பள்ளி இறுதி ஆண்டு படிக்கும்போதே அவர்கள் இருவரும் காதலிக்கத் தொடங்கினார்கள். அவள் செல்வாக்குமிக்க குடும்பத்தின் ஒரே மகள். அவன் நன்றாக படிக்கும் ஏழை மாணவன். இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள்.
‘நம்ம பொண்ணு, நல்லா படிக்கிற அந்த பையனையே சுற்றிசுற்றி வர்றாங்க..! எனக்கு என்னமோ அது நல்லா தெரியலைங்க! பொண்ணுகிட்டே சொல்லிவைங்க..’ என்று கணவரிடம் முறையிட்டாள், மனைவி.
அவர் அதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. ‘நம்ம பொண்ணுக்கு சுட்டுப்போட்டாலும் படிப்பு வரமாட்டேங்குது. அந்த பையனை இவா ஒரு வருஷமா சுற்றி வர்றா! அதுக்கு பின்னாடிதான் ஓரளவு மார்க் வாங்குறாள். பையன்கிட்டே இருந்து பாடத்தையும் கத்துக்கிறாதானே?!’ என்றார், கணவர்.
‘அது சரிதானுங்க. ஆனால் அறியாத வயசு.. வம்புதும்பா ஏதாவது ஆகிடக் கூடாதுபாருங்க..’ என்று, மனைவி பயத்தை வெளிப்படுத்தினாள்.
‘ரொம்ப பயப்படாதே! அந்த பையனோட குடும்பம் நம்ம வீட்ல இருந்து கூப்டுற தூரத்துலதான் இருக்குது. அவன் அப்பா, அம்மா, அண்ணன் எல்லோரும் பயந்தாங்கொள்ளிக! நீ நினைக்கிற மாதிரி நடக்கக் கூடாதது எதுவும் நடந்தா போட்டுத் தள்ளி நம்ம பொண்ணை காப்பாற்றிடலாம்’ என்று மீசையை முறுக்கினார்.
இருவரும் பிளஸ்–டூவில் தேறி, கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்தனர். காதல் தொடர்ந்தது.
அம்மா, மகளிடம் ‘உன் அப்பா பொல்லாதவர். ஒழுங்கா படிக்கிற வேலையை பார். உன்னால அந்த பையன் குடும்பத்திற்கு ஆபத்து வந்துடக் கூடாது’ என்று லேசாக மிரட்டிவைத்தாள்.
அவ்வளவுதான், அடுத்த வாரமே இருவரும் காணாமல் போய்விட்டார்கள். வீட்டில் இருந்து பணம், நகையை எடுத்துக்கொண்டு அவள், அவனோடு கம்பி நீட்டி விட்டாள்.
அவளது அப்பா, தனது ‘படை’ பலம், பண பலம் எல்லாவற்றையும் காட்டி, மகளைத் தேடினார். பதினைந்து நாட்கள் நீடித்த தேடுதல் வேட்டைக்குப் பிறகு இருவரையும் இன்னொரு மாநிலத்தில் கண்டுபிடித்தார். அவனை அங்கேயே தப்பிக்க முடியாத அளவுக்கு ஒருசில பொய் வழக்குகளில் சிக்கவைத்துவிட்டு, மகளை மட்டும் அழைத்துவந்தார்.
விஷயத்தை கேள்விப்பட்டு காதலனின் குடும்பம் கைகளை கட்டிக்கொண்டு, அவர் முன்னால் போய்நின்றது. மன்னிப்பு கேட்டுவிட்டு ‘என் மகனை எங்கேய்யா?’ என்று கதறிக் கொண்டு கேட்டனர்.
‘என் மகளுக்கு எங்க ஜாதியிலே ரொம்ப படிச்ச, செல்வாக்குள்ள மாப்பிள்ளையை பேசி வைச்சிருக்கிறேன். இவளும் படிச்சவ தான்னு கல்யாண அழைப்பிதழ்ல போட பட்டம் வேணும். அதுக்காகத்தான் காலேஜிக்கு அனுப்பி வைக்கிறேன். என் மகள் படிச்சி முடிச்சு, அப்புறமா அவளுக்கு கல்யாணம் முடிஞ்சு, ஒரு குழந்தையும் பெற்ற பிறகுதான் உன் மகன் இந்த ஊருக்கு வரணும். அதுவரை அவனோடு நீங்க எந்த விதத்திலும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. அவனை அந்த மாநிலத்தில போய் பார்க்கிறது பேசுறது எதுவும் என் காதுக்கு வந்தால், உங்க குடும்பத்தையே தரைமட்டம் ஆக்கிடுவேன். இனி 24 மணி நேரமும் உங்க குடும்பம் எங்க ஆட்கள் கண்காணிப்பில்தான் இருக்கும்..’ என்றார்.
இந்த சம்பவம் நடந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டன. அந்த பெண்ணுக்கு வசதியான இடத்தில் திருமணமாகி, குழந்தையும் பிறந்துவிட்டது.
இப்போது அவனது பெற்றோர், அவளது அப்பாவிடம் சென்று ‘என் மகன் தண்டனை காலம் முடிஞ்சு வெளியே வந்திட்டான். எங்களை பார்க்க ஊருக்கு வரலாமான்னு கேட்கிறான். கருணைகாட்டி அனுமதிகொடுங்க..! உங்க பொண்ணு இருக்கிற பக்கம் எட்டிக்கூட பார்க்கமாட்டான்..’ என்றார்கள்.
அவரோ யோசித்துவிட்டு, ‘பொண்ணுங்க மனம் எப்ப மாறும், எப்படி மாறும்னு தெரியாது. அதனால ஒரு வழி சொல்றேன். உங்களுக்கு இங்கே சொந்த வீடு மட்டும்தானே இருக்குது. அதை நானே விலைக்கு வாங்கிட்டு பணத்தை தந்திடுறேன். நீங்க குடும்பத்தோடு அவன் இருக்கிற மாநிலத்துக்கு குடி போயிடுங்க. நீங்க எல்லோரும் ஒண்ணு சேர இது மட்டும்தான் ஒரே வழி..’ என்றிருக்கிறார்.
கலங்கி நிற்கிறது அந்த குடும்பம். பள்ளி– கல்லூரியில் படிக்கும் பசங்களா நீங்க..! காதலின் மறுபக்கம் எப்படி இருக் கிறது என்றஉண்மையை புரிஞ்சுக்குங்க..!