிகிச்சை
கர்ப்பக் கால குருதியமுக்க அதிகரிப்பு எந்தளவு தீவிரமாக உள்ளது என்பதனைப் பொறுத்து சிகிச்சை தீர்மானிக்கப்படும். அதாவது குருதியமுக்க உயர்வை கண்டறிந்தால் நாம் மேற்கொண்டு இதனை ஒழுங்காகக் பார்க்க வேண்டும்.
அத்துடன் சிறுநீர் இரத்தப்பரிசோதனை என்பன மேற்கொள்வதன் மூலம் இந்த நோயின் தாக்கத்தையும் உக்கிரத்தையும் அறிய முடியும். அத்துடன் ஸ்கான் பரிசோதனை மேற்கொண்டு சிசுவில் வளர்ச்சி தொடர்பாக அறிய வேண்டும். அத்துடன் தேவை ஏற்படின் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவ கண்காணிப்பில் ஓய்வாக இருக்க ஆலோசனை வழங்கப்படும்.
அத்துடன் குருதியமுக்கத்தை கட்டுப்படுத்த மாத்திரைகளையும் வழங்க வேண்டும். குறைமாதமாக இருப்பின் சிசுவின் சுவாச தொகுதியில் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் ஊசிகள் வழங்கப்படும்.
இவ்வாறு சிலவாரங்கள் சிகிச்சை வழங்கப்பட்டாலும் பிரசவத்திற்கு சற்று முற்கூட்டியே மேற்கொள்ளும் போதே இதற்கான தீர்வு கிடைக்கின்றது. அதாவது இறுதி நேரம் வரை காத்திருக்காமல் நாம் பிரசவத்தை மேற்கொள்வோம்.
இது சாதாரண சுகப்பிரசவமாகவோ அல்லது சிசேரியன் பிரசவமாகவோ மேற்கொள் ளப்படும். பிரசவத்தின் பின் குருதிய முக்கம் குறைவ டைந்து வழமைக்குத்திரும்புகின் றது.
உயர் குருதியமுக்கம் ஏற்படும் போது
தென்படும் நோய் அறிகுறிகள்
உயர் குருதியமுக்கம் கர்ப்பகாலத்தில் உள்ள போது சிலவேளைகளில் நோய் அறிகுறிகள் இருப்பதில்லை. ஆனால் தலைவலி, வாந்தி, கை கால்கள் கூடுதலாக வீங்குதல், கண்பார்வையில் ஏற்படும் மாற்றங்கள், சிறுநீர் குறைவாக வெளியேறுதல் போன்றன இருக்கலாம். இவை காணப்படின் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.எனவே கர்ப்பகாலத்தில் ஏற்படும் குருதியமுக்க அதிகரிப்பை கவனத்திலெடுத்து சரியான விதத்தில் கையாளும் போது இதன் தாக்கங்களிலிருந்து விடுபடலாம்.