அவள் ஓரளவு வசதிபடைத்த குடும்பத்து பெண். வயது 25. அழகான தோற்றம் கொண்டவள். நன்றாக படித்திருக்கிறாள். அவளுக்கு வரன் தேடிக்கொண்டிருந்தார்கள்.
அவள் ஓரளவு வசதிபடைத்த குடும்பத்து பெண். வயது 25. அழகான தோற்றம் கொண்டவள். நன்றாக படித்திருக்கிறாள். அவளுக்கு வரன் தேடிக்கொண்டிருந்தார்கள்.
அவளது குடும்பத்தினரே இன்ப அதிர்ச்சி அடையும் அளவுக்கு, அவர்கள் சமூகத்தை சேர்ந்த பெரும் செல்வந்தர் குடும்பத்தில் இருந்து அவளை பெண் கேட்டு வந்தார்கள். அந்த இளைஞர் வெளிநாட்டில் படித்தவர். பார்ப்பதற்கு சினிமா நடிகர் போன்றிருந்தார். பழகுவதற்கும் இனிமையானவராகத் தோன்றினார். அந்த இளைஞரை பெண் வீட்டாருக்கு ரொம்பவும் பிடித்துப்போய்விட்டது.
கல்யாண பேச்சுவார்த்தைகளை தொடங்கலாம் என்று பெண் வீட்டார் முடிவு செய்தபோது, அந்த இளைஞனின் தாயார் பணம், நகை, சீர்வரிசை என்று சில கோரிக்கைகளை முன்வைத்தார். மிகுந்த செல்வச் செழிப்பும், அந்தஸ்தும் நிறைந்த மாப்பிள்ளை வீட்டார் அது போன்ற கோரிக்கைகளை முன்வைப்பார்கள் என்று பெண் வீட்டார் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
அவர்கள் வரதட்சணை பற்றி பேசியதும் பெண்ணின் தந்தை சுதாரித்துக்கொண்டு, ‘எங்களுக்கு இருப்பது ஒரே பெண்தான். எங்களது எல்லா சொத்துக்களுக்கும் அவள்தான் வாரிசு. நாம் இரு குடும்பமும் சம்பந்தம் பேசிக்கொண்டிருப்பது இப்போது நமது சமூகத்தை சேர்ந்த பலருக்கும் தெரிந்துவிட்டது. என் கையில் பெருமளவு பணம் இல்லை. இப்போது நீங்கள் கேட்கும் சீர்வரிசைகளுக்காக நான் சொத்துக்களை விற்க ஆரம்பித்தால், நீங்கள் கெடுபிடி செய்து வரதட்சணை கேட்பதுபோல் நினைக்கத் தொடங்கிவிடுவார்களே!’ என்று தனது கருத்தை எடுத்துவைத்தார்.
‘யார் என்ன நினைத்தால் நமக்கென்ன. நாங்கள் வரதட்சணையோடுதான் திருமணம் செய்ய விரும்புகிறோம். உங்களிடம்தான் சொத்துக்கள் இருக்கிறதே. எப்படியாவது பணத்தை புரட்டுங்கள்’ என்று இளைஞனின் தாயார், முகத்தை இறுக்கமாக்கிக்கொண்டு பேசினார்.
மாப்பிள்ளை பையனுக்காக கொடுக்கவேண்டிய விலை உயர்ந்த காருக்காகவும், அள்ளிக்கொடுக்க வேண்டிய நகைகளுக்காகவும், பெண்ணின் தந்தை பணம் புரட்டிக்கொண்டிருக்கும் சூழலில், பெண்ணின் தோழி அவர்களது வீட்டிற்கு வருகை தந்தாள். அவளும் அதே சமூகத்தை சேர்ந்தவள்.
குறிப்பிட்ட அந்த பெரிய குடும்பத்தில் இருந்து தன்னை பெண் கேட்டு வந்ததையும், மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை விஷயத்தில் கெடுபிடி காட்டுவதையும் அவள் தனது தோழியிடம் கவலையோடு சொன்னாள். அப்போதுதான் அந்த தோழிக்கு மூளையில் உறைத்தது.
