Home ஆரோக்கியம் உறக்கத்திடை மூச்சுத் திணறல் (Sleep Apnea) நோயைப் பற்றி தெரியுமா?

உறக்கத்திடை மூச்சுத் திணறல் (Sleep Apnea) நோயைப் பற்றி தெரியுமா?

32

நம்மில் சிலருக்குத் தூங்கும்போது மூச்சு தடைப்படுவது உண்டு. அதற்கு உறக்கத்திடை மூச்சுத் திணறல் (Sleep Apnea) என்று பெயர். உடல் பருமன் அதிகம் இருப்பவர்களிடம் இந்த நோய் அதிகம் காணப்படுகிறது. இந்த நோய் இருப்பதே பலருக்குத் தெரிவதில்லை.

நோயின் அறிகுறிகள்

அதிகமாகக் குறட்டை விடுதல்
தூக்கத்தில் மூச்சு நின்று போய் விழித்துக் கொள்ளுதல்
தொடர்ந்து அதிகமாக மூச்சு வாங்குதல்
தூக்கம் அடிக்கடி கலைந்து போதல்
பகலில் தூங்கி வழிதல்
காலையில் தலைவலியோடு எழுதல்
காலை எழும்போது தொண்டை வறட்சி

இதுபோன்ற தொந்தரவுகள் தினமும் காணப்பட்டால் மருத்துவரை நாட வேண்டும். குறிப்பாக, பகலில் தூங்கி வழிதல் அபாயகரமான விளைவுகளைத் தரலாம். வாகனம் ஓட்டும்போதும் வேலையில் கருவிகளை உபயோகிக்கும் போதும் துங்குவது ஆபத்தானது. குறட்டைச் சத்தம் அதிகமாகி மற்றவர் தூக்கத்தையும் கெடுக்கலாம். அப்போது மருத்துவ உதவி பெறுவது அவசியம்.

காரணங்கள்

இந்த வியாதி மூன்று வகைப்படும். இதில் முக்கியவகை தொண்டைப் பகுதியில் அடைப்பு ஏற்பட்டு அதனால் சுவாசம் தடைப்படுவது. இது Obstructive Sleep Apnea என்று அழைக்கப்படும். தொண்டைப் பகுதியில் இருக்கும் தசைகள் தளர்வதால் மூச்சுக்குழாய் அடைபட்டு இது ஏற்படுகிறது. இதனால் ஒரு சில நொடிகளுக்கு சுவாசம் நிற்கிறது. உடனடியாக மூளை செயல்பட்டு இதை நிவர்த்தி செய்ய அதிகமாக மூச்சுவிடத் தூண்டும். இதுபோல ஒரு மணி நேரத்தில் இருபது முதல் முப்பது முறை வரை ஆகலாம்.

இப்படித் தூக்கத்தில் நடப்பதை இவர்கள் அறிவதில்லை. ஆனால் காலையில் எழும்போது நன்கு உறங்கிய உணர்வு இருப்பதில்லை. அதனால் தூங்கி பகலில் வழிவார்கள்.