அந்தரங்க காதல்:தகாத உறவுகளும், அதற்கான தூண்டுதல்களும் என்னென்ன காரணங்களுக்காக நிகழ்கின்றது, தம்பதியர் அதை முன்பே உணர்ந்து கொள்ளும் வழிகளையும், தீர்வுகளையும் விவரிக்கிறார், உளவியல் நிபுணர் டாக்டர் நப்பின்னை சேரன்.
ஓர் ஆணும் பெண்ணும் வெவ்வேறு ஆசைகளுடன், எதிர்பார்ப்புகளுடன் இல்லற வாழ்வில் நுழைகின்றனர். தங்களுடைய ஆசைகள் நிறைவேறாத போது, தங்களுடைய துணையோடு திருப்திகரமான வாழ்க்கையை வாழ முடியாத போது, திருமணத்தை மீறிய உறவிற்குள் நுழைகின்றனர்.
தகாத உறவு ஏற்படுவதற்கான காரணங்கள்
எங்கோ நடக்கிறதெனில் அது இயல்பானது என அமைதி காக்கலாம். ஆனால் தகாத உறவுப் பிரச்னையால் பெருகும் கொலைகள் வன்முறைகளை பார்க்கும் போது, அது அரிதானதில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மணமுடிக்கும் இருவர், அந்த உறவில் நேர்மையாக இருக்க வேண்டியது அடிப்படை. ஒரே வீட்டில் வாழ்ந்து கொண்டு, நான் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்வேன். நீ பொறுத்துக்கொள்ள வேண்டும் என, கணவனோ மனைவியோ எதிர்பார்க்க முடியாது. தகாத உறவு குடும்பத்தின் நிம்மதியை, குழந்தைகளின் எதிர்காலத்தை சிதைக்கிறது என்பதால், ஒவ்வொரு தம்பதியரும் அந்த தீயப்பழக்கத்திலிருந்து விலகி நிற்க உறுதிகொள்ள வேண்டும். தகாத உறவிற்கு ஏற்படுவதற்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யப் பழகுவதன் மூலம், வாழ்வில் ஏற்படும் பேரிழப்பைத் தடுக்க முடியும்.
பிடிக்காமல் திருமணம் செய்துகொள்வது
பெரும்பான்மையினர், குடும்பம் மற்றும் சமூகதாயத்தின் அழுத்தம் காரணமாக திருமணம் செய்கின்றனர். இந்த மாதிரி மனநிலையுடன் திருமணம் செய்வோர், தங்களின் வாழ்க்கை துணையை பற்றி தெரிந்து கொள்ளாமலேயே திருமணம் செய்கின்றனர். ஒரு கட்டத்திற்கு பிறகு, சிலர் ஏற்றுக் கொள்கின்றனர், சிலருக்கு வெறுமை உணர்வு வரத் தொடங்குகிறது. தற்போதைய துணையை விட சிறந்த ஆணையோ, பெண்ணையோ பார்க்கும் போது இயல்பாகவே கவர்ந்திழுக்கப்படுகின்றார்கள். முதலில் நட்பாக பழக ஆரம்பித்து, அதன்பிறகு அது தகாத உறவுமுறைக்குள் சென்றுவிடுகிறது.
கோவையைச் சேர்ந்தவர், வினிதா. பிசினஸ்மேனான அவரது அப்பா மிகவும் கண்டிப்பானவர்.
கல்லூரிப் படிப்பை முடித்ததும் வினிதாவிற்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினார்கள். ஆனால் வினிதாவிற்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. பெற்றோரின் வற்புறுத்தலாலும், அப்பாவின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பிக்கவும் திருமணத்திற்கு சம்மதித்தாள்.