சற்று குழம்பிப்போன அவள், ‘இதே இளைஞனுக்கு எனது உறவுக்கார பெண்ணை சம்பந்தம் பேசினார்கள். ‘ஒரு காசுகூட நீங்கள் செலவு செய்யவேண்டாம். எங்கள் அந்தஸ்துக்கு தக்கபடி நாங்களே கோடிகளில் செலவு செய்து திருமணத்தை நடத்திக்கொள்கிறோம் என்றல்லவா சொன்னார்கள். ஆனாலும் ஏனோ பெண் வீட்டாருக்கு பிடிக்காததால் மேற்கொண்டு பேசவில்லை. அந்த பேச்சுவார்த்தை முறிந்துவிட்டது. இங்கே நேர்மாறாக நடந்துகொள்கிறார்களே. எனக்கு எதுவும் புரியவில்லைடீ..! நன்றாக யோசித்து திருமணத்திற்கு சம்மதம் சொல்’ என்றாள்.
தோழி சொன்னது, மணப்பெண்ணாகப் போகிறவளை ரொம்பவும் யோசிக்கவைத்தது. மாப்பிள்ளையாகப்போகும் இளைஞனுக்கு மறுநாளே போன் போட்டாள். ‘ஒரு நாள் முழுக்க உங்களோடு இருக்க விரும்புகிறேன். எதிர்காலம் பற்றி நிறைய பேசவேண்டும்’ என்றாள்.
அவரும் சரி என்று கூற, அவர்கள் இருவரும் ஒரே காரில் பயணித்தார்கள். அவர் காரை ஓட்ட, அவள் அருகில் முன் இருக்கையில் அமர்ந்துகொண்டாள். அவரோடு இருக்கும் சில மணி நேரத்தில், அவரை பற்றி முழுமையாக அறிந்துவிடவேண்டும் என்று முடிவு செய்தாள்.
திட்டமிட்டபடி அவள் பேச்சுக்கொடுத்துக்கொண்டே சென்றாள். அவர் சாப்பாட்டை பற்றி ரொம்ப சுவாரஸ்யமாக பேசினார். ஓட்டலில் சாப்பிட உட்கார்ந்தபோது, அவர் சாப்பிட்டதை பார்த்து மிரண்டுபோனாள். கண்டதையும் அளவில்லாமல் தின்று தீர்த்தார்.
புத்தகங்கள் பற்றி பேச்சுவந்ததும், அதில் நிறைய கரைத்துக்குடித்திருப்பதை நிரூபித்தார். மாடர்னாக உடை அணிந்த பெண்களை பார்த்ததும், அவர்களை கண்ட வார்த்தை களால் திட்டி விமர்சித்தார். சினிமாவுக்கு போகலாமா? என்று கேட்டாள். ‘ச்சீ.. அதெல்லாம் எனக்கு பிடிக்காது’ என்றார். ஒருமுறை அவள் துப்பட்டா அவர் மீது பறக்க, முகம் சட்டென்று இறுகி, ஒரு மாதிரியானார்.
அவள் எதிர்கால திட்டம் என்று ஆரம்பித்து, ‘எத்தனை வருடங்கள் கழித்து குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும்? எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம்?’ என்றதும், ‘எனக்கு செக்ஸ் பிடிக்கிறதில்லை.. குழந்தைகள் மீது விருப்பமில்லை.. நான் வித்தியாசமாக வாழ்ந்துக்கிட்டிருக்கிறவன். என் வழியில் யார் குறுக்கிட்டாலும் சும்மா இருக்கமாட்டேன். ‘சோஷியல் ஸ்டேட்டஸ்’க்காக கல்யாணம் பண்ணிக்கலாம்னு அம்மா சொன்னாங்க’ என்றான். அவளுக்கு தூக்கிவாரிப்போட்டது.
வீடு திரும்பியதும் தோழிக்கு போன் போட்டு, ‘யார் செய்த புண்ணியமோ நீ என் வாழ்க்கையை காப்பாற்றிட்டே! அவன் வேறமாதிரியான ஆளுடீ..’ என்றாள்.
தோழி, ‘அவன் அந்த மாதிரிங்கிறது என் உறவுக்கார குடும்பத்துக்கு தெரிஞ்சிட்டதாலதான் கல்யாணம் நின்னுருக்கு. வரதட்சணை வேண்டாம்னு சொன்னால் உங்களுக்கும் சந்தேகம் வந்துடும்னுதான், வரதட்சணை அது இதுன்னு கேட்டு கெடுபிடி பண்ணி இருக்காங்க..’ என்று விளக்கிச்சொன்னாள்.
வசதி படைத்த குடும்பம், ஸ்டைலான தோற்றம், பெரிய படிப்புன்னு நம்பி ஏமாந்திடாதீங்க! அப்படிப்பட்ட ஒருசிலர் பெண்ணிடம் உடல்ரீதியாக வாழ்க்கை நடத்த தகுதியில்லாதவங்களாக இருக்காங்க..!!