குடும்பத்தில் சண்டை வந்தாலும் உங்களால் சமாதானமாக இருக்க முடியும். குடும்பம் என்ற தோட்டத்தில் தென்றல் வீசுமா, புயல் அடிக்குமா என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் உங்களால் சமாளிக்க முடியும். எப்படி?
* இரண்டு பேரும் ஏட்டிக்குப்-போட்டி பேசிக்கொண்டே இருந்தால்தான் சண்டை வரும்; யாராவது ஒருவர் அமைதியாக இருந்தால் எல்லாம் சரியாகிவிடும். கோபத்தில் கத்தினால், யாருமே உங்களை மதிக்க மாட்டார்கள். அதனால், உங்கள் கோபத்தை கிளறினாலும் பதிலுக்கு பதில் பேசாதீர்கள். யார் பேசி ஜெயிக்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை, சண்டை இல்லாமல் சந்தோஷமாக இருப்பதுதான் முக்கியம்.
* ஒருவர் பேசும்போது குறுக்க குறுக்க பேசாதீர்கள்; பொறுமையாக கேளுங்கள். அப்படி செய்தால் சண்டையை மறந்து சீக்கிரமாக சமாதானம் ஆகிவிடலாம். எதையோ மனதில் வைத்துதான் இப்படி பேசுகிறார்கள் என்று நீங்களே முடிவு செய்யாதீர்கள். உண்மையிலேயே அவர்களுடைய மனதில் என்ன இருக்கிறது என்று புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். “
* கோபம் வந்தால் அமைதியாக அந்த இடத்தைவிட்டுப் போய்விடுங்கள். ஒருவேளை, வேறொரு ரூமுக்கு போகலாம், கொஞ்ச தூரம் நடந்துவிட்டு வரலாம். ஆனால் அப்படி போவதால், “ஓடி ஒளியிறீங்க”, “முகத்தை தூக்கி வெச்சிக்கிறீங்க”, “பிடிவாதமா இருக்கீங்க” என்று அர்த்தமில்லை. அந்த மாதிரி நேரத்தில், கடவுளிடம் மனம்விட்டு பேசுங்கள்; பொறுமையாக இருப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் அவரிடம் உதவி கேளுங்கள்.
* வெடுக்-வெடுக்கென்று பேசினால் பிரச்சினை இன்னும் பெரிதாகும். ஆறுதலாகப் பேசினால், புண்பட்ட மனதிற்கு மருந்து போடுவது போல இருக்கும். அவர்களுடைய மனதில் என்ன நினைக்கிறார்கள் என்று நீங்களே முடிவு செய்யாதீர்கள், அவர்களிடமே கேளுங்கள்.
* நீங்கள் கத்தினால், பிறகு அவர்களும் கத்துவார்கள். உங்கள் மனம் காயப்பட்டிருந்தாலும் குத்தலாக பேசாதீர்கள், திட்டாதீர்கள். ‘என்மேல உங்களுக்கு கொஞ்சம்கூட அக்கறையே இல்லை’, ‘நான் சொல்றதை ஒருநாளாவது கேட்டிருக்கீங்களா?’ என்று சொல்லாதீர்கள். ‘நீங்க இப்படி சொன்னது எனக்கு கஷ்டமா இருந்தது’ என்று பொறுமையாக எடுத்து சொல்லுங்கள். எந்தவொரு சூழ்நிலையிலும் கைநீட்டி அடிக்காதீர்கள். அதேமாதிரி, தரக்குறைவாக பேசாதீர்கள், பட்டப்பெயர் வைத்து கூப்பிடாதீர்கள், மிரட்டாதீர்கள்.
* உங்கள் மனதை காயப்படுத்தியிருந்தால், அதைப் பற்றியே யோசிக்காதீர்கள். நடந்ததையே நினைத்துக்கொண்டிருந்தால் சண்டையை மறந்து சமாதானமாக முடியாது. யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்தால்தான் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க முடியும். அதனால், சமாதானமாவதற்கு உங்களால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்யுங்கள். “என்மேல எந்த தப்பும் இல்லையே!” என்று நீங்கள் நினைக்கலாம்; ஒருவேளை, கோபம் வருவது போல நீங்கள் ஏதாவது பேசியிருக்கலாம்… யோசிக்காமல் எதையாவது செய்திருக்கலாம்… அதற்காக மன்னிப்பு கேளுங்கள், நீங்களும் மன்னியுங்கள். கணவன்-மனைவி உறவு என்பது இந்த உலகத்திலேயே ரொம்ப அற்புதமான ஒரு உறவு! அதில் நீயா–நானா என்ற போட்டி இருக்கக் கூடாது.