சில பழக்கங்கள்தான் நமக்கு தெரியாமலே நம்மோடு இருந்து நமது குடும்ப வாழ்க்கை என்ற குட்டையை குழப்பிக்கொண்டிருக்கும். அதை கண்டுபிடித்து களைந்தால் வாழ்க்கை இனிக்கும். சின்னச் சின்ன விஷயங்களையும் கண்காணித்து குற்றம் சாட்டும் கணவன்மார்கள் நிறைய உண்டு.
தனது குடும்பத்துக்கு சாதகமான செயல்களுக்கு மனைவியை பாராட்டும் இவர்கள் மற்ற நேரங்களில் அவளை கண்டுகொள்வதே கிடையாது. சிறு தவறு நேர்ந்தாலும் நீ செய்வது எல்லாமே தவறு என்பதுபோல மதிப்பீடு செய்து பழைய பிழைகளையெல்லாம் சொல்லிக் காட்டுவார்கள். இந்த பழக்கத்தை விட்டொழியுங்களேன்! காதலிக்கும் நேரத்தில் ஒருவரது அன்பை மற்றவர் புரிந்து கொள்வதற்காக சோதனை செய்வது வேறு? திருமண உறவுக்குப் பிறகு கோபம் வருகிறதா? என்று சீண்டுவதும், திறமையை சோதிக்கும் வகையில் சந்தேக நோயை வளர்ப்பது, கேள்விக் கணைகளை தொடுப்பது போன்றவை கூடாத பண்புகளாகும்.
சின்னச்சின்ன இன்பங்களையும் சிதறடிக்கும் இது, வாழ்வையே சிறைச்சாலையாக மாற்றிவிடும். கணவன்-மனைவிக்கு இடையே குற்றம் சாட்டும் மனோபாவம் அறவே இருக்கக்கூடாது. ஏனெனில் மனைவிக்கு இருக்கும் ஒரே ஆதரவு கணவன்தான். அப்படி இருக்கும்போது நீங்களே அவரை நோக்கி குற்றச்சாட்டை நீட்டினால் அவள் நிராதரவாக நிற்பது போல உணர்வாள். பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டதுபோல மனம் உடைந்துபோவாள்.
சின்னச் சின்ன சச்சரவுகளில் கூட சிலர் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு திரிவார்கள். எதற்காகவும் பேசிக்கொள்ளாமல் மவுனமாகவே செல்வார்கள். அப்படி ஒருவர் பேச்சுக்கு மற்றவர் பதிலளிக்காமல் மவுனம் காத்தால் அதுவே அவரை அவமதித்தது போலாகிவிடும். பிரச்சினையை மேலும் பெரிதாக்கி பிளவை உருவாக்கிவிடும். சுமுகமான பேச்சு செய்யும் வேலையை மவுனங்கள் சிலநேரம் செய்வதில்லை என்பதே உண்மை.