அழகான கழுத்திற்கு ஆதரவாக இருப்பவை அழகான, ஆரோக்கியமான தோள்கள்தான். ஆரோக்கியமான கழுத்துதான் தலைக்கு ஆதரவாக இருக்கிறது. இதுதான் தலையை பேலன்ஸ் செய்ய உதவுகிறது. கழுத்தும் தோள்பட்டையும் ஆரோக்கியமானதாக இருக்கும் பட்சத்தில் நிமிர்ந்து நடந்து அழகை வெளிப்படுத்த முடியும்.
தோள்பட்டையிலோ கழுத்திலோ வலி ஏற்படுமானால் நம்மால் எளிதாக நடமாட முடியாத அளவிற்கு தொந்தரவு ஏற்படும். கணினி முன்பு நீண்ட நேரம் அமர்ந்து இருப்பவர்களுக்கு இந்த வலி இருக்கும். எனவே ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டிருக்காமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.
கழுத்து மசாஜ்
கழுத்து வலியால் அவதிப்படுபவர்கள் சிறிதளவு பாதம் எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்யலாம். முதலில் கழுத்தின் வலது பக்கம் பூசவும், பின்னர் இடதுபக்கம் பூசவும் நன்கு தடவி பின்னர் மெதுவாக கீழே இறக்கவும். மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் வரை இவ்வாறு மசாஜ் செய்யலாம்.
கழுத்து பயிற்சி
கழுத்துப் பகுதியை அசைக்காமல் ஒரே இடத்தில் பார்த்துக்கொண்டிருப்பதுதான் கழுத்து வலிக்கு காரணமாகிறது. எனவே கழுத்துக்கு அவ்வப்போது பயிற்சி அளிக்கவேண்டும். இதனால் கழுத்து வலி ஏற்படாது. கழுத்து அழகாகும்.
தலையை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு திருப்பவும். கழுத்தை பின்புறம் 10 முறையும் முன்புறம் 10 முறையும் சாய்க்கவும்.
தலையை நன்றாக பின்நோக்கி வைத்துக் கொண்டு, வாயை நன்றாகத் திறந்து அசைத்து மூடவும். பிறகு தலையை வலது தோள்பட்டை வரை கொண்டு சென்று மறுபடி இடது தோள்பட்டைக்கு கொண்டு செல்லவும். இது போல் 10 முதல் 20 தடவை செய்யவும்.
தலையை நேராக வைத்துக்கொள்ளவும். நாடியும் நேராக இருக்கவேண்டும். பின்னர் வலப்பக்கமும், இடப்பக்கமும் தலையை திருப்பவும். தோல்பட்டையில் நாடி படவேண்டும். இவ்வாறு பத்துமுறை செய்யவும். இது மாதிரியான பயிற்சிகளை தினசரி ஒருமுறையாவது செய்து வரவேண்டும்.
உறுதியான தோள்கள்
உடலுக்கு தேவையான வடிவத்தை தருபவை தோள்கள்தான். இந்த தோள்களில் வலி ஏற்பட்டால் பெரும்பாலோனோர் பதற்றப்படுகின்றனர். தோல்பட்டை வலிகளை நீக்க நம் கை விரல்களைக் கொண்டே மசாஜ் செய்யலாம். வலது கைவிரல்களைக் கொண்டு இடது தோல்பட்டையை மெதுவாக அழுத்தம் கொடுப்பதன் மூலம் வலிகள் நீங்கும். அதேபோல் இடது கை விரல்களைக் கொண்டு வலது தோள்களில் மெதுவாக அழுத்தம் கொடுப்பதன் மூலம் வலி குறையும்.
தோள்பட்டை பயிற்சி
கையை உயர்த்தி பின்னர் வலது புறமாக மூன்று முறை சுற்றலாம். இதேபோல் இடது புறமாக மூன்றுமுறை சுற்றலாம். இதனால் தசைகள் ரிலாக்ஸ் ஆகும். இந்த பயிற்சியை நின்று கொண்டோ, நடந்து கொண்டோ செய்யலாம். உட்கார்ந்த நிலையிலும் கைகளை மேலே உயர்த்தி பயிற்சி செய்யலாம்.
சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் தோள்பட்டை உறுதியாகும் என்கின்றனர் யோகா ஆசிரியர்கள். சூரிய நமஸ்காரத்தில் கழுத்து, தோள்பட்டை போன்றவைகளுக்கு நன்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் அழகான, ஆரோக்கியமான தோள்களும், கழுத்தும் கிடைக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.