சொந்தக்காரரையே மணமுடித்தாள். அன்பானவராக, புரிந்துணர்வு மிக்கவராக கணவர் இருந்தும், வினிதாவிற்கு அவர் மேல் ஈர்ப்பு வரவில்லை. அவரின் அதீத அக்கறையும், பக்குவமும் இல்லற வாழ்வில் சலிப்பை ஏற்படுத்தியது. காதல் ஜோடியை போல் கணவரோடு தனியாக பயணம் செய்ய வேண்டும், தினமும் அன்பை வெளிப்படுத்த வேண்டும், ஐ லவ் யூ சொல்ல வேண்டும், அடிக்கடி ஆச்சர்யப்படுத்த வேண்டும் என, ரொமான்ட்டிக் உறவை எதிர்பார்த்தாள். அது கணவரிடம் கிடைக்காத போது, அலுவலகத்தில் உடன் பணிபுரியும் ஓர் இளைஞருடன் நெருக்கமானாள். இதனால் குடும்பத்தில் பூகம்பம் வெடித்தது. தனது நிம்மதியை மொத்தமாக இழந்து, வெகு தாமதமாக தோழியின் அறிவுரையின் பேரில் குடும்பநல ஆலோசகரை சந்தித்தாள்.
உணர்வு ரீதியாக துண்டிக்கப்படுவது
உணர்வுரீதியாக துண்டிக்கப்படும் கணவன் மனைவிக்கிடையே எவ்விதப் பகிர்தலும் இருக்காது. எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்த மாட்டார்கள், மனம் விட்டுப் பேசவதைத் தவிர்ப்பார்கள், நேரம் கிடைத்தாலும் கணவன் மனைவி இருவரும் இணைந்து நேரம் செலவு செய்வதை விரும்ப மாட்டார்கள். இருவரின் உணர்வு ரீதியான மற்றும் உடல் ரீதியான தேவைகள் நெடுநாட்களாக பூர்த்தி செய்யப்படாது இருக்கும். அதனால் இருவரும் தங்களுக்குள் அடக்கி வைக்கும் ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை, வேறொரு நபரிடத்தில் நிறைவேற்றும் சூழல் உருவாகிறது.
யதார்த்தமற்ற எதிர்பார்ப்புகள்
கணவன் மனைவி உறவில் டிவி, சினிமா, சமூக வலைதளங்களின் தாக்கம் பெரிதளவில் இருக்கின்றது. இதனால் இருவருக்குள்ளும் அதீத ஃபேண்டஸி, கற்பனை, சினிமாவில் காட்டுவது போல வாழ்க்கைமுறை வேண்டும் என்பது போன்ற உணர்வுகள் உண்டாகிறது. முன்பெல்லாம் இது மாதிரியான சிந்தனை உள்ளவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தனர். இந்த தகவல் தொழில்நுட்ப காலத்தில் அது அதிகரித்துவிட்டது. துணையிடம் உண்மையாக, அன்பாக இருந்த போதும் காரணமே இல்லாமல் உறவில் எளிதாக சலிப்படைவார்கள். திருமண உறவில் திருப்திக்கான ஒரு அளவுகோளை நிர்ணயித்துக் கொண்டு செயல்படுவார்கள். அது நிறைவேற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். இருக்கிற உறவில் சலிப்பாக உணர்ந்தால் வேறொரு உறவில் சந்தோஷம் கிடைத்தால் அந்த நபரோடும் உறவு வைத்துக் கொள்வார்கள்.
இவர்களை பார்டர் லைன் பெர்சானலிட்டி கோளாறு (Border line personality dis-order) உள்ளவர்களாக உளவியல் நிபுணர்கள் அடையாளப்படுத்துகின்றனர். இந்த கோளாறு பெண்களிடத்தில் அதிகமாக ஏற்படுகின்றது. இந்த ஆளுமையை கொண்ட துணை, இதேபோன்ற ஆளுமையை கொண்டிருக்கும் வேறொரு நபரிடம், உறவைத் தொடர விரும்புவார்கள்.
அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்வதால்
பொதுவாக அதிக வயது வித்தியாசம் உடைய கணவன் மனைவிக்குள், தலைமுறை இடைவெளி இருப்பதால், சமத்துவ புரிதலுக்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும். அதிக ஆதிக்கம் நிறைந்த கணவனாக, மனைவியின் சின்னச் சின்ன எதிர்பார்ப்புகளை கூட புரிந்துகொள்ள முடியாமல் போகும். மனைவிக்கோ ஒரு பெரிய மனிதருடன் வாழும் உணர்வு உண்டாகும். தாம்பத்ய உறவிலும், இருவரின் எதிர்பார்ப்புகளை பற்றி துணையிடம் வெளிப்படையாக பேசும் சூழல் இருக்காது.
குறைந்த வயதுள்ள துணைக்கு எப்போதுமே வாழ்க்கையில் உற்சாகம், ரொமான்ஸ் தேவைப்படும். அதிக வயதுள்ள துணை பக்குவப்பட்டவராக, கண்டிப்பு மற்றும் ஆதிக்கத்தோடு நடந்து கொள்ளும் போது கணவன் மனைவி இருவருக்குள்ளும் மனக்கசப்பு உண்டாகிறது. இத்தகைய சூழலில் தன் உணர்வுகளை சரியாக புரிந்து கொள்ளவும், வெளிப்படுத்தவும் ஒரு நபரை பார்க்கும் போது காதல் வயப்பட்டு, ஈர்க்கப்பட்டு ஒரு புதிய உறவை உருவாக்கி கொள்கிறார்கள்.
ஆதிக்கம் நிறைந்த துணை
கணவனோ, மனைவியோ அதிகமாக ஆதிக்கம் செலுத்தும் போது, கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் துணைக்கு ஒரு கட்டத்தில் இந்த உறவை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும். வாழ்க்கை முழுவதும் தன் துணையின் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்து கொண்டே இருப்பதில் சலிப்புற்று, அவர்கள் திருமணத்தை மீறிய இன்னொரு உறவை நாடுகின்றனர். தன் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தக் கூட முடியாத சூழலில், துணையுடனான உறவின் மீது வெறுப்பு உண்டாகும். தனிமனித உணர்வுகளை மதிக்காமல், துணையை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் துணையிடமிருந்து விடுதலை பெறவே விரும்புவார்கள். நமது சமூக அமைப்பு அதற்கு அனுமதிக்காது என்ற சூழலில், வேறொரு உறவில் தஞ்சமடைகின்றனர்.
திருப்தியடையாத செக்ஸ் வாழ்க்கை
பொதுவாக தாம்பத்ய உறவில் கணவன் மனைவி திருப்தி அடையவில்லை என்றாலோ, தங்களுடைய ஆசைகளை, உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத சூழல் இருந்தாலோ, திருமண உறவு கசக்கத் தொடங்கும். நமது சமூக அமைப்பில், திருமண உறவில் ஆணோ பெண்ணோ சுதந்திரமான செக்ஸை அனுபவிக்கும் சூழல் இல்லை. பல்வேறு விதமான மனத்தடைகள் உண்டாவதால், மேலோட்டமான உறவையே அனுபவிக்கின்றனர். இந்த மாதிரி உணர்வுகளை அடக்கி வைப்பவர்கள், போர்னோகிராபி எனப்படும் ஆபாச வீடியோக்கள் பார்க்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்கின்றனர். செக்ஸ் அல்லது பாலியல் உணர்வு கலந்த உரையாடலக்ளை, சாட்டிங்குகளை செய்யத் தொடங்குகின்றனர். தன்னுடைய உணர்வுகளை துனைவரால் புரிந்து செயல்படாமல் போவது மற்றும் உடல் ரீதியான தேவைகள் நிறைவேறாத போது, வேறொரு உறவை தேர்ந்தெடுக்கின்றனர்.
