Home அந்தரங்கம் கணவன்-மனைவி உறவு குறித்து வள்ளுவர் கூறிய புணர்ச்சிமகிழ்தல்

கணவன்-மனைவி உறவு குறித்து வள்ளுவர் கூறிய புணர்ச்சிமகிழ்தல்

52

இன்றைய தலைமுறைக்கு பேஸ்புக்கில் வருவதை பார்ப்பதும், வாட்ஸ்அப்பில் வருவதை பகிர்வதும், மனதில் தோன்றுவதை அப்படியே முகம் தெரியாதவர்கள் அதிகம் உள்ள முகநூலில் எழுதுவதும் பேஷனாக உள்ளது. திருமணம் ஆன, ஆகாதவர்கள் , காதல், காமம் குறித்து இணைத்தில் தேடுவது அதிகமாக உள்ளது. இவர்களுக்காக 2000 ஆண்டுகளுக்கு முன்பே, கணவன்-மனைவி இடையே நீடித்த அன்பும், காதலும் , காமமும் எப்படி இருக்க வேண்டும் என்பதை புணர்ச்சிமகிழ்தல் என்கிற 10 குறளில் திருவள்ளுவர் அழகாக விளக்கியுள்ளார். அவற்றை பார்ப்போம்.

அதிகாரம்: புணர்ச்சி மகிழ்தல்

குறள் : 1101 முதல் 1110 வரை

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள

விளக்கம்: விழியால் பார்த்து, செவியால்கேட்டு, நாவால் உண்டு, மூக்கால் மோந்து, உடம்பால் தீண்டி என் ஐம்பொறிகளாலும் அனுபவிக்கும்படும் இன்பம் ஒளிமிக்க வளையல்களை அணிந்த மனைவியிடம் மட்டுமே உண்டு.

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.

விளக்கம்: நோய்களுக்கு மருந்து பெரும்பாலும், அந்நோய்களுக்கு மாறான இயல்பை உடையவையே. ஆனால் இவள் தந்த நோய்க்கு இவளே மருந்து.

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.

விளக்கம்: தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?.

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.

விளக்கம்: தன்னை நீங்கினால் சுடும், நெருங்கினால் குளிரும் ஒரு தீயை என் உள்ளத்தில் ஏற்ற, இவள் அதை எங்கிருந்து பெற்றாள்?.

வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.

விளக்கம்: நாம் விரும்பும் பொருள்கள் விரும்பியபொழுது விரும்பியவாறே இன்பம் தருவது போல, பூச்சூடிய கூந்தலை உடைய இவள் தோள்கள் இவளுடன் எப்போது கூடினாலும் இன்பம் தருகின்றன.

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.

விளக்கம்: இவளை அணைக்கும்போது எல்லாம் வாடிக் கிடந்த என் உயிர் தளிர்க்கும்படி என்னைத் தொடுவதால், இவளின் தோள்கள் அமிழ்தத்தில் செய்யப்பட்டவை போலும்.

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.

விளக்கம்: அழகிய மா நிறப் பெண்ணாகிய என் மனைவியிடம் கூடிப் பெறும் சுகம், தன் சொந்த வீட்டில் இருந்து கொண்டு, தன் உழைப்பில் வந்தவற்றைத் தனக்குரியவர்களுடன் பகிர்ந்து உண்ண வரும் சுகம் போன்றது.

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.

விளக்கம்: இறுக அணைத்துக் கிடப்பதால் காற்றும் ஊடே நுழைய முடியாதபடி கூடிப் பெறும் சுகம், விரும்பிக் காதலிப்பார் இருவர்க்கும் இனிமையானதே.

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.

விளக்கம்: படுக்கைக்குப் போகுமுன் சிறு ஊடல் செய்தல், தவறு உணர்ந்து சமாதானம் ஆதல், அதன்பின் கூடல் இவை அல்லவா திருமணம் செய்து கொண்டவர் பெற்ற பயன்கள்!.

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.

விளக்கம்: நூல்களாலும் நுண் அறிவாலும் அறிய அறிய முன்னைய நம் அறியாமை தெரிவதுபோல, நல்ல அணிகளை அணிந்திருக்கும் என் மனைவியுடன் கூடக் கூட அவள் மீது உள்ள என் காதற்சுவையும் புதிது புதிதாகத் தெரிகிறது.