Home ஜல்சா உஷாரய்யா உஷாரு..

உஷாரய்யா உஷாரு..

29

அந்த இளைஞன் நாகரிக தோற்றத்துடன் பளிச்சென காணப்பட்டான். குறிப்பிட்ட வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான். உள்ளே இருந்து வந்த பெண், கதவைத்திறந்தாள். ‘உங்க கணவர் சவுதிஅரேபியாவில்தானே வேலைபார்க்கிறார்?’ என்று அவன் கேட்டதும், அவள் முகம் மலர்ந்தது.

‘ஆமா’ என்றாள். உடனே அவன், அவளது கணவர் பெயரை சரியாக சொன்னான். அதற்கு மேல் அவனை வெளியே நிற்கவைப்பது மரியாதை இல்லை என்று நினைத்த அவள், ‘உள்ளே வாங்க.. என்ன விஷயம்? என் கணவருக்கு நீங்க நண்பரா?’ என்றுகேட்டாள்.

அவன் கையில் இருந்த பெரிய பையுடன், உள்ளே வந்து அமர்ந்தான். அவள் பருக தண்ணீர் கொடுத்தாள். பையை திறந்தான். உள்ளே மூன்று பொட்டலங்கள் இருந்தன. அதில் பெரிதாக இருந்ததை தூக்கி, தன் முன்னால் இருந்த மேஜையில் வைத்தான். அதில் எழுதியிருந்த விலாசத்தை வாசித்துக்காட்டி, ‘விலாசம் சரிதானே.. அவர் உங்கள் கணவர்தானே?’ என்று மீண்டும் உறுதி செய்துகொண்டான்.

அந்த பொட்டலத்தின் மீதே அவள் கண்கள் பதிந்திருந்தது. ‘நான் பக்கத்து மாநிலத்தை சேர்ந்தவன். எனது தம்பி உங்கள் கணவரோடு வெளிநாட்டில் வேலைபார்க்கிறான். நான் பக்கத்து நகரத்தில் இயங்கும் பள்ளி ஒன்றில் இந்தி கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக வேலைபார்க்கிறேன். என் தம்பி இந்தியாவுக்கு கிளம்பியபோது உங்களுக்கு சர்ப்ரைஸ் பரிசு ஒன்றை தர உங்கள் கணவர் முடிவு செய்து, அதனை வாங்கி என் தம்பியிடம் கொடுத்து அனுப்பியிருக்கிறார். என் தம்பிதான் இதனை கொண்டு வந்து உங்களிடம் நேரடியாகத் தர விரும்பினான். ஆனால் வந்த இடத்தில் அவனுக்கு பெண் பார்க்கும் வேலை ஆரம்பித்துவிட்டதால் அவனால் வர முடியவில்லை. எனக்கு இதனை கொரியரில் அனுப்பித்தந்து, உங்களிடம் கொடுத்துவிடுமாறு சொன்னான். பிடியுங்கள் உங்கள் கணவரின் அன்புப் பரிசை..’ என்று அவள் கைகளில் கொடுத்தான்.

அவள் கணவரின் அன்பை நினைத்து சிலிர்த்துப்போனாள். பரிசுப் பொருளை அப்படியே வாங்கி, அந்த அறையிலே இருந்த சாமி படம் முன்பு கொண்டுபோய் வைத்துவிட்டு, அந்த இளைஞனை உபசரிக்கத் தொடங்கினாள். அவனோ, ‘தம்பி அனுப்பிய மேலும் இரண்டு பொட்டலங்களும் என்னிடம் உள்ளன. அவற்றையும் உரியவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கவேண்டும். எனக்கு நேரமாகிறது நான் உடனே கிளம்பவேண்டும்’ என்றபடி பாக்கெட்டில் இருந்த ஒரு ரசீதை எடுத்து பார்த்துவிட்டு, ‘என் தம்பி அவசர கொரியராக மாநிலம் விட்டு மாநிலம் அனுப்பியதாலும், பரிசு பொருள் கனமானது என்பதாலும் கொரியர் கட்டணம் 1800 ரூபாய் ஆகிவிட்டது. அதை உங்களிடமிருந்து வாங்கிக்கொள்ளும்படி கூறினான்’ என்றான்.

அந்த தொகை அவளுக்கு மலைப்பை ஏற்படுத்தினாலும், என்ன செய்வதென்று தெரியாமல் திணறினாள். அவள் கையில் பணமும் இல்லை. ‘என் கையில் இவ்வளவு பணமில்லை. ஒரு நிமிஷம் இருங்கள். பக்கத்து வீட்டில் வாங்கித்தருகிறேன்’ என்றவள், அவனை வீட்டிலே உட்காரவைத்துவிட்டு வெளியே வந்தாள்.

பத்து நிமிடங்களில் திரும்பியவள், வேகவேகமாக வந்து அவன் உள்ளே இருப்பதை உணர்ந்ததும் வெளியே கதவை பூட்டிவிட்டு, அக்கம்பக்கத்தினரை கூவி அழைத்தாள்.

ஆட்கள் திரண்டு வந்தனர். அவன் அதிர்ந்து போனான். அவன் முன்னிலையிலே பரிசு பொட்டலத்தை திறந்தனர். உள்ளே இரண்டு செங்கல்கள் பழைய துணிகளுக்கு மத்தியில் சுருட்டிவைக்கப்பட்டிருந்தது. அவன் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அந்த பெண் வெளியே சென்றிருந்த நேரத்திற்குள், அவள் வீட்டில் இருந்த சில பொருட்களை சுருட்டி அவன் தனது பைக்குள் வைத்திருந்தான். தர்ம அடி கொடுத்து அவனை விரட்டியிருக்கிறார்கள்.

அந்த பெண் பக்கத்து வீட்டில் போய் பரிசு விவரத்தைக்கூறி கடன் கேட்டபோது, பக்கத்து வீட்டுப்பெண் சந்தேகப்பட்டு, ‘எதுக்கும் உன் கணவரிடம் போன்போட்டு விவரத்தை கேட்டுவிட்டு பணத்தைகொடு’ என்றிருக்கிறார். அதனால் அவள் அங்கிருந்தே கணவருக்கு போன் போட்டு பேச, மோசடி அம்பலமாகிவிட்டது.

வெளிநாட்டில் வேலைபார்ப்பவர்களின் விலாசங்களை தெரிந்துகொண்டு, இப்படி ஒரு ‘திடீர் பரிசு’ மோசடி நடந்துகொண்டிருப்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.