உந்துதல் இல்லாத உறவு நிலைக்காது
திருமண உறவில் பாராட்டுவது, ரசிப்பது, மனம் விட்டுப் பேசுவது, விட்டுக்கொடுப்பது, அன்பளிப்பு வழங்குவது, தனிமையில் தரமான நேரம் செலவு செய்வது, தொடுதல், உணர்வுகளை வெளிப்படுத்துவது, கருத்துகளை மதிப்பது போன்ற சுவாரஸ்யங்களும், சூழலும் இல்லாமல் போனால், அந்த உறவில் உந்துதலே இருக்காது. உந்துதல் இல்லாத கணவன் மனைவி உறவில், பிணைப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருக்கும். இந்த உந்துதல் யாரிடம் கிடைக்கிறதோ, அவர்களிடம் ஈர்க்கப்பட்டு உறவு வைக்கத் தொடங்கிறார்கள்.
கணவன் மனைவி உறவில், பலப்படுத்த வேண்டிய விஷயங்கள்
திருமண உறவில், தம்பதியருக்கிடையில் பேச்சு தொடர்பு என்பது, இன்றைய காலகட்டத்தில் மிக மிக அவசியம். சில பிரச்சனைகள் பேசித் தீர்க்கும் நிலையில் இருக்கும். ஆனால் தம்பதியர் பேசாமலேயே ஈகோவால் பிரச்னையை பெரிதாக்கிக் கொள்கிறார்கள். கணவன் மனைவி இருவரின் தேவைகள் என்ன என்பதை ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசினால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
தம்பதியரில் ஒருவரின் உணர்வு ரீதியான, உடல் ரீதியான தேவைகள், இன்னொருவருடையதில் இருந்து மாறுபடலாம். அதை கண்டுபிடித்து நிறைவேற்ற வேண்டியது, இருவரின் பொறுப்பாகும். நான் ஆண், அதிகம் படித்தவள், நான் பணக்காரன், நான் மாடர்ன் என நீங்கள் எப்படிப்பட்ட ஆண்/பெண்ணாக இருந்தாலும், திருமண உறவில் இணையும் போது, துணையின் எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். அப்படி வேறு எதாவது உளவியல் சிக்கல் இருந்தால், அதை உளவியல் ஆலோசகர்கள் மூலமாக சரிசெய்து, உறவை வலுவாக்க முயற்சிக்க வேண்டும்.
அன்பளிப்பு கொடுப்பது, ஐ லவ் யூ சொல்ல வேண்டும் என்று விரும்புவது, கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது போன்ற தொடுதலை விரும்புவது என, துணையின் அன்பின் மொழியை புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு நபரும் அன்பை வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்த வேண்டும் என நினைப்பார்கள். உங்கள் துணையின் அன்பின் மொழியைக் கண்டறியுங்கள்.
தம்பதியர் அன்பு, கவனம், பாராட்டு இந்த மூன்றையும் விட்டுக்கொடுக்காமல் இருக்க வேண்டும். உறவை பலவீனப்படுத்தும், சிக்கலாக்கும் செயல்பாடுகளை ஆரம்பத்திலேயே பேசி தீர்ப்பதால் உறவில் ஏற்படும் வெறுப்புகளை நேசமாக மாற்றலாம். எதிர்பார்ப்புகளை நெடு நாட்கள் மனதில் வைத்து புழுங்குவதால், உங்களுக்குள் இடைவெளி விழும்.
துணையின் மனதில் நீங்கள் இல்லை என்றால், அது நீண்ட நாட்கள் காலியாகவே இருந்தால், அங்கே யாரேனும் குடியேறுவதற்கு வாய்ப்பு உருவாகும். எனவே துணையின் மனதில் உறுதியான இடத்தைப் பிடிக்க முயற்சி செய்யுங்கள்.
ஆரோக்கியமான வார்த்தைகளும், செயல்பாடுகளும், கணவன் மனைவி உறவை பலப்படுத்தும்.